சற்றுமுன் வந்த அலர்ட்.. அடுத்த 3 மணி நேரம் சென்னை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் மழை கொட்டப்போகுது
சென்னை: தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து வெளியான அறிவிப்பில், “அடுத்த 3 மணி நேரம் ராணிப்பேட்டை, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், வேலூர், தருமபுரி, திருவண்ணாமலை, கடலூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும். புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. மழை காரணமாக சில இடங்களில் தண்ணீர் தேங்கும் வாய்ப்பு உள்ளது. சாலை வழுக்கும் தன்மையுடன் இருக்கும். சில இடங்களில் வாகன நெரிசல் ஏற்படலாம். பழுதான கட்டிடங்கள் சேதமடையும் வாய்ப்பு இருக்கிறது.” என எச்சரிக்கப்பட்டு உள்ளது.

முன்னதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், “நேற்று (01-12-2023) தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று (02-12-2023) காலை 0530 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, இன்று (02-12-2023) காலை 0830 மணி அளவில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புதுச்சேரிக்கு கிழக்கு-தென்கிழக்கே சுமார் 440 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னைக்கு கிழக்கு-தென்கிழக்கே சுமார் 450 கிலோமீட்டர் தொலைவிலும், நெல்லூருக்கு (ஆந்திரா) தெற்கு- தென்கிழக்கே சுமார் 580 கிலோமீட்டர் தொலைவிலும், பாபட்லாவிற்கு (ஆந்திரா) தெற்கு-தென்கிழக்கே சுமார் 670 கிலோமீட்டர் தொலைவிலும், மசூலிபட்டினத்திற்கு (ஆந்திரா) தெற்கு - தென்கிழக்கே சுமார் 670 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டு ள்ளது.
இது மேலும் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து 03-12-2023 வாக்கில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுபெறக்கூடும். அதன் பிறகு வடமேற்கு திசையில் நகர்ந்து 04-12-2023 முற்பகல் தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவக்கூடும். பிறகு கடலோரப்பகுதிகளை ஒட்டி வடக்கு திசையில் நகர்ந்து 05-12-2023 முற்பகல் தெற்கு ஆந்திரா கடற்கரையை நெல்லூருக்கும் மசூலிபட்டினத்திற்கும் இடையே புயலாக கடக்கக்கூடும்.
02.12.2023: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
03.12.2023: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். பொதுவாக மிதமான மழை பெய்யக்கூடும், ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கன- மிக கனமழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications