இதுதான்யா இந்தியா! கேரளாவில் இறந்தவரின் உடலுக்கு இந்து முறைப்படி சடங்கு செய்த முஸ்லீம் கவுன்சிலர்
திருவனந்தபுரம்: இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடு. ஆனால் சமீபகால அரசியல் அந்த சூழலை கொஞ்சம் கொஞ்சமாக சிதைத்துக் கொண்டிருக்கிறது. அதிலும் மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த கடந்த 12 ஆண்டுகளில் இந்தியாவில் மத ரீதியாக பல்வேறு மோதல்கள் வெடித்து கொண்டிருப்பதாக புகார் உள்ளது.
பாஜக, ஆர்எஸ்எஸ் இந்துத்துவா அரசியலை முன்னிறுத்தி சிறுபான்மை மக்களுக்கு எதிரான செயல்களில் ஈடுபடுவதாக எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்து வருகிறார்கள். ஆனாலும் அதையும் மீறி ஆங்காங்கே ஒற்றுமையை வலியுறுத்தும் பல சம்பவங்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. முக்கியமாக தமிழ்நாடு, கேரளாவில் இதுபோன்ற சம்பவங்கள் அதிகம் நடைபெறும்.

ஒற்றுமை
கடவுளின் தேசமான கேரளா மாநிலத்தில் ஒற்றுமையை பறைசாற்றும் பல ஆச்சர்ய சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம். அப்படி நடைபெற்ற ஒரு சம்பவம் தான் தற்போது அந்த மாநிலத்தில் பேசு பொருளாகியுள்ளது. கேரள மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டம், கடிஞம்குளம் கிராம பஞ்சாயத்தின் கவுன்சிலராக இருப்பவர் சஃபீர்.
இந்நிலையில் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த ராஹ்கி (வயது 44) என்கிற பெண் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அவர் அங்குள்ள மறுவாழ்வு மையத்தில் புற்று நோய்க்கு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனில்லாமல் ராஹ்கி நேற்று முன்தினம் உயிரிழந்தார். நோயின் தீவிரம் காரணமாக அவர் குடும்பம், முகவரி உள்ளிட்ட அனைத்தையும் மறந்துவிட்டார்.
இந்து முறைப்படி சடங்கு
உயிரிழந்த பிறகு தன்னுடைய உடலை இந்து மத வழக்கப்படி அடக்கம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். இதையடுத்து அவர் உயிரிழந்தது குறித்து மறுவாழ்வு மையத்தில் இருந்து கவுன்சிலர் சஃபீரை அணுகியுள்ளனர். சமூக பணிகளில் நாட்டம் கொண்ட சஃபீர் ராஹ்கியின் உடலை அடக்கம் செய்ய முன் வந்துள்ளார். அவரே இந்து சடங்குகளை கடைபிடித்து ராஹ்கியின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தி அடக்கம் செய்துள்ளார்.
இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வரவேற்பை பெற்று வருகிறது. இதேபோல இந்து மதத்தைச் சேர்ந்தவரின் மற்றொருவரின் உடலுக்கும் சடங்குகள் செய்து அடக்கம் செய்துள்ளார். இறந்தவரின் உறவினர்கள் எதுவும் செய்யாமல் ஒதுங்கவே, சஃபீர் இறந்தவரின் உடலை அடக்கம் செய்துள்ளார். இந்த சம்பவம் கேரளாவில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நம்பிக்கைக்கு மரியாதை
இதுகுறித்து சஃபீர் கூறுகையில், "நான் எப்போதுமே மற்றவர்களின் நம்பிக்கைக்கு மரியாதை மற்றும் முக்கியத்துவம் கொடுப்பேன். அவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பது பற்றி கவலை இல்லை. எங்களின் இமாம் மற்றும் மயான பணியாளர்கள் உதவியுடன் இறந்தவர்களின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினேன்." என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications