பெசன்ட் நகர் பீச்சில் ஜாலியா பேசிட்டிருந்த ஜோடி.. சென்னை போலீஸ் ஜோசப் திடீர்னு செய்த அந்த காரியம்
சென்னை: பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் தனது ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த கல்லூரி மாணவிக்கு, அங்கு வந்த ஒரு போலீஸ்காரரால் சற்றும் எதிர்பார்க்காத அதிர்ச்சி காத்திருந்தது. விசாரணை என்ற பெயரில் அந்த ஜோடியை மிரட்டிய அந்த காவலர், ஒரு கட்டத்தில் அநாகரீகமாக நடந்துகொண்டதுடன் அந்த மாணவியைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததை பெரும் அதிர்வலையை உண்டுபண்ணி வருகிறது.. என்னதான் நடந்தது சென்னை பீச்சில்?
சென்னை பெசன்ட் நகர் கடற்கரை எப்போதும் பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவர்களின் வருகையால் பரபரப்பாக காணப்படும் இடமாகும். இந்த நிலையில், அங்குள்ள எலியட்ஸ் கடற்கரைப் பகுதியில் கல்லூரி மாணவி ஒருவர் தனது ஆண் நண்பருடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு ரோந்து பணியில் இருந்த போலீஸ்காரர் ஜோசப் என்பவர், அவர்கள் அருகே சென்று விசாரணை என்ற பெயரில் மிரட்டத் தொடங்கியுள்ளார். அந்த ஜோடியை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், பொது இடத்தில் அநாகரீகமாக நடந்துகொள்வதாகக் கூறி அவர்களைக் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று வழக்குப் பதிவு செய்துவிடுவேன் என்று மிரட்டியுள்ளார். இந்த மிரட்டலால் அந்த மாணவியும் அவரது நண்பரும் கடும் அதிர்ச்சியடைந்தனர்.
இருவரும் பயப்படுவதை புரிந்துகொண்ட போலீஸ்காரர், அதனை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முற்பட்டார்.. உடனே அவர்களிடம், "கேஸ் எதுவும் போடாமல் இருக்க வேண்டுமானால் தனக்கு உடனடியாகப் பணம் தர வேண்டும்" என்று பேரம் பேசியுள்ளார்.
போலீஸ்காரர் ஜோசப்
தன்னிடம் அப்போது பணம் இல்லை என்று மாணவி சொல்லி உள்ளார்.. ஆனால் போலீஸ்காரர் ஜோசப் விடாமல் மிரட்டியதுடன், அருகிலிருந்த ஏ.டி.எம். மையத்திற்கு மாணவியை அழைத்துச் சென்றுள்ளார். அங்கு தனது வங்கிக் கணக்கிலிருந்து 8000 ரூபாயை எடுத்து வருமாறு கட்டாயப்படுத்தியுள்ளார். வேறு வழியின்றி அந்த மாணவியும் பணத்தை எடுத்து காவலரிடம் கொடுத்துள்ளார்.
பணத்தை பெற்றுக்கொண்ட பிறகும் போலீஸ்காரர் ஜோசப்பின், அத்துமீறல் குறையவில்லை. அந்த மாணவியிடம் பாலியல் ரீதியான சீண்டல்களில் ஈடுபட முயன்றுள்ளார்.. திடீரென போலீஸ்காரர் அநாகரீகமாக நடந்து கொண்டதை கண்டு அந்த மாணவி பதறிப்போய்விட்டார்..
இந்த சம்பவத்தால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான அந்த மாணவி, நடந்த கொடுமைகள் குறித்துத் துணிச்சலாகச் சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரைப் பெற்றுக்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாகத் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
ஜோசப் அதிரடி கைது
முதற்கட்ட விசாரணையில் காவலர் ஜோசப் தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி மிரட்டிப் பணம் பறித்ததும், மாணவியிடம் தவறாக நடந்துகொண்டதும் உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சாஸ்திரி நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து காவலர் ஜோசப்பை அதிரடியாகக் கைது செய்தனர்.
இப்படித்தான் கடந்த 2024 செப்டம்பர் மாதம் புதுச்சேரி காரைக்காலிலும் ஒரு ஷாக் சம்பவம் நடந்தது நினைவிருக்கலாம்.. காரைக்கால் கடலோரக் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வந்த 35 வயது ராஜ்குமார், கடற்கரைக்கு வந்த ஒரு காதல் ஜோடியை விசாரணை என்ற பெயரில் மிரட்டியுள்ளார்.
தண்ணீர் பாட்டில் வாங்க போன காதலன்
காதலனை மட்டும் தண்ணீர் பாட்டில் வாங்கி வரச் சொல்லி வெளியே அனுப்பிவிட்டு, தனியாக இருந்த இளம்பெண்ணிடம் பணம் கேட்டு மிரட்டியதுடன் அவரிடம் பாலியல் ரீதியான சில்மிஷங்களிலும் ஈடுபட்டுள்ளார். இது குறித்துத் தகவலறிந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் திரண்டு வந்து போலீஸ் பூத்தை முற்றுகையிட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பிறகு இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், ராஜ்குமாரை நிரந்தரமாக டிஸ்மிஸ் செய்து புதுச்சேரி காவல்துறை உத்தரவு பிறப்பித்ததும், பெண்ணை தேவையில்லாமல் சீண்டி, அரசு வேலையையும் ராஜ்குமார்
இழந்ததும் அனைவரும் அறிந்ததே. இப்போது சென்னையில் ஜோசப் கைதாகி உள்ளார்.
வேலியே பயிரை மேய்வதற்கு சமம்
பொதுமக்களுக்கு பாதுகாப்பு அரணாக விளங்க வேண்டிய போலீசாரே, இது போன்ற அத்துமீறல்களில் ஈடுபடுவது வேலியே பயிரை மேய்வதற்குச் சமமாகும். எத்தனையோ போலீஸ்காரர்கள் நேர்மையான முறையில் பணியாற்றி வரும்போது, ராஜ்குமார், ஜோசப் போன்ற ஒருசிலரால், காவல்துறையின் மாண்பு குலைகிறது..
அதனால் சீருடையின் கண்ணியத்தை குலைக்கும் வகையில் செயல்படும் இது போன்ற கருப்பு ஆடுகள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுப்பது அவசியம். ஏனென்றால், தவறு செய்பவர்களுக்கு துறை ரீதியான பணிமாறுதல் என்பதற்கு பதிலாக, நிரந்தர பணிநீக்கம் போன்ற கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டால்தான், மற்றவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக அமையும், அத்துடன் பெண் பிள்ளைகளை நெருங்கவும் அச்சப்படுவார்கள்...!!












Click it and Unblock the Notifications