இந்த மூன்று துறைகளில் தேவை தலைகீழ் மாற்றம்- லட்சக்கணக்கானோருக்கு வேலை கிடைக்கும்- லஞ்சமும் சாகும்!
சென்னை: தமிழக அரசு அலுவலகங்களில் லஞ்சம் வாங்குவதற்கு அஞ்சுகிற சூழ்நிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு உருவாக்கி வைத்திருக்கிறது என்பது உள்ளபடியே பாராட்டுக்குரியது. ஆனால் சில துறைகளில் ஏழை, நடுத்தர சாமானியர்களை லஞ்சம் என்ற பெயரில் சக்கையாய் பிழிந்து எடுக்கும் வகையில் அரசு ஊழியர்கள்- புரோக்கர்கள் கூட்டணி என்பதே அரசாங்க அமைப்பாகவே மாறி இருக்கிறது. இந்த கட்டமைப்பை தலைகீழாக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாற்றினால் நிச்சயம் தலைமுறைகள் பல போற்றும். எண்ணற்ற இளைஞர்களுக்கு அரசு வேலைவாய்ப்பை தரலாம்.
பத்திரப் பதிவு, பட்டா பெறுதல், வீட்டு மனைக்கான அப்ரூவல் இந்த 3 விஷயங்களை மட்டும் எடுத்துக் கொள்வோம். நிலம் வாங்குதல், வீடு வாங்குதல், கட்டுதல் என்பது சாமானியர்களின் வாழ்நாள் கனவு. ஆனால் இதற்கு அவர்கள் கொடுப்பது மிகப் பெரிய விலை. குறிப்பாக பத்திரப் பதிவு, பட்டா பெறுதல், வீட்டு மனைக்கான அப்ரூவல் இந்த 3-க்கும் மட்டுமே ஒரு சாமானியன் சுமார் ரூ1 லட்சம் வகையில் லஞ்சம் மட்டுமே கொடுக்கத்தான் வேண்டும் என்கிற வகையில் நமது அரசாங்கக் கட்டமைப்பு இருக்கிறது.

உதாரணமாக நீங்கள் ஒரு நிலத்தை வாங்க முடிவு செய்கிறீர்கள். சம்பந்தப்பட்ட இருவரும் விலையை பேசி பத்திரம் பதிவு செய்ய முடிவு செய்கிறீர்கள்.
இதர அரசு அலுவலகங்களைப் போல நீங்கள் பத்திரப் பதிவு அலுவலகத்துக்கு நேரடியாக சென்று பத்திரம் பதிவு செய்யவே முடியாது. முதலில் பத்திரப் பதிவு அலுவலகம் அருகே காணி கட்டிக் கொண்டு காத்திருக்கும் பத்திரம் எழுதுபவரிடம்தான் போக வேண்டும். இந்த பத்திரம் எழுதுபவர்தான் அரசுக்கு எவ்வளவு கட்ட வேண்டும்? பத்திரம் எழுதியதற்கான கூலி எவ்வளவு? கையெழுத்து போடும் பத்திர பதிவு அரசு ஊழியர்களுக்கு லஞ்சம் எவ்வளவு? என்பதை தீர்மானிப்பவராக இருக்கிறார்.
அவர் பத்திரத்தில் இடம் பெற வேண்டிய விவரங்களை டைப் செய்து கொடுக்க நாம் சரிபார்த்த பின்னர் சில ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பத்திரங்களில் பதிவேற்றப்பட்டுவிடும். சரி அதான் பத்திரத்தை எழுதிக் கொடுத்துவிட்டார் அல்லவா? இனியாவது அரசு அதிகாரிகளிடம் நாம் நேரடியாக சென்று கையெழுத்து வாங்கிவிடலாம் என்று நினைத்தால் அது நடக்காது. அப்படித்தான் இந்த கட்டமைப்பு உள்ளது.
பத்திரம் எழுதுகிறவரின் ஊழியர் ஒருவர் நம்முடன் வருவார். அந்த பத்திரம் எழுதுபவருக்கு இன்றைக்கு வந்த வாடிக்கையாளர்கள் அத்தனை பேரின் பத்திரங்களையும் மொத்தமாக எடுத்துக் கொண்டு பத்திரப் பதிவு அலுவலகத்துக்கு அத்தனை பேரையும் அழைத்துச் சென்றுவிடுவார்கள். அவர்கள்தான் அதாவது பத்திரம் எழுதுகிற நபரின் ஊழியர்கள்தான் அரசு அலுவலர்களை சந்திப்பார்கள். அரசு அலுவலர்கள் நில விவரங்களைப் பார்வையிடுவதற்கான கோப்புகளையும் இவர்கள்தான் எடுத்துக் கொடுப்பார்கள். அதாவது அறிவிக்கப்படாத அரசு ஊழியராகத்தான் பத்திரம் எழுதக் கூடிய நபரின் ஆபீசில் வேலைபார்ப்பவர்கள் பணியாற்றுவார்கள்.
நீதிமன்றத்தில் கூவி அழைப்பது போல நம் பத்திரத்தை அதிகாரிகள் பார்த்துவிட்ட பின் கூப்பிட்டு புகைப்படம், ரேகை, கையெழுத்து வாங்கிவிட்டு அனுப்பிவிடுவர். அவ்வளவுதானே உடனே பத்திரம் கைக்கு வராது. அடுத்த நாள் பத்திரம் எழுதுபவரிடம்தான் போக வேண்டும். அவர்கள் கொடுக்க வேண்டியதை கொடுத்து கணக்கு செட்டில் செய்த பின்னர் பத்திரங்களை வாங்கி பத்திரமாக வைத்திருப்பார்கள். அரசுக்கு இதில் எவ்வளவு கிடைத்திருக்கும் என நினைக்கிறீர்கள்? உதாரணமாக ஒரு செட்டில்மெண்ட் பத்திரம் எழுதுகிறீர்கள் எனில் ரூ15,000 மொத்தமாக பத்திரம் எழுதக் கூடியவர் ஆபீசில் கொடுத்துவிட வேண்டும். இதில் அரசுக்கு போயிருப்பது வெறும் ரூ4,500. எஞ்சியவை பத்திரம் எழுதியதற்கு, பத்திரம் வாங்கியதற்கு, லஞ்சம் கொடுத்ததற்கு என பிரிக்கப்படுகிறது.
ஆக இந்த நாட்டின் அரசாங்க அலுவலகத்தில் ஒரு சாமானியன் நேரடியாக சென்று ஒரு ஆணியையும் கழற்றவே முடியாது. ஏன் நேரடியாக சென்று பத்திரப் பதிவு அதிகாரிகளை சந்திக்கக் கூட முடியாது; ஒரு சந்தேகம் கூட கேட்க முடியாது என்கிற செம சூப்பரான கட்டமைப்புதான் உள்ளது. அப்புறம் எப்படி லஞ்சம் ஒழியுமாம்? கட்டமைப்பு என்பதே லஞ்சத்தின் மீது கட்டப்பட்டுள்ளது.
ஏன் பத்திரப் பதிவு அலுவலகங்களில் கணிணி தட்டச்சர்கள் பத்திரம் எழுதுகிறவர்கள், பத்திரம் பிழை திருத்துநர், வில்லங்கம் பார்ப்பவர், பட்டா கொடுப்பவர், கையெழுத்திடும் அதிகாரி என்கிற படிநிலையை உருவாக்க முடியாதா? அப்படிச் செய்தால் எத்தனை லட்சம் இளைஞர்களுக்கு வேலைகிடைக்கும்? யோசித்து பார்க்கலாம் அல்லவா?
சரி பட்டா வாங்க என்ன செய்ய வேண்டும்?
அத்தனை பத்திர நகல்களையும் கொண்டு போய் குறிப்பிட்ட இ சேவை மையத்தில் கொடுக்க வேண்டும். அங்கு ரூ60 கட்டணம் பெற்றுக் கொண்டு ஒப்புகைச் சீட்டு கொடுத்துவிடுவார்கள். இந்த தகவல் உடனடியாக வருவாய்த்துறைக்கும் சென்றுவிடும். ஆனால் வருவாய்த்துறையினர் நம்மை அழைக்கமாட்டார்கள்.
நடுகாட்டில் விட்ட நபராக நாம்தான் நமது நிலத்துக்கான வட்டாட்சியர் அலுவலகத்துக்குப் போய் தாசில்தாரை சந்தித்து, சர்வேயரை கண்டுபிடித்து அவருக்கான நேரத்தை கேட்டு வாங்கி நேரில் போய் ஆவணங்கள் கொடுக்க வேண்டும். அதன் பின் அவருக்கான சவுகரியமான ஒருநாளில் நம்மை அழைத்து நிலத்தை அளப்பார்கள். அப்போதும் கூட பட்டா கொடுப்பதற்கான அரசு கட்டணம் எவ்வளவு என்றெல்லாம் சொல்லமாட்டார்கள்.. ரூ3,000, ரூ5,000 என மொத்தமாக ரேட்தான் பேசப்படுகிற நிலை உள்ளது.
ஏன் பத்திரம் பதிந்த உடனேயே பட்டா வழங்க முடியாது? பத்திரப் பதிவு என்பது அரசு அலுவலகத்தில் தானே நடக்கிறது. ஒரு நிலத்தின் நான்குமால்களை சரிபார்த்துதானே அதிகாரிகள் கையெழுத்திடுகிறார்கள். அப்படியே கையோடு பட்டா கொடுத்தால் குடி என்ன மூழ்கியா போய்விடும்?
அடுத்ததாக ஒரு மனைக்கான லே அவுட் அப்ரூவல்.
இங்கேயும் நேரடியாக கொண்டு போய் கொடுத்து அம்மஞ்சல்லி பைசா இல்லாம லே அவுட் வாங்க முடியாது. ஒரு மனைக்கான லேவுட்டுக்கான அப்ரூவல் பெற இவ்வளவு ரூபாய் கட்டணம் பொதுமக்களுக்கு பகிரங்கமாக தெரிவித்தால் உள்ளாட்சி அமைப்புகளை ஊர் மக்கள் ஒதுக்கி வைத்துவிடுவார்களா?
பல்க்காக சில ஆயிரங்கள் பேசி அதை பக்கத்து ஒரு கடையில் கொடுக்கச் சொல்லிவிட்டு (லஞ்சத்தை ஆபீசில் வாங்க கூடாதாம்) சில நாட்கள் கழித்து பணம் செட்டிலான உடன் அழைத்து அப்ரூவல் சீல் வைத்து கொடுப்பார்கள். அப்ரூவல் சீல், உள்ளாட்சி அமைப்பின் தலைவர் கையெழுத்து உள்ளிட்டவைகளுக்கு மட்டும் குறைந்தது ரூ15 ஆயிரத்தில் இருந்து ரூ50 ஆயிரம் என அழுதாக வேண்டும். இப்படி இந்த 3 துறைகளுக்கு மட்டுமே ரூ1 லட்சம் மொய்ப்பணம் எழுதிவிட்டுத்தான் வீடு கட்டுதல் எனும் நல்ல காரியத்தை தொடங்க வேண்டும். இதை எப்படி ஒரு சாமானியன், ஏழை நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவனால் தாங்கிக் கொள்ள முடியும்?
ஆகையால் ஆகக் குறைந்தபட்சம் ஒரு முன்மாதிரியாக சாமானியர்களின் தொடர்புடைய இந்த துறைகளின் அடிப்படைக் கட்டமைப்பை அடியோடு தூக்கி தூர எறிந்துவிட்டு பல லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கக் கூடியதாக மாற்றி அமைத்தால் நிச்சயமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு மக்கள் கொண்டாடும் அரசாக அவர்கள் பாணியில் சொன்னால் விடியல் அரசாக திகழும்.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications