கேரள நிலச்சரிவு! அடித்து செல்லப்பட்ட ஒரே பாலம்.. கிராமங்களுக்கு மீட்பு படையினர் சென்றடைவதில் சிக்கல்
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் வயநாட்டில் திடீரென இன்று அதிகாலை நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில், இதில் 19க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், பலர் இந்த நிலச்சரிவில் சிக்கியிருக்கிறார்கள். மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், அங்குள்ள முக்கியமான பாலம் இந்த நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட இடத்திற்கு மீட்புப் படையினரால் சென்றடைய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
கேரளாவின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. இதற்கிடையே அங்கு வயநாட்டில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் பலர் சிக்கியுள்ளனர்.

இந்த மோசமான சம்பவத்தில் இதுவரை 19க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அங்கே பலர் சிக்கியிருப்பதாகக் கூறப்படும் நிலையில், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.
பாலம்: இருப்பினும், மீட்புப் பணிகளில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. நிலச்சரிவு ஏற்பட்ட சூரல் மாலா நகரில் இருந்த பாலம் இடிந்துள்ளது. முண்டக்காய் பகுதியில் உள்ள நிலச்சரிவு ஏற்பட்ட அட்டமலைக்கு செல்லும் ஒரே பாதையாக இந்த பாலம் இருந்தது. இப்போது நிலச்சரிவு காரணமாக இந்த பாலம் மொத்தமாக இடிந்து விழுந்ததால் மீட்புப் பணிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
செய்தியாளர்கள், பொதுமக்கள் மட்டுமின்றி மீட்புப் படையினரும் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிக்குச் செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. பாலம் இடிந்துள்ளதால் தற்போது ஹெலிகாப்டர் மூலமாக மட்டுமே பாதிக்கப்பட்ட இடத்திற்குச் செல்லும் சூழல் உருவாகி உள்ளது. இதனால் மீட்புப் பணிகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பல கிராமங்கள்: இந்த நிலச்சரிவில் பலர் காயமடைந்துள்ளனர். மேலும் அங்குள்ள பல வாகனங்கள் நிலச்சரிவில் மூழ்கியுள்ளன. அங்கு ஒன்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் இந்த நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், அப்பகுதியில் மின்சாரம் முழுமையாகத் துண்டிக்கப்பட்டுள்ளதால் பாதிப்புகள் எந்தளவுக்கு மோசமாக இருக்கிறது என்பது துல்லியமாகத் தெரியவில்லை.
அங்கே பாதிப்புகள் மிக மோசமாக இருக்கும் நிலையில், மீட்புப் பணிகளுக்காக ராணுவத்தின் உதவியைக் கேரள அரசு நாடியுள்ளது.. மேலும் வெலிங்டனில் இருந்து ராணுவமும் மீட்புப் பணிகளில் ஈடுபட வயநாட்டிற்கு விரைந்துள்ளன.. நிலச்சரிவைத் தொடர்ந்து வயநாடு மாவட்ட ஆட்சியர், போலீதார், கல்பெட்டா எம்எல்ஏ சித்திக் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். அங்கே அவர்கள் மீட்புப் பணிகளை ஒருங்கிணைத்து வருகின்றனர்.
மீட்புப் பணிகள்: தீயணைப்புப் படை மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் ஏற்கனவே சம்பவ இடத்துக்குச் சென்று மீட்புப் பணிகளைத் தொடங்கியுள்ளனர்.. இப்போது கூடுதல் தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் மீட்புப் பணிகளில் ஈடுபடச் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். கேரள அமைச்சர் ராமச்சந்திரன் அங்குச் சென்றுள்ள நிலையில், மேலும் சில அமைச்சர்களும் மீட்புப் பணிகளை ஒருங்கிணைக்க அங்கே விரைவார்கள் எனக் கூறப்படுகிறது. மேலும், மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தக் கோவை சூலூரில் விமானப் படைத் தளத்தில் இருந்து இரண்டு ஹெலிகாப்டர்கள் அங்கு விரைந்துள்ளன.
உதவி எண்கள்: வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவின் மீட்புப் பணிகளை ஒருங்கிணைக்க இப்போது வயநாட்டில் ஒரு கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. அங்கே அவசர உதவி தேவைப்படுவோர் 9656938689 அல்லது 8086010833 என்ற எண்களில் அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளலாம்..
மேலும், வயநாட்டில் மீட்புப் பணிகளை ஒருங்கிணைக்கத் திருவனந்தபுரத்தில் உள்ள போலீஸ் தலைமையகத்தில் ஒரு சிறப்புக் கட்டுப்பாட்டு அறையும் தொடங்கப்பட்டுள்ளது மேலும், 9497900402, 04712721566 என்ற எண்களுக்கு உதவி தேவைப்படுவோர் அழைக்கலாம். போன் கால்களில் பெறப்படும் தகவல்கள் உடனடியாக களத்தில் உள்ள வீரர்களுக்கு அனுப்பப்படுகிறது.












Click it and Unblock the Notifications