பிரியங்கா காந்தியைவிட பெஸ்ட்.. ம்ஹூம்.. நினைக்கவே முடியவில்லை.. உருகிய 'பாசமலர்' ராகுல் காந்தி
திருவனந்தபுரம்: கேரளா மாநிலம் வயநாடு லோக்சபா தொகுதியில் காங்கிரஸ் பொதுச்செயலாளரும் தமது சகோதரியுமான பிரியங்கா காந்தியைவிட சிறப்பான ஒரு மக்கள் பிரதிநிதியை தம்மால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை என லோக்சபா எதிர்க்கட்சித் தலைவரும் பிரியங்காவின் அண்ணனுமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். வயநாடு லோக்சபா தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் பிரியங்கா காந்தி நாளை வேட்பு மனுத் தாக்கல் செய்கிறார்.
வயநாடு தொகுதி எம்பியாக இருந்த ராகுல் காந்தி, லோக்சபா தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு வென்றார். ஆனால் உ.பி. மாநிலம் ரேபரேலி தொகுதியில் போட்டியிட்டு வென்றதால் வயநாடு எம்பி பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். இதனையடுத்து நவம்பர் 13-ந் தேதி வயநாடு லோக்சபா தொகுதிக்கு இடைத் தேர்தல் நடைபெற உள்ளது.

வயநாடு லோக்சபா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் சிபிஐ, பாஜகவும் களம் காண்பதால் மும்முனைப் போட்டி நிலவுகிறது. வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி நாளை வேட்பு மனுவைத் தாக்கல் செய்கிறார்.
இதற்காக இன்று சகோதரி பிரியங்கா காந்தியுடன் வயநாடு வருகை தந்தார் ராகுல் காந்தி. இது தொடர்பாக தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, வயநாடு தொகுதி மக்களுக்கு என் இதயத்தில் எப்போதும் சிறப்பான இடம் இருக்கிறது. வயநாடு தொகுதி மக்களுக்கான சிறப்பான பிரதிநிதியாக என் சகோதரி பிரியங்கா காந்தியைவிட வேறு ஒருவரை நினைத்துக் கூட பார்க்கவே முடியவில்லை என தெரிவித்துள்ளார். மேலும் வயநாடு தொகுதி மக்களுக்காக நாடாளுமன்றத்தில் பிரியங்கா காந்தி உரத்து குரல் எழுப்புவார் என்றும் ராகுல் காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பிரியங்கா காந்தி நாளை வேட்பு மனுத் தாக்கல் செய்யும் போது தாயார் சோனியா காந்தியும் பங்கேற்க உள்ளார். முன்னதாக வயநாடு தொகுதியில் பிரம்மாண்ட ரோடு ஷோவை சோனியா, பிரியங்கா, ராகுல் காந்தி நடத்த காங்கிரஸ் கட்சியினர் ஏற்பாடுகள் செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications