சென்னையில் அரை லிட்டர் பாலுக்காக அலைந்த தருணம்.. 40 மணிநேர கரண்ட் கட்.. புரட்டி போட்ட பெருமழை
சென்னை: மிக்ஜாம் புயல் சென்னைவாசிகளுக்கு மரணபயத்தை காட்டி விட்டது. பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது சென்னை பெருநகரம். புரட்டி போட்ட பெருமழை மக்களின் இயல்பு வாழ்க்கையை முற்றிலும் பாதித்துள்ளது. அரை லிட்டர் பால் கூட கிடைக்காமல் அதிகாலை முதல் மயிலாப்பூரில் அலைந்த தருணங்கள் என்றெக்கும் மறக்கமுடியாது. மிக்ஜாம் மிரட்டிய தருணங்களை உங்களுடன் பகிர்கிறேன்.
சென்னைவாசிகளுக்கு மழையோ, புயலோ பெரிய விசயமில்லை. 2004ஆம் ஆண்டு சுனாமியை பார்த்தவர்கள். 2015ஆம் ஆண்டு நூற்றாண்டுகளில் பெய்யாத மழையால் ஏற்பட்ட பெருவெள்ளத்தையும் பார்த்தவர்கள். தண்ணீருக்காகவும் உணவுக்காகவும் அப்போது தவித்து அதில் இருந்து பல பாடங்களை கற்றுக்கொண்டவர்கள். மின்சாரம் இன்றி மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் வாழ பழகிக்கொண்டவர்கள் சென்னைவாசிகள்.

வர்தா புயல் வந்த போதும் அதில் இருந்து மீண்டு வந்தவர்கள் சென்னைவாசிகள். ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை காலத்தில் புயலை சந்தித்தாலும் எதிர்பாராமல் கொட்டித்தீர்த்த பெருமழை பல சங்கடங்களையும் சேர்த்தேதான் கொண்டு வந்து விடுகிறது.
மிக்ஜாம் புயல் சென்னைக்கு அருகே மையம் கொண்டதால் டிசம்பர் 3ஆம் தேதி ஞாயிறு மாலை நேரத்தில் தொடங்கிய பெருமழை டிசம்பர் 4ஆம் தேதி திங்கட்க்கிழமை இரவு வரைக்கும் கொட்டித்தீர்த்தது. விடாமல் கொட்டித்தீர்த்த பெருமழையால் எங்கும் வெள்ளக்காடானது. ஞாயிறு நள்ளிரவு முதலே பல பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. செல்போன் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டது.
மயிலாப்பூரில் பொதுவாகவே மின்சாரம் தடைபடாது. இந்த முறை பெருமழை தொடங்கும் முன்பே கரண்ட் கட் செய்யப்பட்டது. நாங்கள் வசிக்கும் அபார்ட்மெண்ட் மின்சாரம் இல்லாத நிலையில் உணவுக்காக இருந்த பொருட்களை வைத்து சமாளித்தோம். நேரம் செல்ல வாட்டர் டேங்கில் நிரப்பப்பட்டிருந்த தண்ணீர் காலியாகத் தொடங்கியது. மாடியில் வசிப்பவர்களுக்கு கீழே அடி பைப்பில் இருந்து தண்ணீர் சுமந்து கொண்டு வந்து சமாளிக்க வேண்டியதாகி விட்டது.
விடாமல் 30 மணி நேரம் கொட்டித்தீர்த்த மழையால் எங்கும் வெள்ளக்காடாக காட்சி அளித்தது. மயிலாப்பூரில் எப்போதுமே வெள்ளம் வராது. ஆனால் இந்த முறை விடாமல் கொட்டிய மழைக்கு பல பகுதிகளில் வெள்ளம் தேங்கியது. மின்சாரம் இன்றி மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் இரவு கழிந்தது. விடிந்த பிறகு வெளிச்சம் தென்படவே, கொஞ்சம் நிம்மதி ஏற்பட்டது. எப்போதுமே வழக்கமாக பால் வாங்கும் கடைக்கு போனால் பால் வரவில்லை என்ற பதில் கிடைத்தது.
காலையில் எழுந்து டீ குடிக்கா விட்டால் தலைவலிதான் என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டே மயிலாப்பூரை ஒரு ரவுண்ட் அடித்தோம். ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்து பயமுறுத்தியது. பல பகுதிகளில் தண்ணீர் வடிந்திருந்தாலும் திருவள்ளுவர் சிலை அருகில் இருந்து தண்ணீர் வெள்ளமாக தேங்கி நின்றது. கரண்ட் சப்ளை இல்லாத காரணத்தால் கையில் பக்கெட்டுகள், குடத்தோடு பலரும் தண்ணீர் தேடி அலைந்தனர்.
நமக்கு குடிதண்ணீர் பிரச்சினை இல்லை. பால்தான் பிரச்சினை கிடைக்க வேண்டுமே என்ன செய்வது என்று பல கடைகள் தேடியும் ஆவின் பால் வரவேயில்லை என்ற பதில்தான் கிடைத்தது. தி. நகரில் இருந்து நண்பரிடம் அழைப்பு வரவே, அங்கே பால் கிடைக்கிறதா என்று கேட்டதற்கு பதிலாக தனியார் பால் அரை லிட்டர் 45 ரூபாய்க்கு கிடைப்பதாக சொன்னார். மழை நீர் தேங்கியிருப்பதால் பல பகுதிகளுக்கு சுற்றிப்போய் வாங்கி வந்ததாக கூறினார் நண்பர்.
சரி முதலில் ஒரு டீ கடையை தேடுவோம் பிறகு பால் வாங்குவோம் என்று முடிவு செய்து பழக்கமான டீ கடைக்கு போனால் அங்கே நீண்ட க்யூ. சாதாரண நாட்களில் ஒரு காபி 10 ரூபாய் என்றால் இன்றைக்கு அதே கடையில் 15 ரூபாய் என்று விற்பனையானது. ஹோட்டலில் உணவு வாங்கப்போனால் டோக்கன் சிஸ்டம். ஒரு வடை 40 ரூபாய் என திடீர் விலை உயர்வு கண்ணை கட்டியது. எங்கும் க்யூ டிபார்ட்மெண்ட் ஸ்டோர் போய் ப்ரட் பாக்கெட் வாங்கலாம் என்றால் துடைத்து வைத்திருந்தார்கள்.
ஒருவழியாக ஒரு ரவுண்ட் வந்து அருகில் இருந்த தனியார் பால் கடைக்கு போனால் அங்கே கூட்டம். அத்தனை கூட்டத்திலும் வழக்கமான விலைக்கே கொடுத்தார்கள். ஆவின் பால் எங்குமே கிடைக்காத நேரத்தில் தனியார் பால் மட்டும் இந்த மழை வெள்ளத்திலும் எப்படி சரியாக கடைக்கு வந்து சேர்ந்தது என்பதுதான் ஆச்சரியம்.
ஒருவழியாக பால் வாங்கி வந்து டீ போட்டு குடித்த பிறகுதான் தலைவலி சரியானது. கரண்ட் எப்போ வரும் என்ற கேள்விதான் தெரு முழுக்க பேச்சாக இருந்தது. இருந்த பொருட்களை வைத்து சமைத்து சாப்பிட்டாலும் தண்ணீர் வேண்டுமே என்ன செய்வது என்று யோசித்து கொண்டிருந்த நேரத்தில் இன்னும் சற்று நேரத்தில் வந்து விடும் என்று சொல்லி சொல்லியே ஒரு வழியாக 40 மணி நேரம் கழித்து மின்சாரம் வந்தது. முதல் வேலையாக மோட்டர் போடுங்க தண்ணீர் டேங்க்ல ஏத்தணும் என்று சொன்னபிறகுதான் நிம்மதி வந்தது.
சென்னையில் ஒவ்வொரு முறை பெருமழை வரும்போதெல்லாம் ஏதாவது ஒரு பாடத்தை கற்றுக்கொடுத்து விட்டு செல்கிறது. தண்ணீர் சிக்கனத்தையும் பால் இல்லாமல் டீ குடித்து பழகிக்கொள்வதன் அவசியத்தையும் கற்றுக்கொடுத்து விட்டது மிக்ஜாம் புயல் மழை.












Click it and Unblock the Notifications