பாஜகவுடன் கூட்டணி ஏன்? அதிமுகவின் பிளான் இதுதானாம்.. போட்டுடைத்த எடப்பாடி.. உற்று கவனிக்கும் திமுக
திருநெல்வேலி: ‛‛ஸ்டாலின் வேண்டுமென்றே திட்டமிட்டு மதத்தின் அடிப்படையில் பிரித்துப் பேசுகிறார். 1999 மற்றும் 2001 தேர்தல்களில் திமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சியிலும் பங்கேற்றது. அப்போது பாஜக நல்ல கட்சி. நாம் கூட்டணி வைத்தால் மட்டும் அது மதவாத கட்சி. எங்களுக்கு கூட்டணி வேறு. கொள்கை வேறு. திமுக கொள்கையை அடமானம் வைக்கும் கட்சி. அதிமுக ஒருபோதும் கொள்கையில் இருந்து மாறமாட்டோம். வாக்குகள் சிதறக்கூடாது என்பதற்காக அமைக்கப்படுவது கூட்டணி'' என்று சபாநாயகர் அப்பாவு வென்ற ராதாபுரம் தொகுதியில் எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.
அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலையொட்டி அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடிபழனிச்சாமி தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். 'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' எழுச்சிப்பயணத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று தூத்துக்கு மாவட்டம் திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் ஆகிய தொகுதிகளில் மக்களை சந்தித்துப் பேசினார்.

அதன்பிறகு திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் தொகுதிக்குட்பட்ட பணக்குடி பேருந்து நிலையம் அருகே கூடியிருந்த மக்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
"ராதாபுரம் மக்கள் அனைவரும் இங்கு குழுமியிருப்பதைக் காண்கையில், அடுத்தாண்டு தேர்தலில் நம் வேட்பாளர் வெற்றி பெறுவார் என்பது உறுதியாகிறது. அதிமுக வெற்றிக்கு இந்த மக்கள் வெள்ளமே சாட்சி. இந்த தொகுதி சட்டமன்றப் பேரவை சபாநாயகருடைய தொகுதி. திமுகவின் 50 மாத ஆட்சியில் ஒரே சாதனை கமிஷன், கலெக்ஷன், கரப்ஷன் மட்டுமே. மக்கள் படும் வேதனை அவர்களுக்குத் தெரிவதில்லை. நான் எதிர்க்கட்சித் தலைவராக இருப்பதால் மக்கள் பிரச்னையை சட்டசபையில் பேசினால், மைக்கை துண்டித்துவிடுவார். என்ன நியாயம்? உங்களுடைய கோரிக்கைகளை எடுத்துச்சொல்வதை அவர் விரும்புவதில்லை.
அதிமுக என்றைக்கும் சாதிக்கும் மதத்திற்கும் அப்பாற்பட்ட கட்சி. என்னுடன் எல்லா மதத்தையும் எல்லா சாதியையும் சேர்ந்தவர்கள் ஒரே மேடையில் நிற்கிறார்கள், இங்கு பாகுபாடு கிடையாது. ஆனால் ஸ்டாலின், வேண்டுமென்றே திட்டமிட்டு மதத்தின் அடிப்படையில் பிரித்துப் பேசுகிறார்.
1999 மற்றும் 2001 தேர்தல்களில் திமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சியிலும் பங்கேற்றது. அப்போது பாஜக நல்ல கட்சி. நாம் கூட்டணி வைத்தால் மட்டும் அது மதவாத கட்சி. எங்களுக்கு கூட்டணி வேறு, கொள்கை வேறு. திமுக கொள்கையை அடமானம் வைக்கும் கட்சி. அதிமுக ஒருபோதும் கொள்கையில் இருந்து மாறமாட்டோம். வாக்குகள் சிதறக்கூடாது என்பதற்காக அமைக்கப்படுவது கூட்டணி.
எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் அதிமுக செயல்படுகிறது. இன்பதுரை கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்தவர். அவருக்கு அதிமுகவில் பதவி கொடுக்கவில்லையா? இங்கு உழைப்பவர்களுக்குத்தான் மரியாதை.
திமுகவில் அப்படியல்ல, கருணாநிதி குடும்பத்தினர் மட்டும்தான் கட்சி, ஆட்சியில் இடம்பெற முடியும். அது குடும்பக் கட்சி. கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி என்று போகிறது. உதயநிதி என்ன செய்தார்? கட்சியில் உழைத்தவர்கள் பலரும் இருப்பது அவர்கள் கண்ணுக்குத் தெரியவில்லை. இதுதான் திமுக அதிமுகவுக்கும் உள்ள வித்தியாசம்.
ஜனநாயகம் உள்ள ஒரே கட்சி அதிமுக. இங்குதான் கிளைச் செயலாளர் கூட பொதுச்செயலாளர், முதல்வர் ஆக முடியும். திமுகவில் அப்படி யாராவது பேசினாலே பதவி பறிக்கப்படும். இப்படிப்பட்ட கட்சி தமிழ்நாட்டுக்குத் தேவையா? அதிமுக 10 ஆண்டு கால ஆட்சி இருண்ட ஆட்சி என்கிறார் ஸ்டாலின். உண்மையில் அதுதான் பொற்கால ஆட்சி. 17 மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொண்டுவந்தோம். ஸ்டாலின் ஆட்சிக்கு வந்து 50 மாதம் முடிந்துவிட்டது. ஒரே ஒரு மருத்துவக் கல்லூரியாவது கொண்டுவர முடிந்ததா? அதுக்குத் தில்லு வேண்டும்.
சட்டக்கல்லூரி, கலைக் கல்லூரி, பாலிடெக்னிக், ஐடி கல்லூரி என இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு கல்லூரிகளை திறந்தோம். ஏழை மாணவர்களும் பட்டப்படிப்பு படிக்கும் சூழல் உருவாக்கினோம். 2030ம் ஆண்டு உயர்கல்விக்கான மத்திய அரசின் இலக்கை 2019லேயே அடைந்துவிட்டோம். எங்கள் ஆட்சியா இருண்ட ஆட்சி,? அது ஒளிமயமான ஆட்சி. மாணவர்களுக்கு லேப்டாப் கொடுத்தோம். அதிமுக ஆட்சியில் அரசுப் பள்ளி மாணவர்களும் மருத்துவர் ஆக 7.5% உள் இடஒதுக்கீடு கொண்டுவந்தோம். இப்போது 2818 பேர் இலவசமாகப் படித்து மருத்துவர் ஆகிவிட்டனர். இதுதான் சாதனை.
ஏழை மக்களுக்கு நன்மை செய்யவே உருவாக்கப்பட்ட கட்சி அதிமுக. கொரோனா காலத்தில் மாணவர்களின் நலன் கருதி ஆல் பாஸ் போட்டோம். மாணவர்கள் முதல் தொழிலாளர்கள் வரை மன நிறைவுபெறுகின்ற வகையில் ஆட்சி செய்தோம். ஓராண்டு காலம் ரேஷன் கடையில் விலையில்லாமல் பொருட்கள் கொடுத்தோம். ஏழை மக்கள், முதியோர், கர்ப்பிணிகள் இருக்கும் இடத்துக்கே சென்று சுடச்சுட உணவு கொடுத்தோம். வேலைவாய்ப்பு கொடுக்கும் வகையில் இருமுறை உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தி ஒப்பந்தங்கள் போட்டு வேலைவாய்ப்பை உருவாக்கிக்கொடுத்தோம்.
திமுகவும் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தியது. அதற்கு வெள்ளை அறிக்கை கேட்டேன், கொடுக்கவே இல்லை. ஸ்டாலினும் வெளிநாடு போனார், அங்கு சைக்கிள் ஓட்டினார். வெளிநாட்டுக்குச் சென்று தமிழ்நாடு தொழிலதிபரை அங்கு அழைத்து ஒப்பந்தம் போடுறார். சமீபத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருந்தபோது, மருத்துவமனையில் அதிகாரிகளுடன் மீட்டிங் நடத்தினார், எவ்வளவு பெரிய நாடகம் நடத்துகிறார்.
கட்சிக்கு பொதுமக்களிடம் செல்வாக்கு இழந்துவிட்டதால் மருத்துவமனையிலும் வேலை செய்வது போன்று நாடகம் போட்டிருக்கிறார். தேர்தல் நேரத்தில் 525 அறிவிப்புகள் வெளியிட்டனர். அவற்றில் 98% நிறைவேற்றினாராம். உண்மையில் 10% மட்டுமே நிறைவேற்றினார். அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் அமல்படுத்தவில்லை, பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரம் ஆக்கவில்லை. அரசு ஊழியர்கள் காலிப்பணியிடங்கள் ஐந்தரை லட்சம் நிரப்புவோம் என்றனர். ஆனால், 50 ஆயிரம் பணியிடங்கள் மட்டுமே நிரப்பினார். அதேநேரம், 75 ஆயிரம் பேர் ஓய்வுபெற்றுவிட்டனர். காலிப்பணியிடத்தில் கூடுதலாக 25 ஆயிரம் பேர் சேர்ந்துவிட்டனர். அதிமுக ஆட்சிக்கு வந்ததும் இதற்கு தீர்வு காணப்படும்.
இந்தியாவிலேயே சிறப்பான ஆட்சி செய்து பல தேசிய விருதுகளைப் பெற்ற ஒரே ஆட்சி அதிமுக அரசு.
திமுக அரசு எப்போது அமலாக்கத்துறை வந்து கைது செய்யும் என்று தூக்கத்தைத் தொலைத்துவிட்டார்கள். எந்த மந்திரிகளும் தூங்குவதே இல்லை. அவ்வளவு ஊழல் தாண்டவமாடுகிறது. அமைச்சர்கள் பயந்து நடுங்கி வாழ்கிறார்கள். ஸ்டாலின் ஆட்சியில் விளம்பரத்துக்கு மட்டும் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் செலவழித்திருக்கிறார். விளம்பர மாடல் அரசு தேவையா?
மின்கட்டணம் வசூலிப்பு முறை மாற்றவில்லை, கேஸ்மானியம் கொடுக்கவில்லை, மாணவர் கல்விக் கடன் ரத்து செய்யவில்லை, 100 நாள் வேலைத்திட்டம் 150நாளாக உயர்த்தவில்லை. மக்களுக்கு 46 பிரச்னைகள் இருப்பதாக நோட்டீஸ் அடித்து வீடுவீடாக வருகிறார்கள். 46 பிரச்னைகள் இருப்பது தெரிந்தும் ஏன் நான்காண்டுகளில் தீர்க்கவில்லை? அடுத்ததாக நலம் காக்கும் ஸ்டாலின்னு புதிதாக ஒன்றைத் தொடங்கி இருக்கிறார்.
அதிமுக ஆட்சியில் இதையெல்லாம் எப்போதோ செய்து முடித்துவிட்டோம். அதிமுக ஆட்சிக்கு வந்தால் பனையேறும் தொழிலாளிகளுக்கும் காப்பீடு திட்டத்தில் பாதுகாப்பு கொடுக்கப்படும் என வாக்குறுதி அளிக்கிறேன். பனையேறும் தொழிலாளர்களுக்கு தேவையான உபகரணங்கள் அரசாங்கமே இலவசமாக கொடுக்கப்படும். அதிமுக ஆட்சியில் ராதாபுரம் தொகுதிக்கு நிறைய திட்டங்களைக் கொடுத்திருக்கிறோம். மீனவர் கோரிக்கைக்காக தூண்டில் வளைவு, மீன் இறங்குதளம், சுற்றுலாத்தளங்கள், தாலுகா, அரசு மருத்துவமனை தரம் உயர்த்தல், மேம்பாலங்கள், ரயில்வே பாலங்கள், அம்மா திருமண மண்டபம், தீயணைப்புத்துறைக்கு கட்டிடம், சுகாதார நிலையம், பள்ளிகள் தரம் உயர்த்துதல், தடுப்பணை என சொல்லிக்கொண்டே போகலாம். அதிமுக கட்சி உங்கள் கட்சி. அரசு அமைந்தால் மக்கள் அரசாங்கம். அதிமுக கூட்டணி வேட்பாளருக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள். மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம். ஸ்டாலின் மாடல் திமுக அரசு ஃபெயிலியர் மாடல் அரசு, பைபை ஸ்டாலின்" என்று கூறினார்.












Click it and Unblock the Notifications