சொட்ட சொட்ட நனையுது தமிழ்நாடு.. கூலிங் மோடுக்கு போகும் சென்னை! ஆனாலும் ஒரு பிரச்சினை இருக்கே..!?
சென்னை: தமிழகத்தில் 23ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கும் நிலையில் நேற்று சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இந்த மழை நீடிக்கும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதுமே கோடை வெயிலின் தாக்கம் மிக அதிகமாகவே இருந்தது வெப்ப அலை காரணமாக அதிக வெப்பநிலை பதிவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது.

அதிகாலை நேரங்களில் வீட்டில் தங்கியிருக்கும் மக்கள் கூட அதீத வெப்பத்தை உணர்ந்தனர். காலை 7 மணிக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியது. இதனால் பெண்கள் முதியவர்கள் பச்சிளம் குழந்தைகள் அதிக அளவில் பாதிப்புக்கு உள்ளாகினர்.
இந்த நிலையில் தான் மக்களுக்கு வரப் பிரசாதமாக அமைந்தது கோடை மழை. தென்னிந்திய பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதத்தில் மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. சொன்னது போலவே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்தது.
குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள், வட மாவட்டங்கள், கொங்கு பகுதிகளில் நல்ல மழை பெய்தது. தற்போதும் காலையில் லேசாக வெயில் இருந்தாலும் மாலைக்கு மேல் பலத்த காற்றுடன் பொழிவு இருக்கிறது. இதனால் குளிர்ச்சியான காலநிலை நிலவி வருவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதனிடையே இன்றும் நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்," தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கேரள கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக 21.06.2024 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
22.06.2024 மற்றும் 23.06.2024 தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மற்றும் அடுத்த ஐந்து தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு: 17.06.2024 முதல் 21.06.2024 வரை: அடுத்த ஐந்து தினங்களுக்கு, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில், அதிகபட்ச வெப்ப நிலை 2° 3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பின்படி, அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மாலை / இரவு வேளையில், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலை 27°-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
21.06.2024 வரை மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே மீனவர்கள் இந்த தேதிகளில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்" என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications