3 பக்கமும் கடல்.. தென் மாவட்டத்தில் ஒரு குட்டி கோவா! காணும் பொங்கலுக்கு டூர் போக சூப்பர் ஸ்பாட்
தூத்துக்குடி: பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் சென்றவர்கள் காணும் பொங்கல் தினத்தில் குடும்பத்துடன் சுற்றுலா செல்ல விரும்புவார்கள். அதிலும் அதிகம் செலவு பிடிக்காத இடமும் சிறந்த வகையில் பொழுதை கழிக்க கூடிய இடமாக இருக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு ஏற்ற இடமாக இருப்பது திருச்செந்தூர் அருகே உள்ள மணப்பாடு. 'இயற்கை', நீர் பறவை, கடல், நீதானே என் பொன்வசந்தம், சிங்கம் உள்ளிட்ட ஏராளமான படங்கள் இங்கு படமாக்கப்பட்டுள்ளன. அழகிய கடலோர கிராமமான இந்த மணப்பாடு பற்றியும் அங்குள்ள சிறப்புகள், எப்படி செல்வது என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு மக்கள் பலரும் சென்றுள்ளார்கள். கல்வி, தொழில் காரணங்களுக்காக சென்னை போன்ற பெருநகரங்களில் வசிக்கும் மக்கள் பொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட சென்றுள்ளனர். பொங்கல் பண்டிகைக்காக 6 நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்துள்ளது. காணும் பொங்கல் 16 ஆம் தேதியான நாளை கொண்டாடப்படுகிறது.

சுற்றுலா ஸ்பாட்
காணும் பொங்கலுக்கு மக்கள் குடும்பத்துடன் சுற்றுலா செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார்கள். இதனால், காணும் பொங்கல் நாளில் சுற்றுலா இடங்கள் களை கட்டும். சுற்றுலா செல்லும் பயணிகள் அதிகம் செலவு பிடிக்காத இடங்களுக்கு செல்ல வேண்டும் என்றும் விரும்புவார்கள். அதே நேரத்தில் மிகச்சிறந்த சுற்றுலா ஸ்பாட் ஆக இருக்க வேண்டும் என்ற எண்ணமும் இருக்கும். அப்படியான ஒரு ஸ்பாட் பற்றித்தான் இங்கே பார்க்க போகிறோம்.
தென் மாவட்டங்களில் ஒன்றான தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஊர் மணப்பாடு. திருச்செந்தூரில் இருந்து 17 கி.மீ தொலைவில் அமைந்துள்ள ஊர் மணப்பாடு. இந்த கிராமத்திற்குள் செல்லும் போதே மிகவும் பழமையான கட்டிடக் கலைகள் தென்படும். அதாவது, போர்த்துக்கீசிய கட்டிய கலையுடன் கூடிய பிரமாண்ட வீடுகள் கண்ணுக்கு தென்படும். மூன்று புறமும், கடலால் சூழப்பட்டு ஒரு தீவு போல காட்சியளிக்கும் இந்த பகுதி சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இருக்கும்.
சிங்கம், இயற்கை பட சூட்டிங் ஸ்பாட்
இங்குள்ள மணல் மேடுகள் மற்றும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை காணப்படும் மணல் பரப்புகள் என மொத்த பகுதியும் கண்களுக்கு விருந்தளிக்கும். மணப்பாடு கிராமத்தில் உள்ள தேவாலயமும் மிகவும் பிரசித்தி பெற்றது. கடலோரம் மணல் மேட்டில் அமைந்து இருக்கும் தேவாலயத்தில் இருந்து பார்த்தால் மணப்பாடு ஊரின் மொத்த பகுதியையும் காணலாம். இங்கு பல படங்களும் சூட் செய்யப்பட்டுள்ளன.
'இயற்கை', நீர் பறவை, கடல், நீதானே என் பொன்வசந்தம், சிங்கம் உள்ளிட்ட ஏராளமான படங்கள் இங்கு படமாக்கப்பட்டுள்ளன. மணப்பாடு கிராமத்தை பற்றிய வியக்க வைக்க கூடிய வரலாறு ஒன்றும் உள்ளது. அதாவது, கி.பி.1540-ம் ஆண்டில் போர்த்துக்கீசியர்களின் பாய்மரக்கப்பல் சூறாவளியில் சிக்கியதாம். அந்த பாய்மரக்கப்பலில் இருந்தவர்கள் செய்த ஜெபத்தின் வலிமையால் பாய்மரக்கப்பல் பாதுகாப்பாக மணப்பாட்டில் கரை ஒதுங்கியிருக்கிறது.
குட்டி கோவா, தென் ஆசியாவின் வெனிஸ்
அதற்கு நன்றி செய்யும் விதமாக மணல் குன்றில் அவர்கள் 10 அடி உயர சிலுவை வைத்தார்களாம். அந்த சிலுவை இன்னும் கூட அங்கேயே பிரமாண்டமாகக் காட்சி தருகிறது. சவேரியாரின் குகை, கடலோரத்தில் உள்ளது. மணப்பாடு கடல் பகுதியை பார்த்தாலே கால் நனைக்க வேண்டும் என்ற ஆசை பெரியவர்களுக்கு கூட ஏற்படும் அளவுக்கு இருக்கும். அதிகம் பரபரப்பு இல்லாத.. இயற்கையான கடல் அழகை ரசித்து வர சுற்றுலாப் பயணிகளுக்கு சிறந்த இடமாக இது இருக்கும்.
மணப்பாட்டில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட கலங்கரை விளக்கம் ஒன்றும் கம்பீரமாக காட்சியளிக்கும். இதனை குட்டி கோவா, தென் ஆசியாவின் வெனிஸ் என்று கூட அழைக்கிறார்கள். மணப்பாட்டு கடலில் உள்ள விசேஷம் என்னவென்றால் தென் கடல் ஆர்ப்பரிப்புடனும், வட கடல் அமைதியாகவும் தோன்றும். அதே நேரத்தில் கடலில் குளிக்க நினைப்பவர்கள் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும். மணப்பாடு கிராமத்தில் மீன்பிடி தொழிலும் படுஜோராக நடக்கும். காலையில் சென்றால் பிரஷாக மீன்களையும் பலர் வாங்கி செல்வதை பார்க்க முடியும்.
மணப்பாடு செல்வது எப்படி?
திருச்செந்தூர் - கன்னியாகுமரி கிழக்கு கடற்கரை சாலையோரம் அமைந்துள்ளது மணப்பாடு. சொந்த வாகனத்தில் செல்வபர்கள் இந்த சாலையை பயன்படுத்தி எளிதாக செல்லலாம். திருச்செந்தூர், உடன்குடி போன்ற இடங்களில் இருந்து பேருந்து வசதியும் உள்ளது. சுற்றுலா பயணிகள் ரீப்ரஷ் ஆக தேவாலய நிர்வாகம் சார்பில் அறைகள் உள்ளன. குறைந்த வாடகையில் அங்கு தங்கிக் கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications