ஆளுநருக்கு எதிராக அவசர சட்டம்.. ஆளுநரிடமே கையெழுத்து கேட்ட கேரள அரசு.. "டைவர்ட்" செய்யும் ஆரிப் கான்
திருவனந்தபுரம்: பல்கலைக்கழகங்களின் வேந்தர் பொறுப்பிலிருந்து ஆளுநரை நீக்கிட அவசர சட்டம் இயற்ற உள்ளதாக கேரளாவின் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் இந்த சட்ட மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்பேன் என அம்மாநில ஆளுநர் ஆரிஃப் முகமதுகான் தெரிவித்துள்ளார்.
மேலும், முதலமைச்சர் பயங்கரவாத மொழியில் பேசுகிறார் என்றும் மிரட்டல்களுக்கு தான் அஞ்சமாட்டேன் எனவும் அவர் கூறியுள்ளார்.

கேரள உயர்நீதிமன்றம்
கேரளாவின் அப்துல்கலாம் தொழில்நுட்ப பல்கலைகழகத்தின் துணை வேந்தர் நியமனம் யுஜிசி விதிகளுக்கு எதிரானது என சமீபத்தில் அந்நியமனத்தை கேரள உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை அடிப்படையாக கொண்டு மீதமுள்ள 11 பல்கலைக்கழக துணை வேந்தர்களுக்கும் விளக்கம் கேட்டு ஆளுநர் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இந்த நோட்டீஸை எதிர்த்து துணை வேந்தர்கள் நீதிமன்றத்தை நாடியிருந்தனர். மனுவை விசாரித்த நீதிபதி தேவன் சந்திரன், விசாரணை முடியும் வரை துணை வேந்தர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று நேற்று ஆளுநருக்கு அறிவுறுத்தியிருந்தார்.

ராஜினாமா
இந்நிலையில் இந்த அறிவுறுத்தல் வந்த சில மணி நேரங்களில் ஆளுநரின் சட்ட ஆலோசகரான ஜாஜு பாபு மற்றும் கேரளாவில் உள்ள ஒட்டு மொத்த பல்கலைக்கழகங்களின் வேந்தரின் நிலையான ஆலோசகரான விஜயலட்சுமி ஆகியோர் ராஜினாமா செய்வதாக ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளனர். இந்த சம்பவம் ஏற்கெனவே பரபரப்பாக இருந்த இந்த ராஜினாமா அம்மாநில அரசியல் சூழலை மேலும் தீவிரமாக்கியுள்ளது. ஏனெனில், பல்கலைக்கழக துணை வேந்தர்களுக்கு எதிராக ஆளுநர் ஆரிஃப் எடுத்த நடவடிக்கைகள் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கில் ஆளுநரின் பிரதிநிதியாக இவர்கள் இருவரும் இருந்து வந்தனர்.

அவசர சட்டம்
இந்த சம்பவம் ஆளுநருக்கு பின்னடைவாக பார்க்கப்பட்ட நிலையில், பல்கலைக்கழகங்களின் வேந்தர் பொறுப்பிலிருந்து ஆளுநரை நீக்கிட அவசர சட்டம் இயற்ற உள்ளதாக ஆளும் சிபிஎம் அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் ஆர்.பிந்து, "இந்த அவசர சட்டத்தின்படி கேரளாவில் உள்ள பல்கலைக்கழகங்களின் ஆளுநராக ஒருவர் இருக்கமாட்டார். மாறாக பல நிபுணர்கள் கொண்ட குழு இருக்கும். இது தற்போதைய நடைமுறையையே மாற்றி அமைக்கும். இந்த திட்டம் உயர்கல்வி துறையில் பாய்ச்சலை ஏற்படுத்தும். இந்த சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளித்து ஆளுநர் தனது கடமையை நிறைவேற்றுவார் என்று நம்புகிறோம்" என கூறியிருந்தார்.

குடியரசுத் தலைவர்
இந்நிலையில் தனியார் செய்தி ஊடகத்திற்கு பேட்டியளித்த ஆளுநர், "இந்த மசோதா என்னை பற்றி இருப்பதால் இதன் மீது நான் முடிவெடுக்க முடியாது. எனவே நான் அதனை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கிறேன்" என்று கூறியுள்ளார். மேலும், "முதலமைச்சர் பயங்கரவாத மொழியில் பேசுகிறார். பல்கலைக்கழக வேந்தரை ஏன் மாற்றுகிறார்கள் என்பதை அரசு வெளிப்படையாக கூற வேண்டும். துணை வேந்தர்கள் நியமனத்தில் தலையிட மாநில அரசு தலையிட அரசுக்கு அதிகாரம் இல்லையென்று ஏற்கெனவே உச்சநீதிமன்றம் கூறிவிட்டது. யுஜிசி விதிமுறைகள் மாநில சட்டத்திற்கு மேலானவை என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். மாநில அரசின் மிரட்டல்களுக்கு நான் அஞ்சமாட்டேன்" என்றும் ஆளுநர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications