ரோட்டில் மல்லுக்கட்டிய மத்திய அமைச்சர் சுரேஷ் கோபியின் மகன் மாதவ்! காங்கிரஸ்காரருடன் கடும் மோதல்
திருவனந்தபுரம்: கேரளாவில் நள்ளிரவில் ரோட்டில் இறங்கி மத்திய அமைச்சர் சுரேஷ் கோபியின் மகன் மாதவ் சுரேஷ், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருடன் மல்லுக்கட்டினார். இதையடுத்து போலீசார் வந்து 2 பேரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கேரளாவை சேர்ந்த நடிகரான சுரேஷ் கோபி பாஜகவில் சேர்ந்து செயல்பட்டு வந்தார். கடந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் திருச்சூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

தற்போது பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் மத்திய இணையமைச்சராக சுரேஷ் கோபி செயல்பட்டு வருகிறார். அவர் பெட்ரோல் மற்றும் இயற்கை எரிவாயு துறையை நிர்வகித்து வருகிறார்.
சுரேஷ் கோபியின் மகன் பெயர் மாதவ் சுரேஷ். இவரும் நடிகர் தான். நேற்று முன்தினம் இரவில் மாதவ் சுரேஷ் தனது காரில் திருவனந்தபுரம் சாஸ்தாமங்கலத்தில் இருந்து வெள்ளயம்பலம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வினோத் கிருஷ்ணா காரில் வந்தார்.
ஒரு திருப்பத்தில் கார்கள் திரும்புவதற்கு போதுமான அளவுக்கு இடம் கிடைக்கவில்லை. இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. காரை விட்டு இறங்கிய மாதவ் சுரேஷ், வினோத் கிருஷ்ணாவின் காரின் முன்பு சென்று வாக்குவாதம் செய்தார். காரின் முன்பகுதியை தட்டி அதட்டினார். அவர் குடிபோதையில் இருப்பதாக நினைத்த வினோத் கிருஷ்ணா உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
போலீசார் விரைந்து சென்று மாதவ் சுரேஷ் மற்றும் வினோத் கிருஷ்ணாவை போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். அங்கு மாதவ் சுரேஷ் மதுபானம் குடித்துள்ளாரா? என்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவர் மதுபானம் குடிக்காதது தெரியவந்தது. இதையடுத்து இருவரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மாறி மாறி அவர்கள் குற்றம்சாட்டினர்.
இதையடுத்து போலீசார் சமாதானம் செய்தனர். மேலும் இருவரும் போலீசில் புகார் செய்ய விரும்பவில்லை. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் திருப்பி அனுப்பினர். இதுபற்றி மாதவ் சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,‛‛ வினோத் கிருஷ்ணா மீது புகார் அளிக்கவில்லை. இருவரும் தாங்கள் செய்த தவறை உணர்ந்து கொண்டோம்'' என தெரிவித்து உள்ளார்.


Click it and Unblock the Notifications
