பெங்களூரில் குறையும் வெப்பம்.. வரும் நாட்களிலும் மழை காத்திருக்கு.! செம
பெங்களூர்: சுமார் ஆறு மாதங்களாகப் பெங்களூரில் வறண்ட வானிலை நிலவிய நிலையில் இப்போது இரண்டு நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. வரும் நாட்களில் பெங்களூரில் மழை தொடரும் என்றே கூறப்பட்டுள்ளது.
நமது அண்டை மாநிலமான கர்நாடகாவில் கடந்த பருவமழை காலத்தில் போதியளவில் மழை பெய்யவில்லை. இதனால் இந்தாண்டு அங்கு வறண்ட வானிலையே நிலவி வந்தது. வெப்பமும் உச்சம் தொட்டதால் பெங்களூர்வாசிகள் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டனர்.

மழை: இந்தச் சூழலில் தான் நேற்றைய தினம் மதியம் பெங்களூர் நகரை மழை மேகங்கள் சூழ்ந்தன. பெங்களூரில் கடைசியாக நவ. மாதம் நல்ல மழை பெய்து இருந்தது. அதன் பிறகு சுமார் 5 மாதங்களுக்குப் பிறகு இப்போது தான் மழை பெய்துள்ளது.
பெங்களூர் நகரில் பெரும்பாலான பகுதிகளில் நேற்று மழை பெய்தது. இரவு 9.30 மணி வரை நாயண்டஹள்ளியில் அதிகபட்சமாக 29.5 மிமீ மழையும் ராஜராஜேஸ்வரி நகரில் 29 மிமீ மழையும் பதிவாகியுள்ளதாகக் கர்நாடக மாநில இயற்கை பேரிடர் கண்காணிப்பு மையத்தின் வருண மித்ரா தெரிவித்துள்ளது. நகரின் மற்ற 25 வார்டுகளில் 10 மிமீக்கு மேல் மழைப் பதிவாகியுள்ளது.
கோடை வெப்பம்: பெங்களூரில் வரலாற்றில் இல்லாத அளவுக்குக் கோடை வெப்பம் உச்சத்தில் இருந்த நிலையில், இந்த மழை சற்று நிம்மதியை அளித்துள்ளது. அதேநேரம் நகரில் வெப்பம் இன்னும் முழுமையாகக் குறையவில்லை. நேற்றைய தினம் பெங்களூரில் அதிகபட்சமாக 37 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி உள்ளது.
இது நகரின் சராசரி மே மாத வெப்பத்தைக் காட்டிலும் சுமார் நான்கு டிகிரி அதிகமாகும். இது தொடர்பாக மூத்த வானிலை ஆய்வாளர் கூறுகையில், "மதியம் அல்லது மாலை நேரத்தில் தான் மழை தொடங்குகிறது. இதனால் நகரத்தில் அதிகமான வெப்பம் தொடர்ந்து பதிவாகும்.. இருப்பினும், இந்த மழையின் காரணமாக இரவில் நிலவி வந்த வெப்பம் குறையும். நல்ல குளிரான வானிலை நிலவக்கூடும்" என்றார்.
மழை தொடரும்: அதேநேரம் பெங்களூர்வாசிகளை குஷிப்படுத்தி இருக்கும் இந்த கோடை மழை இத்துடன் முடிவுக்கு வராதாம். பெங்களூரில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மேகமூட்டமான வானிலையுடன் லேசான மழையும் தொடரும் என்று வானிலை மையம் கணித்துள்ளது. அதிகபட்ச வெப்பம் 38 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பம் 26 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மே 6ஆம் தேதிக்குப் பிறகு நல்ல மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் வரும் நாட்களில் பெங்களூர் வெப்ப நிலை கணிசமாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக அதிகாரிகள் மேலும் கூறுகையில், "வழக்கமாகப் பெங்களூரில் மே மாதத்தில் அதிக மழை பெய்யும்.. இந்தாண்டு மே மாதத்தில் அதிக நாட்கள் மழை பெய்யும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். குறிப்பாக வரும் நாட்களில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கிறோம்" என்றார்.
வானிலை: பெங்களூரில் இந்தாண்டு வெப்பம் மிக மோசமாக இருந்தது.. குறிப்பாக இரவு நேரங்களில் வழக்கத்தைக் காட்டிலும் அதிக வெப்பம் பதிவாகி இருந்தது. குறிப்பாகக் கடந்த மே 2ஆம் தேதி இந்தாண்டின் வெப்பமான இரவு பதிவாகி இருந்தது. அன்றைய தினம் பெங்களூரில் இரவு நேரத்திலேயே 24.8 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி இருந்தது. இந்தச் சூழலில் அங்குப் பெய்யும் மழை பெங்களூர்வாசிகளுக்கு நிம்மதி தருவதாக உள்ளது.












Click it and Unblock the Notifications