கேரளா சட்டசபையில் ஷாக்: 61 பக்க உரையை 1.15 நிமிடத்தில் வாசித்துவிட்டு ஆளுநர் வெளியேறியதால் பரபரப்பு!
திருவனந்தபுரம்: கேரளா சட்டசபையில் தமது 61 பக்க உரையை ஆளுநர் ஆரிப் முகமது கான் 1.15 நிமிடத்தில் வாசித்துவிட்டு வெளியேறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடதுசாரிகள் அரசு நடைபெற்று வருகிறது. இந்தியாவில் இடதுசாரிகள் ஆட்சியில் இருக்கும் ஒரே மாநிலம் கேரளா மட்டும்தான்.

கேரளா ஆளுநராக ஆரிப் முகமது கான் பதவியில் இருந்து வருகிறார். கேரளாவின் இடதுசாரி அரசுடன் ஆரிப் முகமது கான் தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார். கேரளா மாநில அரசை மிக மிக கடுமையாக பொதுவெளியில் ஆரிப் முகமது கான் விமர்சித்து வருகிறார். ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கு கேரளா அரசும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.
இந்த நிலையில் 2024-ம் ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத் தொடர் தொடங்கியது. ஆண்டின் முதலாவது சட்டசபை கூட்டத் தொடர் என்பதால் மாநிலங்களின் ஆளுநர்கள் உரையாற்றுவது மரபானது. மாநில அரசின் கொள்கைகளை விவரிக்கும் உரையை ஆளுநர்கள் வாசிப்பர். ஆனால் அண்மைகாலமாக மாநில அரசுகளுடன் மோதல் போக்கை கடைபிடிக்கும் ஆளுநர்கள், மாநில அரசின் கொள்கைகளை அப்படியே வாசிக்காமல் தவிர்ப்பது வழக்கம்.
இதன் உச்சமாக கேரளா சட்டசபையில் நேற்று பெரும் கூத்து நடந்துள்ளது. சட்டசபையில் ஆளுநர் ஆரிப் முகமது கான் உரையாற்ற தொடங்கினார். மொத்தம் 61 பக்க உரையை வாசிக்க தொடங்கிய ஆளுநர் ஆரிப் முகமது கான் 1.15-வது நிமிடத்தில் உரையின் கடைசி பக்கத்தையும் வாசித்துவிட்டு சபையில் இருந்து வெளியேறிவிட்டார். இதனால் கேரளா சட்டசபையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஆளுநர் ஆரிப் முகமது கானின் இந்த செயலுக்கு எதிர்க்கட்சியான காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. சட்டசபை மாண்பை ஆளுநர் ஆரிப் முகமது கான் சீர்குலைத்துவிட்டதாக குற்றம் சாட்டியது காங்கிரஸ். ஆனால் கேரளா சபாநாயகரோ, ஆளுநர் உரையை முழுமையாக வாசிக்க வேண்டும் என்பது கட்டாயம் கிடையாது. அதனால் ஆளுநர் உரையை முழுமையாக வாசித்ததாக ஏற்றுக் கொள்ளலாம் என்றார். ஆரிப் முகமது கான் விவகாரத்தால் கேரளா அரசியலில் அனல் பறக்கிறது.












Click it and Unblock the Notifications