திருநெல்வேலியை சூறையாடிய மழை..பேரிடர்.. 150 ஆண்டுகளுக்குப் பின் அதீத வெள்ளம்.. அவசர உதவி எண்கள்
திருநெல்வேலி: தென் மாவட்டங்களில் விடாமல் வெளுத்து வாங்கி வருகிறது அதி கனமழை. திருநெல்வேலியில் பெய்த பேய்மழையால் அணைகள் நிரம்பி வழிகின்றன. தாமிரபரணியாற்றில் விநாடிக்கு 45000 கனஅடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது.
பெருமழை கொட்டித்தீர்ப்பதால் பல பகுதிகளும் வெள்ளக்காடாக மாறியுள்ளது. இப்படி ஒரு பேய் மழையை பார்த்ததில்லை என்று பொதுமக்கள் கூறி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்தில் 150 ஆண்டுகளுக்குப் பிறகு 30 செமீ மழை பதிவாகியுள்ளது. மூலக்கரைப்பட்டியில் 13 மணி நேரத்தில் 39 செமீ மழை பதிவாகியுள்ளது.

மழையால் பெருகிய வெள்ளம் ஒருபக்கம், பாபாநாசம் அணையில் இருந்து தாமிரபரணி ஆற்றில் விநாடிக்கு 40 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. குறுக்குத்துறை முருகன் கோவில் வெள்ளநீரில் மூழ்கியுள்ளது.
இந்நிலையில் இன்னும் 2 நாட்களுக்கு திருநெல்வேலியில் கனமழை பெய்யும். நாளை காலைக்குள் 300 மி.மீ., வரை மழை பதிவாகலாம் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதனால் மழை, வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள நெல்லை மக்களுக்கு உதவும் வகையில் அவசர உதவி எண்களை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருநெல்வேலி அவரச உதவி எண்கள் : நெல்லை மாவட்ட பேரிடர் கட்டுப்பாட்டு மையம் - 1077, மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையம் - 1070 தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் உதவி - 101, 102 மின்சாரம் தொடர்பான புகார்களுக்கு - 9498794987 மழைக்கால நோய்கள் தொடர்பாக - 104. அவசர மருத்துவ உதவிக்கு - 108
தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் நெல்லை மாவட்டத்தில் குடியிருப்பு பகுதிகள் நீரில் மூழ்கி உள்ளது. வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளதால் மக்கள் அவதி அடைந்துள்ளனர். நெல்லை மாவட்ட அணைகளும் வேகமாக நிரம்பி, அதிகப்படியான நீர் வெளியேற்றப்படுவதால் தாமிரபரணி ஆற்றிலும் வெள்ள பெருக்கு ஏற்பட்டு, வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
தாமிரபரணி ஆற்றில் தற்போது வரைக்கும் 45000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. தண்ணீர் திறப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. தண்ணீரின் வேகமும் அதிகமாக இருப்பதால் மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கேட்டுக்கொண்டுள்ளார். மக்களின் பாதுகாப்பு கருதி பல மாவட்டங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications