முடியல குருநாதா.. 39 டிகிரி வெயில்.. ஆனா 52 டிகிரி ஹீட் மாதிரி எரியுது! தவிக்கும் தலைநகர் சென்னை!
சென்னை: வெயிலில் டாப் இடத்தை சென்னை பிடிக்காவிட்டாலும், சென்னையில் வசிப்பவர்கள் நாள்தோறும் மிக மோசமான வெப்பத்தை உணர்கிறார்கள். 39 டிகிரி செல்சியஸ் வெயில் அடித்தாலும், 52 டிகிரி செல்சியஸ் போல் வெப்பத்தை உணர்ந்து வருகிறார்கள் சென்னைவாசிகள்.
கோடை காலம் தொடங்கியது முதலே நாளுக்கு நாள் வெயில் உக்கிரமாக தாக்கி வருகிறது. கடந்த மார்ச் மாதம் தொடங்கியது முதல் படிப்படியாக வெப்பநிலை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாகவே அதிகபட்ச வெப்பநிலை பதிவாகி வருகிறது.

தமிழ்நாட்டில் ஈரோடு உள்ளிட்ட மத்திய மாவட்டங்களில் மிக அதிக வெயில் பதிவாகி வருகிறது. மேலும், தினமும் சென்னை, மதுரை உட்பட 15க்கும் மேற்பட்ட இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்து வெயில் கொளுத்தி வருகிறது.
சென்னையில் மக்கள் பகல் நேரங்களில் வெயிலின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் அவதிக்குள்ளாகி வீட்டிலேயே முடங்கி வருகின்றனர். சென்னையில் கோடை காலங்களில் மிக மோசமான ஒரு கோடை காலமாக இந்த ஆண்டு இருந்து வருகிறது.
சென்னையில் சுமார் 39 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெயில் அடிக்கிறது. ஆனால், காற்றின் ஈரப்பதம் காரணமாக, 52 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெயில் கொளுத்துவது போல மக்கள் வெப்பத்தை உணர்ந்து வருகின்றனர். உண்மையாக வெப்பம் பதிவாவது 39 டிகிரி என்றாலும், அதை விட அதிக சூட்டை அனுபவித்து வருகின்றனர் சென்னை மக்கள்.
உங்கள் போனில் கூகுள் காட்டும் வெப்பநிலை விவரத்தை பார்த்தால், தற்போதைய உண்மையான வெப்ப நிலையும், இந்த வெப்பநிலையை நாம் எந்த அளவுக்கு உணர்கிறோம் என்பதையும் காட்டும். அந்தவகையில், சென்னை வாழ் மக்களுக்கு 52 டிகிரி செல்சியஸை காட்டுகிறது கூகுள்.
ரியல் ஃபீல் என்பது பதிவாகும் வெயிலுக்கும், மக்கள் உணரும் வெயிலுக்குமான வித்தியாசம். சென்னை, கடலோர பகுதி என்பதால் காற்றில் ஈரப்பதம் சுமார் 70 சதவீதம் வரை இருக்கிறது. எனவே மக்கள் அதிகமாக வெப்பத்தை உணருகிறார்கள். வெப்பமும், ஈரப்பதமும் சேரும்போது அது மிக கொடுமையாக இருக்கும்.
காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும்போது உடலில் உள்ள வியர்வை ஈஸியாக ஆவியாகாது. இதனால் உடலில் பிசுபிசுப்புத் தன்மை ஏற்படும். எனவேதான், சேலம், ஈரோடு போன்ற உள் மாவட்டங்களில் 42 டிகிரி வெயில் பதிவானால் உணரும் வெப்பத்தை, சென்னையில் அல்லது தூத்துக்குடியில் 38 டிகிரி வெப்பம் பதிவானாலே உணர முடியும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்த அளவில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38 - 39 டிகிரி செல்சியஸை ஒட்டியும், அடுத்த 48 மணி நேரத்திற்கு அதிகபட்ச வெப்பநிலை 39-40 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ் என்றாலும், கடலோரப் பகுதி என்பதால் காற்றின் ஈரப்பதம் குறைவாக இருப்பதன் காரணமாக சென்னையில் 52 டிகிரி வெப்பத்தை போல் உணர வைப்பதால், மக்கள் கடும் சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications
