மிக்ஜாம் கரையை கடக்கும் போது வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்.. சென்னைவாசிகளுக்கு போலீஸ் அலர்ட்
சென்னை: வங்கக்கடலில் உருவாகும் மிக்ஜாம் புயல், வரும் 5ம் தேதி சென்னைக்கு அருகே ஆந்திர கடலோர பகுதியில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் டிசம்பர் 4,5ஆம் தேதிகளில் சென்னை மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என வானிலை ஆய்வு மையம், காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில் இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இன்று காலை 8.30 மணி நிலவரப்படி, சென்னைக்கு கிழக்கு-தென்கிழக்கே சுமார் 510 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெறக்கூடும் என்றும், இந்த புயல் வரும் 5ம் தேதி ஆந்திர மாநிலம் நெல்லூர்- மசூலிப்பட்டினம் இடையே கரையைக் கடக்கக்கூடும் என்றும் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு 'மிக்ஜம்' என்று பெயரிடப்பட்டுள்ளது. புயல் காரணமாக 5ம் தேதி வரை சென்னை மற்றும் திருவள்ளுர் உள்ளிட்ட வடதமிழக மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
புயல் கரையை கடக்க இருப்பதால் வரும் 4 மற்றும் 5ம் தேதிகளில் சென்னையில் மக்கள் யாரும் அவசியம் இன்றி வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. அதாவது, நாளை (டிச.3) தமிழகத்தில் மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், இராணிப்பேட்டை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
இதே நாளை மறுநாள் (டிச.4) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. குறிப்பாக திருவள்ளூர் மாவட்டத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது.

அதேபோல டிச.3ம் தேதி திருவள்ளூர் தொடங்கி கடலூர் வரை வடக்கடலோர மாவட்டங்களில் மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீச கூடும். சில நேரங்களில் 70 கிலோமீட்டர் வேகத்திலும் காற்று வீசக்கூடும்.
டிச.4ம் தேதி திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மணிக்கு 60 முதல் 70 கிலோமீட்டர் வேகத்திலும் அவ்வப்போது 80 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீச கூடும். கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் மணிக்கு 50-60 கி.மீ வேகத்திலும் சில நேரங்களில் 70 கி.மீ வேகத்திலும் காற்று வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே டிச.4 மற்றும் டிச.5ம் தேதி சென்னையில் பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வரவேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம், காவல்துறை எச்சரித்துள்ளது.












Click it and Unblock the Notifications