சூறை.. ராகுல்காந்தியின் அலுவலகத்தை அடித்து நொறுக்கிய எஸ்எப்ஐ! கேரளாவில் பரபரப்பு! போலீஸ் குவிப்பு
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள ராகுல்காந்தியின் அலுவலகம் மீது இன்று எஸ்எப்ஐ அமைப்பை சேர்ந்தவர்கள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தி இருக்கைகளை அடித்து நொறுக்கினர். இதனால் பதற்றம் ஏற்பட்ட நிலையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல்காந்தி. இவர் 2019ல் நடந்த மக்களவை தேர்தலில் உத்தர பிரதேசம் மாநிலம் அமேதி மற்றும் கேரள மாநிலம் வயநாட்டில் போட்டியிட்டார்.
இதில் அமேதி தொகுதியில் ராகுல்காந்தி தோல்வியடைந்தார். வயநாடு தொகுதியில் வெற்றி பெற்று எம்பியாக உள்ளார்.

ராகுல்காந்தி அலுவலகம் மீது தாக்குதல்
இந்நிலையில் வயநாடு தொகுதியில் உள்ள கைநாட்டியில் ராகுல்காந்தியின் அலுவலம் உள்ளது. டெல்லியில் இருந்து தொகுதிக்கு வரும் ராகுல்காந்தி இந்த அலுவலகம் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் இன்று மதியம் அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சியினர் இருந்தனர். அப்போது திடீரென்று மர்மநபர்கள் அலுவலகத்துக்குள் நுழைந்தனர். அவர்கள் அலுவலகத்தை சூறையாடி இருக்கைகளை அடித்து நொறுக்கினர். விசாரணையில் அவர்கள் எஸ்எப்ஐ அமைப்பை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

வெளியான வீடியோ
இதற்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து தாக்குதல் நடத்தியவர்கள் அங்கிருந்து வெளியேறினர். இதற்கிடையே தாக்குதல் நடத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரவி வருகிறது. இதற்கு இதற்கு காங்கிரஸ் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

காங்கிரஸ் கடும் எதிர்ப்பு
மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பான எஸ்எப்ஐ பிரிவினர் தாக்குதல் நடத்தியதாக அவர்கள் குற்றம்சாட்டினர். இதுபற்றி காங்கிரஸ் தலைவரும் எம்எல்ஏவுமான டி சித்திக் கூறுகையில், ‛‛இந்த தாக்குதல் திட்டமிடப்பட்டு எஸ்எப்ஐ குண்டர்கள் மூலம் நடத்தப்பட்டுள்ளது. இவர்கள் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்''என்றார். மேலும் காங்கிரஸ் மூத்த தலைவரும், கேரளாவை சேர்ந்தவருமான கேசி வேணுகோபால் உள்பட பலர் இந்த சம்பவத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தாக்குதல் ஏன்?
அனைத்து பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி, வனவிலங்கு சரணாலயங்கள் மற்றும் தேசிய பூங்காக்களைச் சுற்றி ஒரு கிலோமீட்டருக்கு சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தை (Eco Sensitive Zone) கட்டாயமாக்குவது தொடர்பாக சமீபத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதானால் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி பகுதிகளில் உள்ள ஒரு கிலோமீட்டரில் ஆட்கள் வசிப்பது பற்றி ஆய்வு செய்ய கேரள வனத்துறை குழு ஒன்றை அமைத்துள்ளது. இதனால் மலை மாவட்டமாக உள்ள வயநாடு தொகுதியில் ராகுல்காந்தி எம்பியாக இருந்தாலும் இதுபற்றி அவர் பேசவில்லை. இதனை கண்டித்து தான் எஸ்எப்ஐ சார்பில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

போலீஸ் குவிப்பு
இந்நிலையில் கைநாட்டியில் உள்ள ராகுல்காந்தியின் அலுவலகம் மீதான தாக்குதலால் அங்கு பதற்றம் நிலவியது. இதனால் அசம்பாவித சம்பங்களை தடுக்கும் வகையில் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். இதற்கிடையே சம்பவம் குறித்து போலீசில் புகார் செய்ய காங்கிரஸ் நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications