யாருக்கு காத்திருக்கோ ரூ.12 கோடி.. கேரளாவில் சூடு பறக்கும் ”விஷூ பம்பர் லாட்டரி” சேல்ஸ்!
திருவனந்தபுரம்: கேரளாவில் தற்போது விஷூ பம்பர் லாட்டரி பரிசுக்கான டிக்கெட் விற்பனை நடந்து வருகிறது. முதல் பரிசு ரூ.12 கோடி கொண்ட இந்த டிக்கெட்டின் விலை ரூ.300 ஆகும். குலுக்கலுக்கு இன்னும் 14 நாட்கள் மட்டுமே இருப்பதால், கோடிகளை தட்டித் தூக்கும் அதிர்ஷ்டசாலி நாமாக இருக்க மாட்டோமோ என்ற ஆர்வத்தில் பலரும் டிக்கெட்டுகளை வாங்கி குவித்து வருகிறார்கள். கோடை விடுமுறை சுற்றுலா சீசன் என்பதால் முன்னெப்போதும் இல்லாத அளவை விட லாட்டரி விற்பனை தீயாய் உள்ளது.
கடவுளின் தேசமான கேரளாவில் அங்குள்ள இயற்கை வளங்கள் சுற்றுலாவிற்கு அடுத்தபடியாக உடனே நினைவுக்கு வருவது லாட்டரிதான். தமிழக எல்லையில் இருந்து கேரளாவிற்கு சென்றுவிட்டோமா என்பதை தெரிய செல்போனில் ரூட் மேப் எல்லாம் போட தேவையில்லை.. சாலையோர கடைகளை பார்த்தாலே தெரிந்துவிடும். ஆம் அந்த அளவிற்கு கேரள பார்டர் தொடங்கியதில் இருந்து முடியும் வரை திரும்பும் திசையெல்லாம் லாட்டரி கடைகளை காண முடியும்.

பம்பர் லாட்டரிகள்
அந்த அளவு கேரளாவில் லாட்டரிகள் பிரபலம். சொல்லப்போனால் அந்த மாநில அரசுக்கு பெருமளவு வருவாய் லாட்டரி விற்பனை மூலமே கிடைக்கிறது. கேரள அரசே லாட்டரி விற்பனை மற்றும் குலுக்கல் நடத்துகிறது. அரசில் லாட்டரிக்கு என்றே தனி துறையும் உள்ளது. அங்கு தினம் தோறும் லாட்டரி குலுக்கல் நடைபெறுகிறது. தற்போது தினசரி லாட்டரி டிக்கெட் விலை உயர்த்தப்படுள்ளது. ஒரு டிக்கெட்டின் விலை ரூ.40-ல் இருந்து 50 ஆக உயர்ந்துள்ளது.
பரிசுத்தொகையும் ரூ.1 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதுபோக ஆண்டுக்கு 6 பம்பர் லாட்டரிகளும் உண்டு. இந்த பம்பர் லாட்டரிகளின் ஸ்பெஷல் என்னவென்றால், இதற்கு பல கோடி ரூபாய் பரிசுத்தொகை கிடைக்கும். அதிகபட்சமாக ஓணம் பம்பர் லாட்டரியில் முதல் பரிசு ரூ.25 கோடியாகும். இந்த லாட்டரியில் முதல் பரிசு அடித்தவர்கள் எல்லாம் பல கோடிகளுக்கு அதிபதியாக வாழ்க்கையே மாறிவிடும் நிகழ்வுகள் நடக்கின்றன.
முதல் பரிசு ரூ.12 கோடி

கேரள மாநில லாட்டரிகளை வெளி மாநிலத்தவர்கள் அங்கு சென்று வாங்கினால் பரிசுத்தொகை அளிக்கப்படுகிறது. இதனால், சுற்றுலா, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக செல்லும் தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநில மக்களும் சிலர் லாட்டரிகளை வாங்குகிறார்கள். இப்படி வாங்குபவர்கள் சிலருக்கும் பரிசுத்தொகையும் அடித்து விடுகிறது.
பலருக்கு பரிசு அடிக்காமல் ஏமாற்றமே மிஞ்சும் என்பதே எதார்த்தம் என்றாலும் ஒரு சிலருக்கு பரிசுத்தொகையும் விழுந்துவிடுவதால், நமக்கும் அதிர்ஷ்டம் அடித்துவிடாதா? என பலரும் லாட்டரிகளை வாங்குகிறார்கள். இப்படியாக கேரள அரசுக்கு வருவாய் கொட்டுகிறது. தற்போது விஷு பம்பர் லாட்டரி டிக்கெட் குலுக்கல் நடைபெற்று வருகிறது. இந்த டிக்கெட்டின் விலை ரூ.300 ஆகும். முதல் பரிசு ரூ.12 கோடி.
குலுக்கல் எப்போது?
தற்போது கோடை விடுமுறை சுற்றுலா சீசன் என்பதால் முன்னெப்போதும் இல்லாத அளவை விட லாட்டரி விற்பனை தீயாய் உள்ளது. சூடு பறக்க லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை நடைபெற்று வருவதால் கேரள லாட்டரி வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த டிக்கெட்டிற்கான குலுக்கல் வரும் 28 ஆம் தேதி நடைபெறுகிறது. இன்னும் சரியாக இரண்டு வாரமே பாக்கியுள்ளதால் பாக்கியசாலி நாமாக இருந்துவிட மாட்டோமா என்ற ஆர்வத்தில் லாட்டரி பிரியர்கள் ஆர்வத்துடன் வாங்கி வருகிறார்கள்.
சில கேரள சேட்டன்கள் ஒன்றிற்கும் மேற்பட்ட லாட்டரிகளையும் வாங்கி வைத்து பூஜை போட்டுக்கொண்டு இருக்கிறார்களாம். இன்னும் 14 நாட்களில் குலுக்கல் நடைபெற உள்ள நிலையில், விற்பனையில் வழக்கம் போல பாலக்காடுதான் டாப்பில் உள்ளது. கடந்த சம்மர் பம்பர் குலுக்கலும் பாலக்காட்டில் விற்பனை செய்யபட்ட லாட்டரிக்குத்தான் விழுந்தது. இதனால், லாட்டரி பிரியர்கள் பாலக்காடுக்கு படையெடுப்பதாக தெரிகிறது.
சூடு பிடிக்கும் விற்பனை
லாட்டரி விற்பனையில் இரண்டாவது இடத்தில் திருவனந்தபுரமும் மூன்றாவது இடத்தில் திரிசூரும் உள்ளது. 12 கோடியை வென்று கோடிகளுக்கு அதிபதியாக போகும் அதிர்ஷ்டசாலி யாரோ என்ற ஆர்வத்தில் 28 ஆம் தேதியை கேரள லாட்டரி பிரியர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து இருக்கிறார்களாம். நாட்கள் நெருங்க நெருங்க டிக்கெட் விற்பனையும் சூடுபிடித்து வருவது லாட்டரி வியாபாரிகளுக்கும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளதாம். கேரள லாட்டரிகளை வெளி மாநிலத்தில் அதாவது லாட்டரிக்கு அனுமதி இல்லாத ஊரில் விற்பனை செய்வது சட்ட விரோதம் ஆகும்.












Click it and Unblock the Notifications