தமிழகத்தில் மீண்டும் மலையேற்றப் பயணம் மேற்கொள்ள அனுமதி? கோவையில் டிரக்கிங் செல்ல 4 இடங்கள்
கோவை: தமிழகத்தில் மீண்டும் மலையேற்றப் பயணம் மேற்கொள்ள அனுமதி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் கணிசமாக வனப்பகுதிகள் உள்ளன. நீலகிரி மாவட்டத்தை இணைக்கும் இந்த வனப்பகுதிகளில் மலையேற்றதிற்கு ஏற்ற சிறந்த சுற்றுலா தலங்களும் உள்ளன. அந்த வகையில் கோவை வனக்கோட்டத்தில் 4 இடங்களில் மலையேற்றப் பயணத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.
தேனி மாவட்டம் குரங்கணி பகுதியில் கடந்த 2018ம் ஆண்டு நடந்த தீ விபத்துக்கு பிறகு, தமிழகத்தில் மலையேற்றப் பயணம் செய்ய அதிரடியாக தடை விதிக்கப்பட்டது. தீ விபத்து நடந்த குரங்கணி டூ கொழுக்குமலை பாதை உலகப்புகழ் பெற்ற டிரக்கிங் பாதையாகும். இதேபோல் குரங்கணி, டாப் ஸ்டேசன் டிரக்கிங் பாதையும் மலையேற்றத்தை விரும்புவோருக்கு பிடித்தமான பாதையாகும். மூணாறு சுற்றுலா செல்லும் பலரும் இந்த பாதையில் 2018 வரை டிரக்கிங் சென்று வந்தனர்.

ஆனால் அப்போது ஏற்பட்ட காட்டுத்தீ சுற்றுலா பயணிகளின் கனவை சிதைத்தது. அதன்பிறகு தமிழ்நாட்டில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைகளில் எங்குமே மலையேற்றம் செல்ல அனுமதி இல்லை.. டிரக்கிங் செல்வது தடை விதிக்கப்பட்டது. கடந்த ஆறு ஆண்டுகளாக மலையேற்றத்திற்கு அனுமதி இல்லாத நிலையில், பாதுகாப்பான முறையில் மலையேற்றப் பயணத்துக்கு அனுமதிக்க வேண்டும் என்று வன ஆர்வலர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தி வந்தார்கள்.
மலையேற்றத்திற்கு மீண்டும் அனுமதி: இதையடுத்து தமிழகத்தில் மீண்டும் மலையேற்றப் பயணம் மேற்கொள்ள அனுமதி அளிக்க அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி ஒவ்வொரு வனக்கோட்டத்திலும் சிறந்த இடங்களில் பாதுகாப்பான மலையேற்றத்திற்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
வனத்துறை முடிவு : கோவை வனக்கோட்டத்தை பொறுத்தவரை கோவை, மதுக்கரை, போளுவாம்பட்டி, பெரியநாயக்கன்பாளையம், காரமடை, மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை ஆகிய 7 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களுக்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகளும், அடர்ந்த காடுகளும், புகழ் பெற்ற திருக்கோயில்களும் உள்ளன. இந்நிலையில் கோவை கோட்டத்துக்கு உட்பட்ட வனப்பகுதியில் எந்த பகுதியில் மலையேற்ற பயணத்துக்கு அனுமதி அளிக்கலாம் என கோவை மண்டல வனப்பாதுகாவலர் ராமசுப்பிரமணியம் மற்றும் வனத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வந்தார்.
நான்கு இடங்கள்: அந்த ஆய்வின் முடிவில், கோவை வனக்கோட்டத்தில் நான்கு இடங்களில் மலையேற்றப் பயணத்துக்கு அனுமதி அளிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஆனால் இந்த டிரக்கிங் பயணத்திற்கு கண்டிப்பாக கட்டணம் செலுத்த வேண்டும். எந்தெந்த பகுதிகளுக்கு எவ்வளவு கட்டணம் என்பதும், நேரம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று கோவை மண்டல வனத்துறை தெரிவித்துள்ளது.
கோவை மலையேற்ற இடங்கள்: இது குறித்து கோவை மாவட்ட வனத்துறை அதிகாரிகள் கூறும் போது, "கோவை வனச்சரகத்துக்கு உட்பட்ட சேம்புக்கரையில் இருந்து பெருமாள்முடி என்கிற இடத்திற்கும், போளுவாம்பட்டி வனச்சரகத்தில் சாடிவயலில் இருந்து கேரள எல்லையில் உள்ள சிறுவாணிக்கும், மேட்டுப்பாளையம் வனச்சரகத்தில் கல்லாறு முதல் பர்லியாறு வரையிலும் மற்றும் ஒரு பகுதியும் என 4 இடங்களில் மலையேற்ற பயணம் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.
இரண்டு குழுக்கள்: ஆனால் இந்த நான்கு இடங்களிலும் எவ்வளவு தூரம் செல்வது, டிரக்கிங் பயணத்திற்கான கட்டணம் எவ்வளவு என்பது குறித்து விரைவில் கோவை வனத்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்படும். ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 2 குழுக்கள் மட்டுமே மலையேற்றம் செல்ல அனுமதி அளிக்கப்படும். ஒரு குழுவில் 14 பேர் இருப்பார்கள். இதற்கு முன்பதிவு கட்டாயம் ஆகும். காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மலையேற்றத்திற்கு அழைத்து செல்லப்படுவார்கள்.
மலைவாழ் மக்கள் வருவார்கள்: இதற்காக மலைவாழ் மக்களை தேர்வு செய்து அவர்களுக்கு பயிற்சியும் அளித்து வருகிறோம். மலையேற்ற பயணம் செல்ல விரும்புபவர்கள் முன்பதிவு செய்த பின்னர், குறிப்பிட்ட பகுதிக்கு அழைக்கப்படுவார்கள். அங்கு வனத்துறையினர் மற்றும் மலைவாழ் மக்கள் அவர்களை மலையேற்ற பயணம் மேற்கொள்ள அழைத்துச் செல்வார்கள்.
மலைப்பகுதியில் கொட்டகை: மலையேற்ற பயணத்தின்போது மழை பெய்தால், பாதுகாப்பான பகுதியில் ஒதுங்கி நிற்க சிறு சிறு கொட்டகையும் அந்த பகுதிகளில் அமைக்கப்படும். அத்துடன் மலையேற்றம் செல்பவர்களுக்கு உடல்சக்தி குறைந்தால் அவர்களுக்கு கொடுப்பதற்காக சத்து நிறைந்த குளுக்கோஸ் உள்ளிட்ட பொருட்கள் எடுத்துச் செல்லப்படும். இதற்கான வழிகாட்டல் விதிமுறைகள் விரைவில் அறிவிக்கப்படும்" என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications