விடாது வெளுத்த மழை.. 22 அடியை எட்டிய செம்பரம்பாக்கம் ஏரி.. உபரி நீர் திறப்பது எப்போது?
சென்னை: தொடர் மழையின் காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம் 22 அடியாக உயர்ந்து கடல் போல காட்சியளிக்கிறது. விரைவில் உபரி நீர் திறக்கப்பட உள்ளதால் ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட உள்ளது.
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை இயல்பை விட 9% கூடுதலாக பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் ஜூன் 1 முதல் இன்று காலை வரை 323.6 மில்லிமீட்டருக்கு பதில் இவ்வாண்டு 351.7 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

சென்னையில் கடந்த ஒரு மாத காலமாகவே தினசரியும் மழை பெய்து வருவதால் குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகளில் நீர் இருப்பு உயர்ந்து வருவதால் சென்னைவாசிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தொடர் மழையின் காரணமாக, நீர்பிடிப்பு பகுதிகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் முக்கிய ஏரிகளாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரிகள் உள்ளன. இந்த 5 ஏரிகளிலும் மொத்தம் 11 ஆயிரத்து 757 மி.கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம்.
கோடை காலத்தில் வெப்பம் சுட்டெரித்த காரணத்தாலும் குடிநீருக்காக தண்ணீர் திறக்கப்பட்டதாலும் கடந்த மே மாத இறுதியில் ஏரிகளில் தண்ணீர் இருப்பு 60 சதவிகிதம் மட்டுமே இருந்தது. குடிநீர் ஏரிகளில் தண்ணீர் இருப்பு குறைந்து வந்தாலும் தற்போது கிருஷ்ணா நதிநீர் ஒப்பந்தப்படி ஆந்திரமாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகமாகவே இருந்தது.
ஜூன் மாதத்தில் இருந்தே சென்னையில் விட்டு விட்டு மழை பெய்தது. அப்போதே செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் தற்போது 80 சதவிகிதம் நிறைந்து 19.17 கன அடியாக இருந்தது கோடை காலத்திலும் கடல் போல காட்சியளித்தது செம்பரம்பாக்கம் ஏரி. தென் மேற்கு பருவமழை காலத்திலும் சென்னையில் தொடர் மழை இருந்தது. இதன் காரணமாக ஏரிக்கு நீர் வரத்து தொடர்ந்து இருந்தது. இப்போது செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம் 22 அடியாக உள்ளது.
சென்னைக்கு குடிநீர் தேவியை பூர்த்தி செய்யும் முக்கிய ஏரிகளில் ஒன்றாக செம்பரம்பாக்கம் ஏரி விளங்கி வருகிறது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 3.645 டி எம் சி. கனமழையின் காரணமாக 600 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. சென்னை குடிநீர் தேவைக்காக 200 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பும் நிலையில் உள்ளதால் விரைவில் உபரி நீர் திறக்கப்பட வாய்ப்பு உள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீர், தொடர் மழையால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து சென்னையில் வெள்ளநீர் சூழ்ந்தது. அதனையடுத்து மழை அதிகரிக்கும் காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 22 அடி நிரம்பிய உடனேயே ஏரியின் பாதுகாப்பு கருதி உபரி நீர் திறக்கப்பட்டு விடும்.
இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ள நிலையில் செம்பரம்பாக்கம் ஏரி நிரம்ப உள்ளதால் விரைவில் உபரி நீர் திறக்கப்பட உள்ளது. இதன் காரணமாக ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பூண்டி ஏரியின் மொத்த நீர்மட்டம் 35 அடியாகும். தற்போது 34.50 அடி அளவிற்கு தண்ணீர் நிரம்பி கடல் போல காட்சி அளிக்கிறது. பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவான 3231 மில்லியன் கன அடியில் தற்போது 2900 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. இந்த ஏரிக்கு வினாடிக்கு 3000 கன அடி நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. பூண்டி ஏரியிலிருந்து விநாடிக்கு 2500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. கொசஸ்தலை ஆற்றில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் ஆற்றில் கரையோர பகுதிகளில் வசிக்கும் கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆற்றில் இறங்கி குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications