கேரளா: கிறிஸ்தவர் வாக்குகளை மொத்தமாக அள்ளுமா பாஜக? "கோட்டை"யையே இழக்குதா காங்கிரஸ்? கள நிலவரம் என்ன?
திருவனந்தபுரம்: கேரளா லோக்சபா தேர்தலில் கிறிஸ்தவர்கள் வாக்குகள் பாஜக பக்கம் திரும்புமா? காங்கிரஸ் கட்சி தமது பாரம்பரிய வாக்கு வங்கியை இழக்கப் போகிறதா? என்பது விவாதப் பொருளாகி இருக்கிறது.
கேரளாவின் 20 லோக்சபா தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நாளை வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. கேரளாவைப் பொறுத்தவரையில் நாயர்கள், ஈழவர்கள் ஆகிய ஜாதிய வாக்குகளும் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் ஆகிய மதம் சார் வாக்குகளும் தீர்மானிக்கும் சக்திகளாக இருந்து வருகின்றன.

2019-ம் ஆண்டு தேர்தல்: கேரளாவில் 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி 47.48% வாக்குகளையும் இடதுசாரிகள் அணி 36.29% வாக்குகளையும் பெற்றது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 15.64% வாக்குகளைப் பெற்று கேரளாவில் தமது செல்வாக்கை வெளிப்படுத்தியது. கேரளாவில் 2014-ம் ஆண்டு தேர்தலை விட 2.67% வாக்குகளைக் கூடுதலாக பெற்றது பாஜக.
கேரளா களம்: கேரளாவில் எப்போதும் காங்கிரஸ், இடதுசாரிகள் கூட்டணிகளுக்கு இடையேதான் இரு முனைப் போட்டி நிலவியது. ஆனால் பாஜக காலூன்றி வருவதால் இம்முறை பல தொகுதிகளில் மும்முனைப் போட்டி கடுமையானதாகவும் இருக்கிறது. கேரளா தேர்தல்களில் நாயர்கள், ஈழவர்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் வாக்குகள் பிரதான தீர்மானிக்கும் சக்திகளாகவும் இருக்கின்றன. கேரளாவில் நாயர்கள் 14%; ஈழவர்கள் 29% உள்ளனர். முஸ்லிம்கள் 26.56%; கிறிஸ்தவர்கள் 18.38% உள்ளனர்.
ஈழவர்கள்: கேரளாவில் ஈழவர்கள்தான் இடதுசாரிகளின் பாரம்பரி வாக்கு வங்கியாக இருப்பவர்கள். இடதுசாரிகளின் இந்த கோட்டையை உடைத்தாக வேண்டும் என 2015-ம் ஆண்டு முதலே பெரும் முயற்சிகளை பாஜக முன்னெடுத்து வருகிறது. இதற்காக பாஜக ஆதரவுடன் பிடிஜேஎஸ் கட்சியே உருவாக்கப்பட்டது. இப்போதும் பாஜகவின் கைகளில்தான் பிடிஜேஎஸ் கட்சி இருக்கிறது. ஆனால் பாஜகவுக்கு ஈழவர் வாக்குகள் இந்த 10 ஆண்டுகளாக முழுமையாக எந்த தேர்தலிலும் சென்று சேரவில்லை. இந்த தேர்தலிலும் அதே நிலைமைதான் இருக்கும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
நாயர்கள்: கேரளாவில் ஆதிக்க ஜாதியாக நாயர்கள் இருக்கின்றனர். அரசியல், அரசு பதவிகளில் நாயர்கள் கை ஓங்கிதான் இருக்கிறது. முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அரசிலும் 7 நாயர்கள் அமைச்சர்கள். திருவனந்தபுரம், பத்தனம்திட்டா, கொல்லம் என பல பகுதிகளில் நாயர்கள்தான் தீர்மானிக்கும் சக்திகள். ஈழவர்கள், நாயர்கள் போல தலித்துகளும் கணிசமான தீர்மானிக்கும் வாக்காளர்களாக உள்ளனர்.
முஸ்லிம் வாக்குகள்: இந்துக்களின் ஈழவர்கள், நாயர்கள், தலித்துகளைத் தாண்டி கேரளாவில் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் வாக்குகள் மிக முக்கியமானவை எப்போதும் இருந்து வருகிறது. கேரளாவின் வடக்கு பகுதியில் முஸ்லிம்கள் தீர்மானிக்கும் வாக்காளர்களாக இருக்கின்றனர். கேரளா முஸ்லிம் வாக்காளர்கள் பொதுவாக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பக்கம்தான். காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில்தான் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இருக்கிறது. இது காங்கிரஸுக்கு ஆகப் பெரும் பலமாக இருந்து வருகிறது. மலப்புரம், கோழிக்கோடு, வடகரா, கண்ணூர், பொன்னானி, காசர்கோடு என பல பகுதிகளில் வெற்றியைத் தீர்மானிக்கும் சக்திகள் முஸ்லிம்களே. இதனால் சிஏஏ விவகாரத்தில் ஆளும் இடதுசாரிகள் மிக மூர்க்கமாக பாஜகவையும் காங்கிரஸையும் ஒரு சேர விமர்சிக்கின்றனர். காங்கிரஸுக்கு முஸ்லிம்கள் வாக்குகள் செல்வதைத் தடுத்து தங்களுக்கு மடை மாற்ற இடதுசாரிகள் முயற்சிக்கின்றனர்.
கிறிஸ்தவர் வாக்குகள்: இதேபோல மத்திய கேரளா பகுதிகளில் கிறிஸ்தவர்கள் தீர்மானிக்கும் சக்திகளாக இருக்கின்றனர். காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியின் பாரம்பரிய வாக்கு வங்கியாக எப்போதும் கிறிஸ்தவர்கள்தான் இருந்து வருகின்றனர். கிறிஸ்தவர்களின் பிரச்சனைகளை அரசாங்கத்துடன் பேசி தீர்ப்பதற்கு ஏகே ஆண்டனி போன்ற முதுபெரும் தலைவர்கள் காங்கிரஸ் பக்கம் இருந்து வந்தனர். கேரளா தேர்தல்களில் கிறிஸ்தவர்களின் வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் காங்கிரஸுக்கு கொண்டு சேர்ப்பதில் ஏகே ஆண்டனி போன்ற தலைவர்கள் முக்கிய பங்கு வகித்தனர். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக கேரளாவில் மட்டும் கிறிஸ்தவர்களுடன் இணக்கமான போக்கை பாஜக கையாண்டு வருகிறது. கேரளா உள்ளாட்சித் தேர்தலில் 500க்கும் அதிகமான கிறிஸ்தவர்களை வேட்பாளர்களாகவே அறிவித்தது பாஜக. கிறிஸ்தவர்களின் கத்தோலிக்க திருச்சபை நிர்வாக பிரச்சனை மிக முக்கியமானது. இதில் பாஜகவும் மத்திய அரசும் நேரடியாகவே தலையிட்டு பேச்சுவார்த்தைகளை நடத்தியது. இதனால் கேரளாவின் கிறிஸ்தவர் வாக்குகள் மெல்ல மெல்ல பாஜக பக்கம் சாய்வது உறுதியாகி வந்தது. ஆனால் மணிப்பூர் வன்முறைகள், கேரளா கிறிஸ்தவர்களை பெரும் கொந்தளிப்புக்குள்ளாக்கியது. பாஜகவுக்கு எதிராக கேரளா கிறிஸ்தவர்கள் வீதிகளில் இறங்கி போராடினர். ஆனாலும் கிறிஸ்தவர்களிடையேயான ஆளுமை மிக்க தலைவர்கள் இல்லாமல் இருப்பது, காங்கிரஸில் ஏகே ஆண்டனி போன்ற தலைவர்கள் தீவிர அரசியலில் இல்லாமல் இருப்பது ஆகியவற்றை எல்லாம் பாஜக தமக்கு மிகவும் சாதகமான அம்சமாக கையில் எடுத்துக் கொண்டு களமாடுகிறது. பாஜகவின் இந்த முயற்சிகளுக்கு பலன் கிடைக்குமா? என்பது ஜூன் 4-ந் தேதி தெரிய வரும்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications