கேரளாவில் சர்ச்சையை கிளப்பும்..'தி கேரளா ஸ்டோரி படம்' தடை தேவையில்லை.. ஆனால்.. சசி தரூர் ட்வீட்
திருவனந்தபுரம்: 'தி கேரளா ஸ்டோரி ' படத்தின் டிரெயிலர் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தெரிவித்துள்ளன. இந்த நிலையில், படத்துக்கு தடை தேவையில்லை என்று சசி தரூர் கூறியிருக்கிறார்.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பிரபல இயக்குநர் சுதிப்தோ சென் இயக்கியுள்ள 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் தற்போது கேரளாவில் சர்ச்சையில் சிக்கி உள்ளது. கேரளாவில் 32 ஆயிரம் பெண்கள் வெளிநாடு அழைத்து செல்லப்பட்டு இஸ்லாம் மதத்துக்கு மாற்றப்பட்டு பயங்கரவாத அமைப்பில் இணைக்கப்பட்டதாக அந்த படத்தின் டிரெய்லரில் வெளியாகியுள்ள காட்சிகள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அடா சர்மா, சித்னி இட்னானி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த திரைப்படத்தில் கல்லூரி விடுதியில் தங்கியிருக்கும் தோழிகளை சக முஸ்லிம் பெண் ஒருவர் மூளைச் சலவை செய்து முஸ்லிமாக மதமாற்றம் செய்வதாகவும், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்காக சிரியா போன்ற நாடுகளுக்கு கடத்தப்படுவதாகவும் டிரெய்லரில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது.
வருகிற 5-ந் தேதி இந்த படம் வெளியாக இருக்கும் நிலையில் படத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது கேரளாவில் ஆளும் கம்யூனிஸ்டுகளும், எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியும் கடுமையாக எதிர்த்துள்ளன. கேரள முதல்வர் பினராயி விஜயன் இந்த படத்தை கடுமையாக சாடி தனது பேஸ்புக்கில் பதிவிட்டு இருந்தார்.
அதில், மதசார்பின்மையை அடிப்படையாக கொண்ட கேரளாவை மத தீவிரவாதத்தின் மையமாக நிலை நிறுத்தி கொள்ளும் வகையில் சங்க்பரிவார் பிரசாரமாக இந்த படம் உள்ளது எனவும் அனைத்தும் பொய்யான தகவல் என்றும் சாடியிருந்தார்.

அதேபோல், கேரள காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அம்மாநில எதிர்க்கட்சி தலைவருமான விடி சதீஷன், " கேரள ஸ்டோரி படத்திற்கு அனுமதி கொடுக்கக் கூடாது. 32 ஆயிரம் பெண்களை இஸ்லாமிய மதத்திற்கு மாற்றியதாக இந்த படம் தவறுதலாக சித்தரித்து கூறுகிறது. படம் என்ன சொல்ல வருகிறது என்பதை தெளிவாக டிரெய்லர் காட்டுகிறது. எனவே படத்தை திரையிட அனுமதிக்கக் கூடாது" என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், திருவனந்தபுரம் எம்.பியும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சசி தரூர் படத்தை தடை செய்ய நான் கோரவில்லை என்று கூறியிருக்கிறார். இதுதொடர்பாக சசி தரூர் தனது ட்விட்டரில் கூறியிருப்பதாவது:- நான் இந்த படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று நான் கூறவில்லை என்பதை அழுத்தி கூறுகிறேன்.
தவறாக பயன்படுத்தப்பட்டு விடும் என்பதற்காக கருத்து சுதந்திரத்தை நிறுத்திவிட முடியாது. அதேவேளையில், இந்த படம் உண்மைக்கு புறம்பாக சித்தரிக்கப்பட்டுள்ளது என தெளிவாகவும் உரக்கவும் சொல்ல கேரள மக்களுக்கு அனைத்து உரிமையும் உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, கேரள ஸ்டோரி படத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி வருவதால் இந்த படம் திட்டமிட்டபடி வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. எனினும் இது குறித்து கேரள திரையரங்க உரிமையாளர்கள் கூறும் போது, படத்திற்கு தடை விதிப்பதால் எந்த பயனும் இல்லை. எப்படி இருந்தாலும் ஓடிடியில் படம் வெளியாகும் போது படத்தை பார்ப்பார்கள்" என்றனர்.












Click it and Unblock the Notifications