ஏங்க விருதுநகர் டூ மேகமலைங்க.. சாஸ்தா கோவில் குறித்து ஜெயசீலன் வெளியிட்ட சூப்பர் பதிவு
விருதுநகர்: ஐஏஎஸ் அதிகாரி ஜெயசீலன் வெளியிட்ட பதிவில் கூறுகையில், "ஏங்ங்ககக... விருதுநகர் மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அழகான கிராமங்கள் நீர்நிலைகள் மற்றும் வனப்பகுதிகள் உள்ளன. செண்பகத் தோப்பு பகுதிகளில் வனத்துறை மூலம் ட்ரக்கிங் அழைத்துச் செல்லப்படுகிறது, ராஜபாளையத்தை ஒட்டி சாஸ்தா கோவில், அய்யனார் கோவில், ராக்காச்சி அம்மன் கோயில் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளுக்கு வனத்துறையால் விதிகளுடன் அனுமதிக்கப்படுகிறது. சரியான இடங்களை தெரிந்து கொண்டு, இயற்கைக்கு இடையூறின்றி துய்க்கலாம் !" இவ்வாறு கூறியுள்ளார்.
2013 ஆம் ஆண்டு சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றவர் 100க்கும் மேற்பட்ட தமிழர்களில் ஒருவர் தான் வி.பி.ஜெயசீலன். இந்திய வருவாய்ப் பணி அதிகாரியாக இருந்த வி.பி. ஜெயசீலன், அகில இந்திய அளவில் 45வது இடத்தைப் பிடித்து, தமிழ்நாடு அளவில் முதலிடம் பிடித்தவர் ஆவார். இவர் மாவட்ட ஆட்சியராக பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றி உள்ளார். கடந்த 2023ம் ஆண்டு வரை தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநராகப் பணியாற்றி வந்த ஜெயசீலன், விருதுநகர் மாவட்ட ஆட்சியராக கடந்த 2023-ம் ஆண்டு பிப்ரவரி 8-ம் தேதி பொறுப்பேற்றார்.

வி.பி. கலெக்டராக பொறுப்பேற்றது முதல் அரசு பள்ளி மாணவர்கள் மீது தனி கவனம் செலுத்தி வந்தார். 'காபி-வித் கலெக்டர்' என்ற பெயரில் தொடர்ந்து 200-க்கு மேல் நிகழ்ச்சி நடத்தி பலரது பாராட்டையும் பெற்றார். அரசுப் பள்ளி மாணவர்களை வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களுக்கு கல்விச் சுற்றுலா அழைத்து சென்று அசத்தினார்.
சென்னை மாநகராட்சி இணை ஆணையர்
மேலும், பசுமை ஆர்வலர் திட்டம், இடைநிற்றல் மாணவர்களை கண்டறிந்து மீண்டும் பள்ளியில் சேர்க்கும் திட்டம். கற்றது ஒழுகு திட்டம், அறிவோம் தெளிவோம் திட்டம், மாணவர்களுக்கான சிறப்பு குறைதீர்க் கூட்டம், உண்டு உறைவிட பயிற்சி, கரிசல் இலக்கிய அறக்கட்டளை, திருக்குறள் மாணவர் மாநாடு, விருதுநகர் கல்வி அறக்கட்டளை, உயர்கல்வி வழிகாட்டு மையம், மலரும் புன்னகைத் திட்டம், 'இரும்பு கண்மணி' திட்டம் என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறார். இவரது முன்னெடுப்பால் பல மாணவர்கள் விருதுநகர் மாவட்டத்தில் நல்ல நிலைக்கு வந்துள்ளார்கள். இந்நிலையில் கடந்த வாரம் திங்கள்கிழமை, பெருநகர சென்னை மாநகராட்சி இணை ஆணையராக (சுகாதாரம்) ஜெயசீலன் இடமாற்றம் செய்யப்பட்டார்.
கூமாப்பட்டி சுற்றுலா
அதே நாட்களில் தான், விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள கூமாபட்டி இன்ஸ்டாவில் பிரபலம் ஆனது போது, அங்கு நேரில் சென்று புகைப்படங்கள் எடுத்து உண்மை நிலை குறித்து ஜெயசீலன் ஐஏஎஸ் பதிவிட்டார். அந்த பதிவில் அவர் கூறும் போது, உலகப் புகழ் கூமாபட்டியிலிருந்து...நேற்றிலிருந்து நண்பர்கள் அழைத்து என்னடா விருதுநகர் கலெக்டராக இருந்து இப்படி இன்டர்நேஷனல் Exotic Destination கூமாபட்டிய எங்களிடம் காட்டாமல் விட்டு விட்டாய் என்று கோபித்துக் கொண்டார்கள் ! எனக்கே கொஞ்சம் அதிர்ச்சியாதான்டா இருக்கு பொறுங்க நாளைக்கு சும்மாதான் இருப்பேன். போய் பார்த்து போட்டோ எடுத்து போடுறேன் என்று சொன்னேன்..
கூமாபட்டி, ஸ்ரீவில்லிபுத்தூருக்கு மேற்கே மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தை ஒட்டி அமைந்துள்ள அழகான ஊர். பிளவக்கல் கோவிலாறு அணைகளுக்கு அருகில், இரண்டு மிகப்பெரிய கண்மாய்களையும் கொண்ட ஆயக்கட்டுகள் நிறைந்த ஊர். மழைக்காலத்தில் கம்மாய்கள் நிரம்பி, கடல் போல் நிறைந்து, இயற்கை எழில் சூழ மிகுந்த ரம்மியமாய் காட்சியளிக்கும்.
காதல் தீர்த்தம் அல்ல
அந்த வைரல் வீடியோவில், தலைவன் சொன்னதை போல் காதல் தோல்விக்கு தீர்த்தமாகவோ, இல்லை காதல் செட்டாவதற்கு தைலமாகவோ இருக்குமா என்பது குறித்து எந்த ஆவணக் குறிப்புகளும் இல்லை. தலைவனின் மற்ற தகவல்கள் 'ரீல்'ஸ்காக மட்டுமே!
மற்றபடி, இது போன்ற கிராமப்புற பகுதிகளில் இயற்கை எழில் சூழ்ந்த இடங்களில் கிராம சுற்றுலாவை மேம்படுத்துவதற்கும், அழுத்தமான நகர்ப்புர வாழ்வியலில் இருந்து இளைப்பாறவும் 100 சதவீத கியாரண்டி உள்ள இடம். எதிர்காலத்தில் இது கிராமச் சுற்றுலா வசதிகளுடன் மேம்பாடு அடையும் என எதிர்பார்க்கலாம்!" என்று கூறியிருந்தார்.
மேகமலை
இந்நிலையில் கூமாப்பட்டியை தொடர்ந்து பிளவக்கல் அணை மற்றும் அதனை சுற்றுவட்டாரப்பகுதிகள் மிகவும் பிரபலம் அடைய தொடங்கின. இந்நிலையில் மேகமலைக்காதலன் என்ற நெட்டிசன், பச்சை பசேலென பசுமை போர்த்திய எங்கள் விருதுநகர் மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைகள் பற்றியும், அங்குள்ள சாஸ்தா கோவில் புகைப்படத்தையும் பதிவிட்டார். அந்த புகைப்படம் ஜெயசீலன் ஐஏஎஸ் எடுத்த புகைப்படம் என்று அவரை டேக் செய்திருந்தார்.
ஜெயசீலன் ஐஏஏஸ் பதில்
இதற்கு பதில் அளித்திருந்த ஜெயசீலன் ஐஏஎஸ், "ஏங்ங்ககக... விருதுநகர் மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அழகான கிராமங்கள் நீர்நிலைகள் மற்றும் வனப்பகுதிகள் உள்ளன. செண்பகத் தோப்பு பகுதிகளில் வனத்துறை மூலம் ட்ரக்கிங் அழைத்துச் செல்லப்படுகிறது, ராஜபாளையத்தை ஒட்டி சாஸ்தா கோவில், அய்யனார் கோவில், ராக்காச்சி அம்மன் கோயில் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளுக்கு வனத்துறையால் விதிகளுடன் அனுமதிக்கப்படுகிறது. சரியான இடங்களை தெரிந்து கொண்டு, இயற்கைக்கு இடையூறின்றி துய்க்கலாம் !" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications