நிமிஷா பிரியா விவகாரத்தில் பின்னடைவு! கடும் கோபத்தில் மஹ்தி சகோதரர்! ஏமனில் இருந்து வந்த புதிய தகவல்
திருவனந்தபுரம்: கேரள செவிலியர் நிமிஷா பிரியாவை ஏமன் நாட்டில் இருந்து மீட்டு வரப் பல்வேறு முயற்சிகள் நடந்து வருகிறது. பல தரப்பினரும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்த முயன்று வருகிறார்கள். இதற்கிடையே நிமிஷா பிரியாவை காப்பாற்றி வரும் முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக இந்த விவகாரத்தில் நீண்ட காலமாக முயற்சி எடுத்து வரும் சமூக சேவகர் சாமுவேல் ஜெரோம் தெரிவித்துள்ளார்.
ஏமன் நாட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கேரள நர்ஸ் நிமிஷா பிரியா மரண தண்டனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதே தவிர நிரந்தரமாக இல்லை. அவரை தாயகம் அழைத்து வர பலரும் முயன்று வரும் நிலையில், திடீரென நேற்றைய தினம் கொல்லப்பட்ட மஹ்தியின் சகோதரர் நிமிஷாவுக்கு மன்னிப்பே இல்லை என்பது போலப் பேசியிருந்தார்.

ஏமனில் இருந்து வந்த தகவல்
இதனால் நிமிஷா பிரியா குடும்பத்தினர் வேதனை அடைந்தனர். இதில் என்ன சிக்கல்.. பாதிக்கப்பட்ட நபரின் குடும்பத்தினர் இந்தளவுக்குக் கோபமடைய என்ன காரணம் என்பது குறித்த தகவல்களைச் செவிலியரான நிமிஷா பிரியாவை தாயகம் அழைத்து வர ஏமனில் இருந்து போராடி வரும் சமூக சேவகர் சாமுவேல் ஜெரோம் பிரபல ஆங்கில டிவி சேனலுக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்துள்ளார்.
கடும் கோபம்
மஹ்தியின் குடும்பத்தினர் நீதியை விடப் பணத்திற்குத் தான் முக்கியத்துவம் தருகிறார்கள் என்பது போல வெளியாகும் செய்திகளால் கோபமடைந்ததாகத் தெரிவித்தார். இருப்பினும், மஹ்தியின் குடும்பத்துடன் உறவைச் சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அவர் கூறினார். மஹ்தியின் குடும்பத்திற்கு 1 மில்லியன் டாலர் "ரத்தப் பணம்" வழங்கப்படும் என்றும் அதன் பின்னர் அவர்கள் நிமிஷா பிரியாவை மன்னித்து, மரண தண்டனையை நீக்குவார்கள் என்றும் சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்தது. இந்தச் செய்திகள் மஹ்தியின் குடும்பத்தினரைக் கோபமடையச் செய்துள்ளதாக ஜெரோம் தெரிவித்தார்.
ரத்த பணம் விஷயமே இல்லை
இது குறித்து ஜெரோம் கூறுகையில், "இது பணத்தைப் பற்றியது அல்ல. பணம் சம்பந்தமாக எந்தவொரு ஒப்பந்தமும் இல்லை. அப்தெல்ஃபத்தா மஹ்தியின் (கொல்லப்பட்ட மஹ்தியின் சகோதரர்) இடத்தில் நாம் இந்த விஷயத்தைப் பார்க்கவில்லை என்றால், மன்னிப்பு கேட்க முடியாது... நாம் மன்னிப்பு பெறவும் முடியாது. ரத்தப் பணம்' என்ற வார்த்தையே மிகவும் தவறானது. நான் இப்போது திடீரென ஏன் இதைச் சொல்கிறேன் என நீங்கள் கேட்கலாம்.
மன்னிப்பு கோருகிறோம்
ஏனெனில் இந்தியாவில் சிலர் ரத்தப் பணம் குறித்து பேரங்கள் நடப்பதாகத் தொடர்ந்து கூறி வருகின்றனர். ஒன்று சொல்லிக் கொள்கிறேன், அந்த வார்த்தையே மிகவும் தவறானது. நான் அவரது (மஹ்தி) சகோதரரை இரண்டு முறையும், தந்தையை ஒரு முறையும் சந்தித்தேன். அவர்களிடம் கருணை காட்டும்படி கெஞ்சினேன். அவ்வளவு தான் எங்களால் பேச முடியும். நான் அங்குச் சென்று 'எவ்வளவு பணம் வேண்டும்?' என்று கேட்க முடியாது. இதுபோன்ற செய்திகள் வருத்தமளிக்கிறது.. இந்தியாவில் உள்ளவர்கள் இது குறித்து எப்படி நினைக்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை.
கடந்த எட்டு வருடங்களாகப் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்துடன் கொஞ்சம் கொஞ்சமாக உறவைக் கட்டமைத்தேன். மெதுவாகவும், சீராகவும் உறவை ஏற்படுத்தினேன். ஒவ்வொரு நீதிமன்ற விசாரணைக்கும் நான் சென்று, அவரிடம் (சகோதரரிடம்) பேசுவேன். கைகுலுக்கிக் கொஞ்ச நேரம் பேசுவேன். இப்படித் தான் உறவை ஏற்படுத்தினேன். நம்பிக்கையைக் கொண்டு வந்தேன்.
பின்னடைவு
துரதிர்ஷ்டவசமாகக் கடந்த சில நாட்களாக ஊடகங்களில் வரும் சில செய்திகளால் அவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். மன்னிக்கவே முடியாது என்பது போல அவரது சகோதரர் கூறியிருக்கிறார். இது பின்னடைவை ஏற்படுத்தியது. நமக்கு இப்போது அதிக நேரம் இல்லை. மீண்டும் உறவுகளை மேம்படுத்த வேண்டும்... ஆனால் அதற்கு எவ்வளவு நேரம் இருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. எல்லோரும் இப்போது மிகவும் கோபமாக இருக்கிறார்கள்... சூழ்நிலை அமைதியாக வேண்டும்" என்றார்.












Click it and Unblock the Notifications