கொடைக்கானல் போறீங்களா.. வனத்துறை கொடுத்த இன்ப அதிர்ச்சி.. திக்குமுக்காடிய சுற்றுலா பயணிகள்
கொடைக்கானல்: கொடைக்கானல் வனத்துறையினர் முதல்முறையாக மிகப்பெரிய விஷயத்தை முன்னெடுத்துள்ளனர். இந்த கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றவர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. பேரிஜம் ஏரியில் வனத்துறை சார்பில் முதன் முறையாக பரிசல் சவாரி தொடங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவின் புகழ் பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றாக கொடைக்கானல் திகழ்கிறது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு சர்வதே அளவில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்கிறார்கள். இங்குள்ள கால நிலை, ஐரோப்பாவில் உள்ளது போன்று இருக்கும் என்பதால் பல வெளிநாட்டவர்கள் வருவார்கள்.

அதேபோல் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு வெளிமாநிலங்களிலும் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள். தற்போது காலாண்டு தேர்வு விடுமுறை என்பதாலும், அடுத்தடுத்து தொடர் விடுமுறை என்பதாலும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகிறார்கள்.
கொடைக்கானல் செல்ல மூன்று வழித்தடங்கள் உள்ளன. மெயின் வழி என்றால் வத்தலக்குண்டு காட்ரோடு வழி தான்.அதேபோல் பழனியில் இருந்து பெருமாள் மலையை அடையும் வழியும், தேனியில் இருந்து வந்தால், பெரியகுளம் அடுக்கம் வழியாக பெருமாள் மலையை அடைய முடியும். தற்போது சுற்றுலா பயணிகள் கூட்டத்தால் கொடைக்கானல் சாலைகள் நிரம்பி வழிகின்றன.
கொடைக்கானலின் குளு குளு காலநிலையை அனுபவிக்கவும், பல்வேறு சுற்றுலா தலங்களை நேரில் பார்த்து ரசிக்கவும் மக்கள் வருகிறார்கள். கொடைக்கானலை பொறுத்தவரை, பெருமாள் மலை தொடங்கி கூக்கால் வரை பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன. கொடைக்கானல் பேருந்து நிலையம் அருகே செயற்கையாக வடிவமைக்கப்பட்ட நட்சத்திர ஏரி பெரிய புகழ் பெற்ற ஏரியாகும். அங்கு படகு சவாரி உள்ளது. இங்கு படகு சவாரி செய்ய பலரும் விரும்புவார்கள். இதை தவிர மன்னவனூரி ஏரியில் படகு சவாரி உள்ளது. ஆனால் அந்த அளவிற்கு இருக்காது. இதை தவிர வேறு இடங்களில படகு சவாரிகள் இல்லை.
இந்நிலையில் கொடைக்கானலில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான பேரிஜம் ஏரி, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாகும். இந்த ஏரி தண்ணீர் தான் சோத்துப்பாறை வழியாக வந்து பெரியகுளம் மக்களுக்கு குடிநீராக பயன்படுகிறது. இங்கு வனத்துறையினரிடம் அனுமதி பெற்ற பின்னரே சுற்றுலாப் பயணிகளால் செல்ல முடியும். பேரிஜம் ஏரிக்குச் செல்லும் வழியில் தொப்பி தூக்கிப் பாறை, மதி கெட்டான் சோலை, வியூ பாய்ண்ட், அமைதி பள்ளத்தாக்கு உள்ளிட்ட இடங்கள் கண்களுக்கு பெரிய விருந்தாகும்.
இந்நிலையில் கொடைக்கானல் நட்சத்திர ஏரி மற்றும் மன்னவனூர் ஏரியில் இருப்பதைப்போல், பேரிஜம் ஏரியிலும் பரிசல் அல்லது படகு சவாரி தொடங்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, செப்டம்பர் 28ம் தேதியான நேற்று முதல் பேரிஜம் ஏரியில் பரிசல் சவாரி தொடங்கப்பட்டிருக்கிறது.
ஒரு பரிசலில் 5 பேர் வரை செல்லலாம். பயணிகளுக்கு லைப் ஜாக்கெட் வழங்கப்படுகிறது. ஒரு நபருக்கு ரூ.150 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. முதல்கட்டமாக தற்போது 3 பரிசல்கள் மட்டும் இயக்கப்படுகிறது. பசுமை போர்த்திய மலைத்தொடர்கள், ஓங்கி உயர்ந்த மரங்களுக்கு நடுவில் பரந்து விரிந்துள்ள பேரிஜம் ஏரியை சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் பரிசல் சவாரி செய்து மகிழ்கிறார்கள்.
இந்த பேரிஜம் ஏரி தான் ஆசியாவிலேயே 2-வது மிகப்பெரிய நன்னீர் ஏரியாகும். அதாவது மிகவும் தூய்மையான தண்ணீர் உள்ள நன்னீர் ஏரி என்றால் இதுதான். இந்தமுறை கொடைக்கானல் போனால் பேரிஜம் ஏரியை மோதிவிட்டு செல்லுங்கள். அப்போது தான் அந்த அழகையும் இயற்கையையும் உங்களால் உணர முடியும்.












Click it and Unblock the Notifications