கனவில் கூட நினைக்க முடியாது.. கொடைக்கானல் சுற்றுலா போறீங்களா.. பள்ளங்கி கோம்பை சாலையில் உஷார்
கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்வோர் சாலைகளில் மிகவும் கவனமாக செல்ல வேண்டும். குறிப்பாக காரில் செல்வோர், மலைப்பகுதியில் எப்படி செல்ல வேண்டுமோ.. அப்படி பயணிக்க வேண்டும்.. சமவெளியில் செல்வது போல் அசுர வேகத்தில் பயணிக்க விரும்பினால் சிக்கலாகும். குறிப்பாக கொடைக்கானல் மலையில் பள்ளங்கி கோம்பைக்கு செல்லும் சாலையில் செல்லும் போது மிகவும் கவனமாக செல்ல வேண்டும். என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். சனி, ஞாயிறு உள்ளிட்ட வார இறுதி நாட்களில் மக்கள் கூட்டம் எப்போது அலைமோதும். கோடைக்காலங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகளுக்கு மிகவும் பிடித்த இடமாக கொடைக்கானல் இருக்கிறது. கொடைக்கானலில் சுற்றிபார்க்க ஏராளமான இடங்கள் உள்ளன.

செயற்கையாக வடிவமைக்கப்பட்ட நட்சத்திர ஏரி, பேரிஜம் ஏரி, குணா குகை, மன்னவனூர் ஏரி, பூம்பாறை முருகன் கோவில், கோக்கர்ஸ் வாக், கொடைக்கானல் பிரயண்ட் பூங்கா, செட்டியார் பூங்கா,குறிஞ்சி ஆண்டவர் கோவில், பசுமை பள்ளத்தாக்கு , மாதா ஆலயம், ரோஜா பூங்கா, புலிவால் அருவி, வெள்ளிநீர் வீழ்ச்சி என பல பகுதிகள் உள்ளன. கொடைக்கானலில் சுற்றுலா தலங்களை தாண்டி, பள்ளங்கி, பூண்டி, கூக்கால், கிளாவரை,பூம்பாறை, வில்பட்டி, பன்னைக்காடு, ஊத்து உள்பட பல்வேறு கிராமங்கள் அமைந்துள்ளன.
கொடைக்கானலில் நகரை ஒட்டி அமைந்துள்ள பகுதி பள்ளங்கி கோம்பை, வில்பட்டி. பொதுவாக பள்ளங்கி கோம்பைக்கு செல்லும் சாலை சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு இறக்கமாகவும், வளைவுகளாகவும் காணப்படும். அங்கு கார்களில் செல்வோர் மிகவும் கவனமாக செல்ல வேண்டும். இருசக்கர வாகனத்தில் வருவோரும் மிகவும் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும். ஏனெனில் அந்த பகுதி விபத்து அபாயம் அதிகம் உள்ள பகுதியாகும். அண்மையில் நடந்த விபத்து பற்றி பார்ப்போம்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த 27 வயதாகும் ராகேஷ் (வயது 27), தனது நண்பர்களான பருத்திகோட்டையை சேர்ந்த விஜய் (27), நெடுவாக்கோட்டையை சேர்ந்த பிரேம்குமார் மற்றும் 2 பேருடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தார். பிரேம்குமார் உள்பட 3 பேர் சொகுசு காரிலும், ராகேசும், விஜய்யும் மோட்டார் சைக்கிளிலும் மன்னார்குடியில் இருந்து புறப்பட்டு நேற்று முன்தினம் இரவு கொடைக்கானலுக்கு வந்தார்கள்.
பின்னர் அவர்கள் கொடைக்கானல் அருகே பள்ளங்கி கோம்பை நோக்கி சென்று கொண்டிருந்தார்கள். காரை பிரேம்குமாரும், மோட்டார் சைக்கிளை விஜய்யும் ஓட்டினர். மோட்டார் சைக்கிள் முன்னால் செல்ல, கார் பின்னால் வந்து கொண்டிருந்தது.. இந்தநிலையில் பள்ளங்கி கோம்பை அருகில் வந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. அத்துடன் சாலையில் அந்த கார் கவிழ்ந்தது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த ராகேசும், விஜய்யும் அருகில் இருந்த பாறை மீது தூக்கிவீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். காரில் வந்த 3 பேரும் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்கள்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் கொடைக்கானல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காயமடைந்த 5 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் ராகேஷ் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது. விஜய் உள்பட 4 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கொடைக்கானல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.












Click it and Unblock the Notifications