கடலில் கொட்டப்பட்ட எரிபொருள்! ஒரு வழியாக தரையிறங்கிய சவுதி விமானம்! திருவனந்தபுரத்தில் எமர்ஜென்சி
திருவனந்தபுரத்தில் அவசரமாகத் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்
திருவனந்தபுரம்: கேரளாவில் இருந்து புறப்பட்ட விமானத்தில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட பிரச்சினையால் நடுவானில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் திருவனந்தபுரம் ஏர்போர்ட்டே திக்திக் என காணப்பட்டது,
இந்தியாவில் விமானத்தில் பயணிப்போரின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. இடையில் ஓரிரு ஆண்டுகள் கொரோனா காரணமாக விமான பயணம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
இப்போது கொரோனா கட்டுக்குள் வந்துவிட்டதால் மீண்டும் விமான பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. மத்திய அரசும் உதய் உள்ளிட்ட திட்டங்கள் மூலம் விமான பயணத்தை ஊக்குவித்தே வருகிறது.

ஏர் இந்தியா
இந்தியாவைப் பொறுத்தவரை இப்போது இண்டிகோ மற்றும் ஏர் இந்தியா நிறுவனங்கள் இடையே தான் வரும் காலங்களில் கடுமையான போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தனை ஆண்டுகள் மத்திய அரசின் கைவசம் இருந்த ஏர் இந்தியா இப்போது டாடா வசம் சென்றுள்ளது. ஏர் விஸ்தாரா, ஏர் ஏசியா இந்தியா நிறுவனங்களில் டாடா முதலீடு செய்துள்ள நிலையில், அவற்றையும் ஏர் இந்தியாவுடன் இணைக்க டாடா முடிவு செய்துள்ளது. மேலும் சமீபத்தில் தான் போயிங் மற்றும் ஏர்பஸ் நிறுவனங்களிடம் இருந்து சுமார் 500 விமானங்களை வாங்கும் ஒப்பந்தத்தில் ஏர் இந்தியா கையெழுத்திட்டது.

கேரளா
இவை எல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் கூட சமீப காலங்களாக அங்கு நடக்கும் சம்பவங்கள் தொடர்ந்து சர்ச்சையைக் கிளப்புவதாகவே உள்ளது. அங்கு விமானங்களில் பயணிகளின் நடத்தை சர்ச்சையாகி வருகிறது. இது ஒறு பக்கம் இருக்க இன்று சுமார் 168 பயணிகளுடன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்படவே அது அவசர அவசரமாகத் திருவனந்தபுரத்தில் தரையிறங்கியுள்ளது.

சவுதி செல்லும் விமானம்
கேரளாவின் கோழிக்கோடு ஏர்போர்டில் இருந்து சவுதியின் தம்மாம் செல்லும் விமானத்தில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. கோழிக்கோட்டில் இருந்து காலை 9.44 மணிக்கு விமானம் புறப்பட்டுள்ளது. விமானம் கிளம்பிய கொஞ்ச நேரத்திலேயே அதில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் விமானத்தைத் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தரையிறக்க முடிவு செய்தனர். 168 பயணிகளை ஏற்றிச் சென்ற ஏர்-இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், இன்று காலை கோழிக்கோட்டில் இருந்து புறப்படும் போது விமானத்தின் வால் பகுதி ஓடுபாதையில் மோதியது.

கடலில் கொட்டப்பட்ட எரிபொருள்
இதனால் அதன் ஹைட்ராலிக் அமைப்பில் கோளாறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து திருவனந்தபுரத்தில் தரையிறக்க முடிவு செய்துள்ளனர். இருப்பினும், விமானம் தரையிறங்கும் போது வெடித்துச் சிதறும் ஆபத்து இருந்ததால்.. அதைக் குறைக்க விமானம் தரையிறங்குவதற்கு முன்பு சுமார் 2 மணி நேரம் அது அப்படியே மேலே பறந்து கொண்டு இருந்தது. இதன் மூலம் அது எரிபொருளை குறைத்துள்ளது. அப்போதும் எதிர்பார்த்த அளவுக்கு எரிபொருளை குறைக்க முடியவில்லை. இதனால், எரிபொருளை அரபிக்கடலில் எரிபொருளைக் கொட்டியுள்ளனர்.

எமெர்ஜென்சி
அதன் பின்னர் குறைந்தபட்ச எரிபொருளுடன் விமானத்தைத் திருவனந்தபுரம் ஏர்போர்டில் பத்திரமாகத் தரையிறக்கியுள்ளனர். விமானம் ஹைட்ராலிக் கோளாறுடன் தரையிறங்கியதால் விமான நிலையத்தில் முழு அவசர நிலை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தச் சம்பவம் குறித்து ஏர் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோழிக்கோடு-தம்மம் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் கோழிக்கோடு விமான நிலையத்தில் இருந்து புறப்படும்போது அதன் வால் கீழே தாக்கியதால் திருவனந்தபுரத்திற்குத் திருப்பி விடப்பட்டது.

ஏர் இந்தியா அறிக்கை
அந்த விமானத்தில் 168 பயணிகள் இருந்தனர் .விமானம் மதியம் 12.15 மணிக்குத் திருவனந்தபுரத்தில் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது. அதில் இருந்த பயணிகள் இறக்கிவிடப்பட்டனர். அவர்கள் தங்கத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. விமான பயணிகளுக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் மாலை 3.30 மணிக்குத் திருவனந்தபுரத்திலிருந்து கிளம்பும் விமானம் மூலம் தம்மாம் செல்கின்றனர்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications