வயநாடு நிலச்சரிவு: மீட்பு படை இன்னும் அந்த கிராமத்திற்கே போகல! பாதிப்பு மோசமாகலாம்- கேரள ஆளுநர் பரபர
திருவனந்தபுரம்: கேரளாவில் வரலாறு காணாத மிகப் பெரிய நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கே சுமார் 270க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், இந்த நிலச்சரிவு குறித்து அம்மாநில ஆளுநர் ஆரிப் முகமது சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
அண்டை மாநிலமான கேரளாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சுமார் 270க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

நிலச்சரிவு: இதற்கிடையே இந்த நிலச்சரிவு குறித்து அம்மாநில ஆளுநர் ஆரிப் முகமது சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். அதாவது நிலச்சரிவால் எந்தளவுக்குப் பேரழிவு ஏற்பட்டுள்ளது என்பது இன்னும் தெரியவில்லை என்றும் நிலச்சரிவு முதலில் தாக்கிய பகுதியை இன்னும் கூட மீட்புக் குழுக்கள் கூட அடையவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாகப் பிரபல ஆங்கில செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், "சாலியாறு தனது போக்கை மாற்றியதால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் இருந்தே இப்போது வரை சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.. நிலச்சரிவு காரணமாக இந்த சாலியாறு நதி தனது போக்கை மாற்றி ஒரு கிராமத்தையே ஒட்டுமொத்தமாக நாசமாக்கி இருக்கிறது. அந்த கிராமத்தில் இருந்தே உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
கிராமத்திற்கு இன்னும் செல்ல முடியவில்லை: ஆனால் நிலச்சரிவு முதலில் தாக்கிய கிராமத்தை மீட்பு படை இன்னும் அடையவில்லை. இந்த கிராமத்திற்குச் செல்லும் பாலம் அடித்துச் செல்லப்பட்டதால், இந்த கிராமம் துண்டிக்கப்பட்டுள்ளது. அந்த கிராமத்திற்குச் சென்றடையத் தற்காலிக பாலத்தை நமது ராணுவம் கட்டி வருகிறது. இந்த பாலத்தின் கட்டுமானம் சில மணி நேரத்தில் முடியும். பாலம் கட்டி முடிக்கப்பட்டு ராணுவத்தினர் அந்த பக்கம் செல்லும் வரை பேரழிவு எவ்வளவு மோசம் என்பதைச் சரியாக மதிப்பிட முடியாது.
நிலச்சரிவால் மோசமாகப் பாதிக்கப்பட்ட அந்த கிராமம் தொலைதூர கிராமம் எல்லாம் இல்லை.. மலைப் பகுதியில் இருந்தாலும் அது டவுன் தான். தொலை தூரக் கிராமம் இல்லை இல்லை. 100 ஆண்டுகளாக மக்கள் வாழ்ந்து வந்த பகுதி. அதுதான் நிலச்சரிவால் இப்போது மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது" என்று அவர் தெரிவித்தார்.
எச்சரிக்கை வந்ததா: பேரிடர் ஏற்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பே நிலச்சரிவு ஏற்படலாம் எனக் கேரளாவை மத்திய அரசு எச்சரித்ததாக உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருந்தார். இது தொடர்பான கேள்விக்கு அவர், "இது மக்களின் துயரத்தைப் பகிர்ந்து கொள்ளவும்.. அவர்களுக்கு உதவுவதற்குமான நேரம். அதேநேரம் எச்சரிக்கை கொடுக்கப்பட்டதாக உள்துறை அமைச்சர் கூறினால் அதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. பொதுமக்களைத் தங்க வைக்க முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மீட்கப்படும் அனைவரும் அங்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். கனமழையால் ஆறு அதன் போக்கை மாற்றிக்கொண்டது.. மீண்டும் ஒரு முறை அது தனது போக்கை மாற்றலாம். எனவே, ஆற்றின் அருகே வசிக்கும் அனைவரையும் முகாம்களுக்கு அழைத்துச் சென்றுள்ளோம்.
ராணுவத்திற்கு நன்றி: பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்ற அயராது உழைக்கும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் மருத்துவர்களை நான் இங்கே பாராட்ட விரும்புகிறேன். நமது ராணுவம், கடற்படை மற்றும் விமானப் படை வீரர்கள் ரிஸ்க் எடுத்து இந்த மீட்புப் பணிகளைச் செய்து வருகிறார்கள்" என்றார்.












Click it and Unblock the Notifications