உலக நாடுகளையே திரும்பி பார்க்க வைத்த கேரளா.. கொரோனா ஒழிப்பில் முன்னோடி மாநிலம்.. பரபர தகவல்கள்
திருவனந்தபுரம்: கொரோனா வைரஸ் ஒழிப்பில் முன்னோடியாக திகழ்ந்து வரும் கேரளாவை உலக நாடுகள் பாராட்டி வருகின்றன.
Recommended Video
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7000-ஐ கடந்துள்ளது. இந்தியாவில் முதலில் கேரள மாணவர்களுக்குத்தான் கொரோனா வைரஸ் பரவியது. பின்னர் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு குணமடைந்தனர். கொரோனா வைரஸ் மற்ற அண்டைய மாநிலங்களில் பரவியதும் தங்கள் மாநில எல்லையை மூடினார் முதல்வர் பினராயி விஜயன்.
எனினும் அங்கு கொரோனாவால் பாதித்தோரின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. அதாவது இந்தியாவில் கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்களில் மகாராஷ்டிராவுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் இருந்தது கேரளா. இதைத் தொடர்ந்து அங்கு செய்யப்பட்ட தடுப்பு நடவடிக்கைகளால் தற்போது 2ஆம் இடத்திலிருந்து 9ஆம் இடத்திற்கு கேரளா சென்றுவிட்டது மிகவும் பாராட்டப்படக் கூடிய விஷயமே.

பினராயி விஜயன்
ஆம் தற்போது இந்தியாவில் கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்களின் பட்டியலில் 364 பாதிப்புகளுடன் கேரளா 9ஆவது இடத்திற்கு சென்றுள்ளது. கடந்த ஜனவரி 30-ஆம் தேதி சீனாவில் இருந்து கேரளா வந்த மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டவுடன் அதன் வீரியத்தையும் தாக்கத்தையும் உணர்ந்த பினராயி விஜயன் அரசு வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை அதிகரித்தது.

அறிகுறிகள்
வைரஸ் பாதித்த பகுதியை மட்டுமல்லாமல் அனைத்து பகுதி மக்களையும் தனிமைப்படுத்தியது. பின்னர் கொரோனா அறிகுறிகள் கொண்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதிலும் உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதலின்படி சளி, காய்ச்சல், இருமல் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று அல்லது இரண்டு அறிகுறிகள் இருந்தாலும் அவர்களை சோதிப்பது என முடிவு செய்து செயல்பட்டது.

ரோபோ
பின்னர் கொரோனா பாதித்த நோயாளிகள் மூலம் மருத்துவர்கள், செவிலியர்களுக்கும் கொரோனா பரவும் வாய்ப்பு அதிகம் உள்ளதால் அவர்களுடன் நேரடி தொடர்பை துண்டிக்கும் வகையில் ரோபோக்களை அறிமுகப்படுத்தி உணவு உள்ளிட்டவற்றை கொடுக்கச் செய்தது. ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டவுடனே ரூ 20 ஆயிரம் கோடி நிவாரண உதவிகளை கேரளா அரசு அறிவித்தது.

சமூக விலகல்
மக்கள் காய்கறிகள் வாங்கக் கூட கூட்டமாக வெளியே செல்லக் கூடாது என்பதற்காக ஸ்விக்கி மூலம் காய்கறிகளை வீடுகளுக்கே கொண்டு வரும் நடவடிக்கையை மாநில அரசு எடுத்தது. அது போல் பணத்தேவைகளுக்காக மக்கள் ஏடிஎம்களில் கூடுவதை தவிர்க்க கேரள அரசு முடிவு செய்தது. அதன்படி என்னதான் ஏடிஎம் காவலாளி மூலம் சானிடைசர் அடித்துவிட்டு உள்ளே செல்லும் நடவடிக்கையை எடுத்தாலும் சமூக விலகலை கண்காணிக்க முடியாது என்பதை அரசு உணர்ந்தது.

கேரளா முதல்வர்
இதனால் கேரளாவில் உள்ள அஞ்சல் துறையுடன் இணைந்து பணத் தேவைப்படுவோருக்கு முன்பதிவிற்கு ஏற்ப அத்துறை ஊழியர்கள் வீட்டுக்கே பணத்தை கொண்டு வந்து கொடுக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வருவது அறவே கட்டுப்படுத்தப்பட்டது. மேலும் கொரோனா கேரளாவில் இரண்டாவது நிலைக்கு வந்த போது கான்டாக்ட் டிரேசிங் முறையை கையிலெடுத்து மேலும் நோய் பரவாமல் தடுத்து பினராயி விஜயன் வெற்றிக் கண்டார். இதனால் வாஷிங்டன் போஸ்ட் உள்ளிட்ட சர்வதேச ஊடகங்களும், உலக நாடுகளும் கேரள முதல்வர் பினராயி விஜயனை பாராட்டி வருகின்றன.












Click it and Unblock the Notifications