ஊட்டி, கொடைக்கானலுக்கு பதில் மூணாறு சுற்றுலா போறீங்களா.. மகிழ்ச்சியான செய்தி சொன்ன வனத்துறை
மூணாறு: மூணாறு சுற்றுலா செல்வோருக்கு மகிழ்ச்சியான செய்தியை வனத்துறை வெளியிட்டிருக்கிறது. மூணாறு அருகே மாட்டுப்பட்டி, குண்டலை, எக்கோ பாயிண்ட், அடிமாலி அருகே செங்குளம் உள்ளிட்ட அணைகளை பார்வையிடவும் அங்கு படகு சவாரி செய்யவும் இனி ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம் என சுற்றுலா பயணிகளுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கேரளாவில் உள்ள இடுக்கி மாவட்டம் மூணாறு என்பது தென்னிந்தியாவின் காஷ்மீர் என்று போற்றப்படும் பகுதியாகும். தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தை ஒட்டி எல்லையில் அமைந்துள்ள மூணாறு பலருக்கு பிடித்த சிறந்த சுற்றுலா தலம் ஆகும். தமிழ்நாட்டில் தேனி மாவட்டத்தில் மழை பெய்யும் என்று எப்போது எல்லாம் அறிவிக்கிறார்களோ, அப்போது எல்லாம் மூணாறு பகுதிகளில் கண்டிப்பாக மழை பெய்யும். போடி மெட்டு கடந்து கீழிறங்கும் போது, புதிய வானம், புதிய பூமி என்பது போல் இயற்கையின் ஓரவஞ்சனையை பார்க்க முடியும்.

பசுமை பள்ளத்தாக்கு போல் பரந்து விரந்து திகழும் இடுக்கி மாவட்டம் உண்மையில் சொர்க்க பூமி. கடவுளின் தேசம் என்று இந்த இடங்களை பார்த்து தான் கேரளாவிற்கு பட்ட பெயரே வைத்திருப்பார்கள். பூப்பாறை வரை அப்படியே 7 கிலோ மீட்டர் தூரத்திற்கு கீழே செல்லும் பாதை, அதன் பிறகு மீண்டும் மேல்நோக்கி செல்லும். பூப்பாறையில் இருந்து ஒரு மணி நேரத்தில் மூணாறு போய்விட முடியும். தேனியில் இருந்து மொத்தமே 2.30 மணி நேரத்தில் மூணாறுக்கு போய்விடலாம்.
மலைப்பகுதியில் அப்படி ஒரு சாலை எங்குமே பார்க்க முடியாது. சுற்றிலும் தேயிலைதோட்டங்களும், நடுவில் பறந்துபட்ட சாலையிலும் கண்களுக்கு விருந்தாக அமையும். போகும் வழியிலேயே ஆனையிரங்கல் என்ற அற்புதமான சுற்றுலா தலத்தை பார்க்கவும், படகு சவாரி செய்யுவும் முடியும். அங்கு உண்மையிலேயே யானைகள் அடிக்கடி வந்து இறங்கும் இடம் ஆகும். அப்படியே பயணித்து மேலே சென்றால். மூணாறு நகரின் அழகு மெய்சிலிர்க்க வைக்கும். இரவில் கடும் குளிரும், பகலில் இதமான காற்றும் பரவச நிலைக்கு தள்ளும். மாட்டுப்பட்டி அணை, டாப் ஸ்டேசன், வட்டக்கானல் என கொடைக்கானல் போகும் எல்லை வரை எல்லா இடங்களுமே சுற்றுலா தலங்கள் தான்.
மூணாறு வரும் பலருக்கும் பிடித்த இடம் கொழுக்குமலை.. தமிழ்நாடு கேரளா எல்லையில் உள்ள இந்த இடம் தமிழ்நாட்டில் இருந்தாலும் கேரளா வழியாக வர முடியும். இங்கு சூரிய உதயத்தை காண்பது என்பது கண்களுக்கு மட்டுமல்ல, மனதிற்கும் மிக இதமானது. இது தவிர மூணாறு முதல் தேக்கடி வரை எண்ணற்ற சுற்றுலா தலங்கள் உள்ளன. அந்த சாலையில் உள்ள இடங்களை பார்க்க குறைந்தது இரண்டு நாட்களாவது வேண்டும். அவ்வளவு இடங்கள் உள்ளன. மூணாறை பொறுத்தவரை ஊட்டி, கொடைக்கானல் அளவிற்கு கடும் குளிர் இருக்காது. அதேநேரம் மழை அடிக்கடி பெய்யும் இடமாகும்.
இப்போது கூட அங்கு அடிக்கடி மழை வெளுத்து வாங்கி வருகிறது. மூணாறுக்கு சுற்றுலா செல்வோர் இருசக்கர வாகனங்களில் போகிறீர்கள் என்றால், பகலில் (காலை முதல் மாலை 4மணிக்குள்) தான் போக வேண்டும். அதுவும் தேனி போடி, போடி மெட்டு வழியாக போகலாம். உடுமலைப்பேட்டை மறையூர் வழியாக வருவோர் காரில் மட்டுமே வரலாம். உடுமலை வழியாக இருச்சக்கர வாகனத்தில் வருவது நல்லது இல்லை. யானைகள் சர்வ சாதாரணமாக உலா வரும் பகுதியாகும்.
மூணாறு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு அந்த மாநில சுற்றுலாத்துறை பல்வேறு வசதிகளை அளித்து வருகிறது. அந்த வகையில் புதிய வசதியை அறிவித்துள்ளது. அதன்படி, மூணாறு அருகே மாட்டுப்பட்டி, குண்டலை, மாட்டுப்பட்டி அருகே எக்கோ பாயிண்ட், அடிமாலி அருகே செங்குளம் பகுதிகளில் அணைகள் உள்ளன. அந்த அணைகளில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து வருகிறார்கள். மின்சாரத்துறையை சார்ந்த சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கீழ் உள்ள இந்த அணைகளை பார்வையிடவும், அங்கு படகு சவாரி செய்யவும் ஆன்லைன் மூலம் சுற்றுலா பயணிகள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கலாம் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மாட்டுப்பட்டி, குண்டலை, எக்கோ பாயிண்ட், செங்குளம் அணைகளை காலை 9.15 மணி முதல் மாலை 5.15 மணி வரை சுற்றுலா பயணிகள் பார்வையிடவும், படகு சவாரி செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதற்காக www.keralahydeltourism.com என்ற ஆன்லைன் மூலம் சுற்றுலா பயணிகள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த உத்தரவு கடந்றத ஜூலை 24ம் தேதி முதல் அமலுக்கு வந்திருக்கிறது
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்காதவர்கள், சம்பந்தப்பட்ட அணைக்கட்டுகளின் நுழைவுவாயிலில் உள்ள கியூஆர்கோடில் ஸ்கேன் செய்து பணம் செலுத்திய பிறகு அணைகளை பார்வையிடலாம் என்றும் அந்த அணைகளில் படகு சவாரி செய்யலாம் என்றும் மின்சாரத்துறை சுற்றுலா கழகம் மகிழ்ச்சியான செய்தியை அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications