2015இல் கொட்டிய மழை நினைவிருக்கா.. தமிழ்நாடு வெதர்மேன் பரபர ட்வீட்.. இன்று வானிலை எப்படி இருக்கும்?
சென்னை: நேற்றிரவு சென்னையில் கனமழை கொட்டிய நிலையில், இப்போது மீண்டும் மழை ஆரம்பித்துள்ளது. இதற்கிடையே வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் ட்வீட் செய்துள்ளார்.
தலைநகர் சென்னையில் நேற்றிரவு கனமழை கொட்டி தீர்த்தது. மாலை ஆரம்பித்த மழை, இரவில் கனமழையாகக் கொட்டியது. நகர்ப் பகுதிகளிலும் சரி, புறநகர்ப் பகுதிகளிலும் சரி பல மணி நேரம் கனமழை கொட்டியது.

இதனால் பல்வேறு இடங்களிலும் நீர் தேங்கிய நிலையில், போக்குவரத்தும் கூட கடுமையாகப் பாதிக்கப்பட்டது. நகரில் தேங்கியுள்ள நீரை அகற்றச் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
மழை: இரவில் இப்படி பல்வேறு இடங்களிலும் கனமழை கொட்டிய நிலையில், அதன் பிறகு மழை கேப் விட்டிருந்தது. அதிகாலை நேரத்தில் பல இடங்களில் மழை இல்லாமல் இருந்தது. இதனால் மழை நீரை வெளியேற்றும் பணிகளும் தீவிரமாக நடந்து வந்தது. இந்தச் சூழலில் இப்போது சென்னையில் மீண்டும் மழை ஆரம்பித்துள்ளது. நகரில் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்ய ஆரம்பித்துள்ளது.
இதற்கிடையே சென்னையில் நிலவும் வானிலை தொடர்பாகத் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். காலையில் நகரில் பல்வேறு இடங்களிலும் மழை பெய்ய ஆரம்பித்துள்ளதாகத் தெரிவித்த அவர், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துளார்.
தமிழ்நாடு வெதர்மேன்: இது தொடர்பாக அவர் மேலும் தனது எக்ஸ் பக்கத்தில், "சரியாக அலுவலகம் செல்லும் நேரத்தில் சென்னையில் மீண்டும் மழை பெய்யத் தொடங்குகிறது. சென்னை ஈசிஆர், ஓஎம்ஆர், திருவள்ளூர் மாவட்டத்தில் காலை 8.30 மணிக்கு மழை தொடங்கும். முதலில் கடலுக்கு அருகில் உள்ள பகுதிகளில் மழை பெய்யத் தொடங்கி, பின்னர் நகரின் பிற பகுதிகளுக்கும் பரவும்" என்று பதிவிட்டுள்ளார்.
அதேபோல அவர் தனது மற்றொரு ட்வீட்டில், "செம்பரம்பாக்கத்தில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. இப்போது (காலை 8.15) 6000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சோழவரம் ஏரியிலும் தற்போது உபரி நீர் உள்ளது. நேற்று கனமழையால் ஏற்பட்ட டிராபிக் நெரிசல் என்பது கடந்த 2015 நவ. 23ஆம் தேதியை நினைவுபடுத்துகிறது. அன்றைய தினம் 100-150 மிமீ மழை பெய்த போதும் இதேபோன்ற நிலை ஏற்பட்டிருந்தது" என்று பதிவிட்டுள்ளார்.
2015 பெருவெள்ளம்: கடந்த 2015ஆம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளத்தை அவ்வளவு சீக்கிரம் யாராலும் மறந்துவிட முடியாது. அந்த சமயம் நவ. மாதம் இறுதியில் பெய்த கனமழை மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது. அப்போது 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழைநீர் கொட்டிய நிலையில், பொதுமக்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டனர். மேலும், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்தும் நீர் திறந்துவிடப்பட்ட நிலையில், அது பாதிப்பை மோசமாக்கியது.
செம்பரம்பாக்கத்தில் இருந்து திறந்துவிடப்பட்ட நீர், நகரில் பல இடங்களை மூழ்கச் செய்தது. அப்போது சென்னையில் தாழ்வான பகுதிகளில் மட்டுமின்றி கிட்டத்தட்ட அனைத்து இடங்களிலும் மழை நீர் தேங்கியது. இதனால் மின்சார சேவை பாதிக்கப்பட்டது... மேலும், போக்குவரத்தும் முற்றிலுமாக முடங்கியது.. அப்போது தேங்கிய மழை நீர் வடியவே சில நாட்கள் வரை ஆனது அனைவருக்கும் நினைவிருக்கும். அதைக் குறிப்பிட்டுத்தான் இப்போது தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் ட்வீட் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications