வெயில் வேற அனல் பறக்குது.. தமிழகத்திற்கு மழை இருக்கா இல்லையா? ஹேப்பி நியூஸ் சொன்ன வானிலை மையம்
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில காலமாகவே மழை குறைந்து வெப்பம் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகிறார்கள். இதற்கிடையே மாநிலத்தில் என்ன மாதிரியான வானிலை நிலவும் என்பது குறித்து முக்கிய தகவல்களைச் சென்னை வானிலை மையம் பகிர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில காலமாகவே மழை குறைந்து, வெப்பம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் சிலமணி நேரத்தைப் பொறுத்தவரைத் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு பகுதிகளைத் தவிர பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவியது.

தமிழ்நாடு வானிலை
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 1 - 2° செல்சியஸ் உயர்ந்துள்ளது. ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாகப் பெரிய மாற்றம் ஏதுமில்லை. தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவையிலும் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 - 4° செல்சியஸ் அதிகமாகப் பதிவாகியுள்ளது. ஏனைய தமிழகம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை ஒட்டி இருந்தது.
வரும் நாட்களில் நிலவும் வானிலை குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இன்றும் நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கனமழை இருக்கு
வரும் ஏப்ரல் 2ம் தேதி தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், தென்காசி, விருதுநகர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழக வானிலை
வரும் ஏப்ரல் 3ம் தேதி தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏப்ரல் 4ம் தேதி தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏப்ரல் 5ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு
அதிகபட்ச வெப்பநிலை மாறுதலின் போக்கை பொறுத்தவரை இன்று தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாகப் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. வரும் ஏப்ரல் 1 முதல் 3 வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2 - 3° செல்சியஸ் குறையக்கூடும்.
இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாட்ட பொறுத்தவரை வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2- 3° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். ஏப்ரல் 2, 3ம் தேதிகளில் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டி-இயல்பை விடச் சற்று குறைவாக இருக்கக்கூடும்.
சென்னை கிளைமேட்
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications