மழை காலத்தில் கேரளா பக்கம் டூர் போறீங்களா.. உங்கள் பாதுகாப்புக்கு இதெல்லாம் முக்கியம்

Subscribe to Oneindia Tamil

வயநாடு: கேரளாவில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக வயநாடு, கோழிக்கோடு, மலப்புரம், கண்ணூர், காசர்கோடு, இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, கோட்டயம் போன்ற மாவட்டங்களில் நிலைமை மோசமாக உள்ளது. எனவே இப்போது கேரளா பக்கம் டூர் போகாமல் இருப்பதே நல்லது. அதையும் மீறி சுற்றுலா செல்கிறீர்கள் என்றால், உங்கள் பாதுகாப்புக்கு சில விஷயங்களில் கவனமாக இருங்கள்.

தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ள காரணத்தால், கேரளாவில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக வயநாடு, கோழிக்கோடு, மலப்புரம், கண்ணூர், காசர்கோடு, கோட்டயம், இடுக்கி உள்ளிட்ட கேரளாவின் பல்வேறு மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்து வருகிறது. சுற்றுலா தலங்களில் நிலைமை பல இடங்களில் கவலைக்கிடமான வகையில் இருக்கிறது. இன்று அதிகாலை வயநாட்டில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் இதுவரை 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இன்னும் ஏராளமானோர் சிக்கி உள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

wayanad Kerala

இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் வயநாடு, கோழிக்கோடு, மலப்புரம், கண்ணூர், காசர்கோடு போன்ற மாவட்டங்களில் மிகமிக கனமழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்த பகுதிகளுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளன. சில ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

ரயில்கள் ரத்து: கனமழை காரணமாக கேரளாவின் வள்ளத்தோல் நகர் மற்றும் வடகஞ்சேரி இடையே 3 ரயில்களை தெற்கு ரயில்வே செவ்வாய்க்கிழமை பாதியாக ரத்து செய்துள்ளது. இதேபோல் எர்ணாகுளம் - கண்ணூர் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் (16305) திருச்சூர் வரை மட்டுமே செல்லும். திருநெல்வேலி - பாலக்காடு பாலருவி எக்ஸ்பிரஸ் (16791) ஆலுவா வரை மட்டும் இயக்கப்படும். திருவனந்தபுரம் - ஷோரனூர் வேணாட் எக்ஸ்பிரஸ் (16302) சாலக்குடி வரை மட்டுமே செல்லும்.

பாலக்காடு, மன்னனூர், வீசுமலை ஆகிய இடங்களில் தண்டவாளம் அருகே நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அனக்காப்பாறை என்ற பகுதிகளில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வடக்கஞ்சேரியில் உள்ள அகமலை பகுதியிலும் தண்டவாளத்தில் தண்ணீர் புகுந்திருக்கிறது. கனமழை மற்றும் காட்டாற்று வெள்ளம் காரணமாக திருச்சூரில் உள்ள அதிரப்பள்ளி மற்றும் வாழச்சல் அருவிகள் மூடப்பட்டுள்ளன. கனமழை காரணமாக கேரளா முழுவதும் உள்ள பல்வேறு சுற்றுலா தலங்களிலும் தற்போது கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

கேரளா செல்லும் அல்லது சென்ற சுற்றுலா பயணிகள் எப்படி பாதுகாப்பாக இருக்க வேண்டும்?

1) நீங்கள் இருக்கும் இடத்தில் கனமழை வந்தால். வானிலை சரியாகும் வரை அதிகாரிகள் சுற்றுலா தலங்களை மூடிவிடுவார்கள். எனவே, திடீர் பயணங்களைத் தவிர்த்துவிடுங்கள். உங்களின் ஹோட்டல்கள் அல்லது தங்கும் விடுதிகளைத் திட்டமிடுவதற்கு முன் அல்லது அங்கிருந்து வெளியேறுவதற்கு முன், அந்த இடம் சுற்றுலாப் பயணிகளுக்காக நாள் முழுவதும் திறந்திருக்குமா என்று விசாரித்துக் கொள்ளுங்கள். உள்ளூர் சுற்றுலா அதிகாரிகள், காவல்துறை மற்றும் உங்களின் டூர் ஆபரேட்டர்களின் தொலைபேசி எண்களை கைவசம் வைத்துக் கொள்ளுங்கள். அங்கு உள்ளூர் செய்திகளை தொடர்ந்து பாருங்கள்.

2) முடிந்த வரை சொந்த வாகனங்களில் கேரளாவிற்கு செல்ல வேண்டாம். ஏனெனில் பல இடங்களில், சாலைகள் வழுக்கும் தன்மையுடையதாகவும், கனமழையின் போது திடீர் வெள்ளம் அல்லது நிலச்சரிவு ஏற்படவும் வாய்ப்புள்ளது. இந்த சீசனில் நீங்கள் பயணிக்கும் போது, ​​பாதுகாப்பான மாற்று வழிகளைப் பற்றி அறிந்த அனுபவம் உள்ள வாகன ஓட்டிகள் மற்றும் மலைச்சாலைகளில் வாகனம் ஓட்டுவதில் அனுபவம் உள்ள உள்ளூர் ஓட்டுனர்களின் வாகனங்களில் செல்வது நல்லது.

3) இந்த மழைக்காலத்தில் பூச்சிகள், உணவு மற்றும் நீர் மூலம் பரவும் நோய்கள் பரவக்கூடும் என்பதால் தேவையான சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் கவனமாக இருங்கள். நீங்கள் சுற்றுலா செல்லும் இடங்களில் சுகாதாரமான சூழ்நிலையில் சாப்பிடுகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

சேற்று நீர் அல்லது தேங்கி நிற்கும் ஆறுகள், குளங்கள் போன்றவற்றிற்கு தப்பித்தவறிக்கூட போக வேண்டாம். குடிநீர் பாட்டில்கள் அல்லது சுடுதண்ணீரை மட்டுமே குடியுங்கள். பச்சை உணவுகள் மற்றும் சமைக்காத பொருட்களை இப்போது சாப்பிடுவதை தவிருங்கள்.

4) அவசரநிலைக்கு நீங்கள் தயாராக இருக்க வேண்டும். அத்தியாவசிய மருந்துகள், கனமழைக்கு தாக்கு பிடிக்கும் வகையில் பெரிய குடைகள், ரெயின்கோட்டுகள், மின்விளக்குகள், முதலுதவி பெட்டி, முழுவதுமாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்கள், பவர் பேக்கப் சாதனங்கள் மற்றும் சார்ஜர்கள் ஆகியவற்றை தயார் நிலையில் வைத்துக் கொள்ளுங்கள். மேலும் கனமழை மற்றும் பலத்த காற்று வீசும் என்பதால், அங்கு குளிர் அதிகமாக இருக்கும். எனவே உடலை சூடாக வைத்துக் கொள்ளும் வகையில் ஆடைகளை அணியுங்கள்..

5) பயணத் திட்ட மாற்றங்களுக்கு தயாராக இருக்க வேண்டும். மோசமான காலநிலை காரணமாக சில நேரங்களில் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். எனவே தண்ணீர் புகாத ஆடைகள் மற்றும் காலணிகள் போன்ற அத்தியாவசிய பொருட்களை நீர் போகாத பெட்டியில் வைத்திருக்க வேண்டியது அவசியம் ஆகும்.

இறுதியாக.. இப்போது கேரளா சுற்றுலா செல்வது நல்லது இல்லை.. வயநாடு, கோட்டயம், இடுக்கி போன்ற மாவட்டங்களில் கடந்த காலங்களில் கடுமையான மழையும் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. சாலையில் கூட காட்டாற்று வெள்ளம் கடுமையாக பாய்ந்தோடும். திடீர் திடீரென புதிதாக தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். ஆவேசமான காட்டாற்று வெள்ளத்தில் தெரியாமல் காலை வைத்தாலே உயிர் போய்விடும். எனவே சுற்றுலா செல்வது மிகவும் தவறு. கேரளாவில் உள்ள மலைகளில் , மழை சாதாரணமாக இருக்காது. பனிமூட்டம் போல் வானத்தை மூடியபடி விடாமல் பெய்து கொண்டே இருக்கும். வாகனங்களில் செல்வோரை சாலைகளில் செல்லும் தண்ணீர் அச்சத்தில் உறைய வைக்கும். மூணாறு, வயநாடு, தேக்கடி, இடுக்கி, வாகமன் போன்ற பகுதிகளுக்கு சுற்றுலா செல்லலாம் என்ற எண்ணம் இருந்தால் அதை இப்போது அடியோடு மறந்துவிடுங்கள். மழை நின்று இயல்பு நிலை திரும்பிய பின்னர் செல்வதே நல்லது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+