காலையிலேயே கொட்டும் மழை.. அடுத்த 1 மணி நேரம் ஜில் ஜில் கிளைமேட் தான்.. 8 மாவட்டங்களுக்கு அலர்ட்
சென்னை: தமிழகத்தில் இன்று காலை 10 மணி வரை 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதில், கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கும், நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கும் வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து இருக்கிறது. இதனால் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக கோவை மற்றும் நீலகிரியில் கனமழை கொட்டி வருகிறது. நேற்று ஒரே நாளில் நீலகிரியின் அவலாஞ்சியில் 29 செமீ மழை பதிவானது.

8 மாவட்டங்களுக்கு அலர்ட்
தொடர்ந்து கோவை, நீலகிரியில் இன்று காலை முதலே மழை கொட்டி வருகிறது. இதேபோல், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள் மற்றும் குமரியில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது. நேற்று நெல்லை, தென்காசி பகுதிகளில் சூறைக்காற்று வீசிய நிலையில் மழை பெரிதாக பெய்யவில்லை. இன்று காலையில் தென்காசி, நெல்லை பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் அடுத்த ஒரு மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. இது தொடர்பான வானிலை அறிவிப்பில், இன்று காலை 10 மணி வரை தமிழகத்தில் நெல்லை, தென்காசி, திண்டுக்கல், குமரி ஆகிய 4 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கும், கோவை, நீலகிரி, திருப்பூர் மற்றும் தேனி ஆகிய 4 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கும் வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் தாழ்வான பகுதிகள் மற்றும் சாலைகளில் மழைநீர் தேங்க வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.
கோவை, நீலகிரியில் கனமழை தொடரும்
முன்னதாக வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில் இன்று தமிழகத்தில் கோவை, நீலகிரி மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறியிருந்தது. இது தொடர்பான அறிவிப்பில், "வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு குஜராத் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் அதே பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும். இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் மேலும் வலுவடையக்கூடும்.
இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில் மழைக்கு சான்ஸ்
18-06-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 19-06-2025 முதல் 22-06-2025 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று (17-06-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27* செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். என்று கூறப்பட்டு இருந்தது.












Click it and Unblock the Notifications