பருவமழையை விடுங்க.. அடுத்த இரண்டு வாரங்களுக்கு பொளக்கப்போகும் வெயில்! உஷார் மக்களே!
சென்னை: இந்தியாவில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை சற்று முன்கூட்டியே தொடங்கியிருந்தது. ஆனால், தமிழகத்தில் தற்போது வெயில் அதிகரித்திருக்கிறது. இது குறித்து விளக்கியுள்ள தனியார் வானிலை ஆர்வலர் (COMK), அடுத்த இரண்டு வாரங்களுக்கு வெயில் தொடரும் என்று கூறியுள்ளார்.
அதாவது நேற்று சென்னையில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்திருந்தது. பொதுவாக வெயில் அதிகரித்தால் மாலையில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருக்கும். ஆனால் நேற்று சென்னையில் மழை பெய்யவில்லை. இதனால் இரவு முழுவதும் வெப்பம் அப்படியே நீடித்தது. ஜூன் / ஜூலை மாதங்களில் பெரும்பாலான இரவுகள் இடியுடன் கூடிய மழை இல்லாமல் இப்படித்தான் இருக்கும்.

இந்த ஆண்டு இந்தியாவில் தென்மேற்கு பருவமழை நிலையற்றதாக மாறிக்கொண்டே இருக்கிறது. எனவே, இயல்பை விட வறண்ட வானிலை நிலவுகிறது. இதனால் சென்னை உட்பட தமிழ்நாட்டின் மேற்குப் பகுதிகளில் பிற்பகல் நேரங்கள் வெப்பமாகவே இருக்கும். அதே சமயம், அடுத்த இரண்டு நாட்களுக்கு சமவெளிகளில் அதிக மழைக்கு வாய்ப்பில்லை. ஆனால், வாரத்தின் இரண்டாம் பாதியில் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்து, ஓரளவு நிம்மதியைத் தரலாம் என்று COMK எக்ஸ் பதிவில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, "இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை இந்தியாவில் மிகவும் நிலையற்ற தன்மையுடன் காணப்படுகிறது. ஜூன் 1 ஆம் தேதி பருவமழை தொடங்கியதில் இருந்து கேரளாவின் தினசரி மழைப்பொழிவு வரைபடத்தை பார்த்தால் இது தெளிவாகத் தெரிகிறது. ஒட்டுமொத்தமாக, பருவமழை இயல்பான அளவை விட -1% குறைவாகவே உள்ளது. இருப்பினும், 11 நாட்கள் இயல்பான அளவை விட அதிகமான மழை பெய்துள்ளது.
இந்த நிலையற்ற தன்மையின் மத்தியிலும், காவிரிப் படுகையில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பிவிட்டன. மேட்டூர் அணை 1957 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஜூன் மாதத்தில் முதல்முறையாக அதன் முழு நீர்மட்டத்தை எட்டியுள்ளது.
தமிழ்நாட்டில் வெப்பமான காலநிலை ஏன்?
பருவமழையின் இந்த நிலையற்ற தன்மை தமிழ்நாட்டின் மேற்கு சமவெளிகளில் ஒரு தற்செயலான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கங்கை சமவெளிகளில் பருவமழை குறைந்த அழுத்தம் நிலவுவதால், பலமான மேற்கு திசைக் காற்று தொடர்ந்து வீசுகிறது. ஆனால், இந்தியாவில் இயல்பை விட வறண்ட வானிலை நிலவுவதால், தமிழ்நாட்டின் சமவெளிகளில் பிற்பகல் நேரங்கள் வெப்பமாகவே இருக்கின்றன.
பருவமழையின் நிலையற்ற தன்மைக்குக் காரணம் என்ன?
இந்த ஆண்டு பருவமழையின் நிலையற்ற தன்மைக்கு, பருவமழைக்கும் இடையிலான அலைவு (MISO - Monsoon Intra-Seasonal Oscillation) ஒரு காரணமாக இருக்கலாம். MISO பெரும்பாலும் மத்திய இந்தியா, வங்காள விரிகுடா மற்றும் தென் சீனக் கடலுக்குச் சாதகமாக உள்ளது. இருப்பினும், தென் சீனக் கடலில் இருந்து வங்காள விரிகுடாவிற்கு அடிக்கடி வரும் அழுத்த அலைகள், இந்தியாவில் ஒரு சில நாட்களுக்குச் சாதகமான சூழலை உருவாக்குகின்றன. இந்த காலகட்டத்தில், மேற்கு கடற்கரை மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து, பருவமழை தீவிரமடைகிறது.
பருவமழை குறைந்த அழுத்தம் மத்திய இந்தியாவை நோக்கி நகரும்போது, இந்தியாவில் பருவமழை குறைகிறது. அடுத்த குறைந்த அழுத்தம் வங்காள விரிகுடாவிற்குள் நுழையும்போது, நிலைமை மீண்டும் மாறுகிறது.
வரும் நாட்களில் வானிலை எப்படி இருக்கும்?
அடுத்த சில நாட்களுக்கு இந்தியாவில் பருவமழை இயல்பை விட பலவீனமாக இருக்கும். இதனால் தமிழ்நாட்டில் பிற்பகல் நேரங்கள் வெப்பமாக இருக்கும்.
சென்னையில் வெப்பநிலை 38°C வரை உயரக்கூடும். வலுவான மேற்கு திசைக் காற்று வீசுவதால், கடல் காற்று மாலை நேரத்தில்தான் வீசத் தொடங்கும். இதனால் தமிழ்நாட்டின் பெரும்பாலான மேற்குப் பகுதிகளில் பிற்பகல் நேரங்கள் அசௌகரியமாக இருக்கும். சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். ஆனால், ஒட்டுமொத்தமாக வறண்ட வானிலையே இருக்கும். வாரத்தின் இரண்டாம் பாதியில் தமிழ்நாட்டின் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தற்போதுள்ள பருவமழை குறைந்த அழுத்தம் மத்திய இந்தியாவின் சில பகுதிகளை அடையக்கூடும். இது வட தமிழ்நாடு மற்றும் சென்னை போன்ற பகுதிகளுக்குச் சாதகமான சூழலை உருவாக்கலாம். மொத்தத்தில் அடுத்த இரண்டு வாரங்களுக்கு பிற்பகல் நேரங்கள் வெப்பமாகவே இருக்கும்.
மேற்கு கடற்கரை மற்றும் மத்திய இந்தியாவில் நிலைமை:
மேற்கு கடற்கரை மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழை இயல்பை விட குறைவாகவே இருக்கும். மழைப்பொழிவு முற்றிலும் நிற்காது. ஆனால், அடுத்த இரண்டு வாரங்களுக்கு இயல்பை விட குறைவாகவே இருக்கும். இந்த வாரத்தில் மத்திய இந்தியா மற்றும் கிழக்கு இந்தியாவின் சில பகுதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications