உதயநிதிக்கு வாய் துடுக்கு அதிகம்... நிர்மலா சீதாராமனுக்கு ஆதரவாக வரிந்து கட்டும் அதிமுக ஜெயக்குமார்!
சென்னை: தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வாய் துடுக்கு அதிகம்; மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சொல்வதைப் போல உதயநிதி ஸ்டாலின் பொறுப்புடன் பேச வேண்டும் என அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் மழை வெள்ளம் பேரழிவை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக பேசிய தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், உங்க அப்பன் வீட்டு பணத்தையா கேட்கிறோம்? தமிழ்நாட்டு மக்கள் செலுத்திய வரிப்பணத்தில் இருந்துதானே பேரிடர் நிதி கேட்கிறோம் என காட்டமாக கூறியிருந்தார்.

நிர்மலா சீதாராமன் விவகாரம்: இதற்கு டெல்லியில் பதிலளித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், அமைச்சர் உதயநிதியை கடுமையாக விமர்சித்தார். உதயநிதி ஸ்டாலினின் பாஷை சரியாக இல்லை; பொறுப்புடன் பேச வேண்டும் என பதிலடி தந்தார். அமைச்சர் நிர்மலா சீதாராமனின் இந்த பதிலடியும் தற்போது மிக கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டிருக்கிறது. தமிழ்நாடு அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கிய தமிழ்நாட்டு அமைச்சர்கள், பல்வேறு இயக்கத்தினர் நிர்மலா சீதாராமனை கடுமையாக தாக்கி வருகின்றனர். தமிழ்நாட்டுக்கு எதிரி போல தமது உடல் மொழியை வெளிப்படுத்துகிறார் நிர்மலா சீதாராமன் எனவும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி வருகை: இந்த நிலையில் தூத்துக்குடி வெள்ள பாதிப்புகளை பார்வையிட அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை மறுநாள் வருகை தருகிறார். நிர்மலா சீதாராமன் வருகையும் விமர்சனங்களை உருவாக்கி உள்ளது.
நிர்மலா சீதாராமனுக்கு அதிமுக ஆதரவு: தற்போது பாஜகவை சேர்ந்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், டெல்லியில் முன்வைத்த அத்தனை விமர்சனங்கள், கருத்துகளுக்கும் அண்ணா திமுகவும் ஆதரவு தெரிவித்துள்ளது. பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்ட அதிமுகதான் இப்போது நிர்மலா சீதாராமனின் விமர்சனங்களையும் ஆதரிக்கிறது.
வெள்ளை அறிக்கை: சென்னையில் அதிமுக மூத்த தலைவரான முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சென்னையில் ரூ4,000 கோடி செலவு செய்ததாக முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். ஆனால் உள்ளாட்சித் துறை அமைச்சர் வேறு ஒன்றை சொல்கிறார். ஆகையால் மக்களுக்கு உண்மை என்ன என்பது தெரிய வேண்டும் என்பதற்காகவே இது தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி இருந்தார். இதனையேதான் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும் தெரிவித்துள்ளார். வெள்ளை அறிக்கை கொடுப்பதில் என்ன உங்களுக்கு பயம்? உண்மையை மூடி மறைக்கத்தான் வெள்ளை அறிக்கை தர மறுக்கிறது திமுக அரசு.
உதயநிதி ஸ்டாலின்:தென் மாவட்டங்களில் வாய்க்கால், குளங்களை முறையாக தூர் வாரி இருந்தால் இவ்வளவு பெரிய சேதம், உயிரிழப்பு ஏற்பட்டிருக்காது. ஹெலிகாப்டரில் சாப்பாடு போடும் நிலைமை வந்திருக்காது. தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி நேற்று முளைத்த காளான். அவருக்கு வாய் துடுக்கு அதிகம். வாய் துடுக்கு அதிகம் என்பதால் வாய்க்கு வந்தபடி பேசக் கூடாது. ஒரு பொறுப்பா கருத்துகளை சொல்ல வேண்டும். அந்த பக்குவம் இல்லாத அரசியல்வாதி உதயநிதி. வாயை கொடுத்து வம்பில் மாட்டிக் கொண்டார் உதயநிதி ஸ்டாலின். அமைச்சர் நிர்மலா சீதாராமன் விமர்சித்த உடன் பல்டி அடிக்கிறார் உதயநிதி ஸ்டாலின். இவ்வாறு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications