இரவோடு இரவாக நடந்த தலைகீழ் மாற்றம்.. விடிந்ததும் நிம்மதி பெருமூச்சு விட்ட சென்னை மக்கள்!
சென்னை: இன்று அதிகனமழை வெளுக்கக்கூடும் என்பதால் சென்னையில் மழைநீர் அதிகளவில் தேங்கும் என்ற அச்சத்தோடு நேற்று இரவு தூங்கச் சென்றவர்கள், இன்று விடிந்ததும் எழுந்து, நிலைமையைக் கண்டு பெருமூச்சு விட்டுள்ளனர். 10 மணி நேரத்துக்கும் மேலாக சென்னையில் மழை பெய்யாததால், மழைநீர் தேங்கி இருந்த இடங்களிலும் நீர் அகற்றப்பட்டுள்ளது.
தமிழகத்ததில் வடகிழக்கு பருவமழை நேற்று தொடங்கியது. பருவமழை தொடங்குவதற்கு முன்பே அதற்கு சாதகமாக தெற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. இதன் காரணமாக தமிழகத்தில் அதிகனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்தது. குறிப்பாக சென்னை உட்பட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் அதி கனமழை என பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

அதை உறுதி செய்யும் வகையில் நேற்று முன்தினம் நள்ளிரவிலும், நேற்று பகலிலும் கனமழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக KTCC பெல்ட் எனப்படும் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து இந்த மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு நேற்றும் இன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று இரவு முதல் சென்னையில் அதிக மழை பெய்யவில்லை. பல பகுதிகளிலும் லேசான தூறல் மட்டுமே விழுந்தது. இதன் காரணமாக, மழைநீர் தேங்கி நின்ற இடங்களிலும் வடியத் தொடங்கியது. கோடம்பாக்கம் பகுதியில் நேற்று இரவு 10 மணியளவில் முழங்கால் அளவுக்கு மழைநீர் தேங்கியிருந்த நிலையில் தற்போது அங்கு மழைநீர் முழுமையாக வடிந்துள்ளது.
இன்று அதிகாலை முதலே, செய்தித்தாள் போடும் பணி உட்பட வழக்கம்போல இயல்பு வாழ்க்கை தொடங்கியுள்ளது. கடும் வெள்ளம் ஏற்படும் காலங்களில் செய்தித் தாள் விநியோகம் பாதிக்கப்படும். ஆனால், இன்றைக்கு அதுபோன்ற சூழல் இல்லாமல் வழக்கம்போல செய்தித்தாள்கள் வீடுகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன. மேலும், மின்சாரமும் தடையின்றி விநியோகிக்கப்பட்டு வருகிறது.
இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு இருந்ததால் அதிகனமழை பெய்யக்கூடும் என்ற அச்சத்தோடுதான் சென்னைவாசிகள் உறங்கச் சென்றனர். இந்நிலையில், காற்றழுத்த தாழ்வு மண்டலம் தெற்கு ஆந்திரா நோக்கிச் சென்று கரையைக் கடப்பதால் சென்னையில் கனமழைக்கான வாய்ப்பு குறைந்துள்ளது. எனவே, தற்போது சென்னையில் சில இடங்களில் லேசான மழை மட்டுமே பெய்துள்ளது.
சென்னையின் பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதல் லேசான மழை பெய்து வருகிறது. கிண்டி, எழும்பூர், புரசைவாக்கம், மாம்பலம், சைதாப்பேட்டை, வேளச்சேரி உள்பட பல்வேறு பகுதிகளிலும், புறநகர் பகுதிகளிலும் லேசான மழை பெய்து வருகிறது. எனினும், இந்த அளவு மழையால் எந்த பாதிப்பும் இல்லை எனத் தெரிகிறது.
மேகங்கள் வழி விட்ட நிலையில், இன்று காலையில் எழுந்த மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். தங்கள் பகுதிகளில் நேற்று இரவு தேங்கி இருந்த மழைநீரும் தற்போது வடிந்துள்ளதால், மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். பெரும்பாலான மக்கள், அத்தியாவசிய பொருட்களை வாங்கி வைத்து, வெள்ள பாதிப்பை எதிர்கொள்ள தயார் நிலையில் இருந்த நிலையில், இன்று மழை பெய்யாததால் இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது.
மிகவும் தாழ்வான சில பகுதிகளில் மட்டும் தற்போது மழைநீர் தேங்கி உள்ளது. அங்கும், பம்ப்களை வைத்து மழைநீரை அகற்றும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் மழை இன்று முழுவதும் இல்லை என்றால், தேங்கியிருக்கும் சில இடங்களிலும் விரைவாக மழைநீர் அகற்றப்படும் எனத் தெரிகிறது.


Click it and Unblock the Notifications
