அரபிக்கடல் + வங்கக்கடல்.. திடீர்னு கிளம்பிய மழை.. எத்தனை நாளுனு பாருங்க.. சூறாவளி வேற: வானிலை மையம்
சென்னை: தமிழகமெங்கும் மழை கொட்டி வரும்நிலையில், வரும் 5ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்திருக்கிறது.
வழக்கமாக ஒவ்வொரு வருடமும், தென்னிந்தியாவில் தென்மேற்கு பருவமழையானது ஜுன் மாதமே தொடங்கும். ஆனால் இந்த முறை எதிர்பார்த்ததைவிட ஒரு வாரம் தாமதமாகவே தொடங்கியது. தென்மேற்கு பருவமழை குறைந்ததால் பல இடங்களில் வெயில் வாட்டி எடுக்க தொடங்கியது.

எனினும், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இயல்பைவிட அதிகமாக மழை பதிவாகியிருந்தது. அதேபோல இந்த மாதம் தொடக்கம் முதல் பருவமழையின் அளவு அதிகமாக இருந்தது.
வங்காள விரிகுடா: இந்நிலையில், கிழக்கு-மத்திய வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.. இது வடமேற்கு திசையில் வடக்கு ஒடிசா மற்றும் அதை ஒட்டிய மேற்கு வங்க கடற்கரையை நோக்கி நகரும் என்றும் இதன் காரணமாக இன்று முதல் வரும் 3ம் தேதி வரை ஒடிசா மாநிலத்தில் கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது..
மேலும் அடுத்த 3, 4 நாட்களுக்கு ஒடிசாவுக்கு மஞ்சள் மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தொடர் மழை காரணமாக மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஒடிசா மாநில அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. தாழ்வான பகுதிகளில், மழை நீர் தேங்கும் இடங்களில் உள்ள மக்களை மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
அதேபோல ஆறு, அணைகளில் நீர் மட்டம் உயர்வு குறித்து மாவட்ட நிர்வாக மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
மஞ்சள் அலர்ட்: கேரளாவை ஒட்டியுள்ள அரபிக்கடலிலும் இதேபோன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.. எனவே, கேரளாவில் குறிப்பாக, எர்ணாகுளம், கோட்டயம், ஆலப்புழா, இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களிலும் இன்று மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்திருந்தது.
அதேபோல, தமிழக கடலோர பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
சூறாவளி : அந்தவகையில், தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாம்.. வரும் 5ம் தேதி வரை இந்த மழை நீடிக்க நீடிக்க வாய்ப்புள்ளதாகவும், தென்மேற்கு, மத்திய வடக்கு வங்கக்கடல்,. அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் மணிக்கு, 65 கி.மீ., வேகத்தில் சூறைக்காற்று வீசும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
கேரள, லட்சத்தீவு, கர்நாடக கடலோர பகுதிகள், அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் மணிக்கு, 65 கி.மீ., வேகத்தில் சூறைக்காற்று வீசும் என்பதால் இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் வானிலை மையம் கேட்டுக் கொண்டுள்ளது.












Click it and Unblock the Notifications