இன்னும் 2 நாட்களுக்கு மழை விடாது.. தென் மாவட்டங்களுக்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம்
சென்னை: தென் மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில், இன்றும், நாளையும் தென் மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இரண்டு நாட்களுக்கு காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கியது போல வெயில் சுட்டெரித்து வந்தது. மே மற்றும் ஜூன் மாதங்களில் தான் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்கின்ற நிலையில், பிப்ரவரி மாதத்திலேயே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. கடந்த 1901 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இருந்த அளவை விட கடந்த பிப்ரவரி மாதத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்துள்ளது. கிட்டத்தட்ட 124 ஆண்டுகளுக்கு பிறகு வெயில் சுட்டெரித்துள்ளது. இதனால் மக்கள் கடும் அவதியடைந்து வந்தனர்.

124 ஆண்டுகளுக்கு பிறகு வெயில் அதிகம்
இதற்கு மத்தியில் கடந்த 4 நாட்களாக, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, ராமநாதபுரம் மற்றும் தென் மாவட்டங்களில் அப்படியே கிளைமேட் தலைகீழாக மாறியது. கோடைக்காலம் போல் வெயில் சுட்டெரித்த நிலையில் தற்போது மழைக்காலம் போல மழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த 4 நாட்களாக மழைக்காலம் போல மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இதனால் குடையில்லாமல் வெளியில் செல்லும் மக்கள் நனைந்தபடியே வருகின்றனர்.
மழைக்காலத்தில் உள்ளது போல் தென்காசி குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து இரண்டு நாட்களாக கனமழை கொட்டி வருவதால் மக்கள் அவதியடைந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் 11 செமீ மழை பெய்தது. இந்த நிலையில் இன்னும் இரண்டு நாட்களுக்கு தென் தமிழகத்தில் கனமழை கொட்டித் தீர்க்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை மைய அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு
பூமத்திய ரேகையை ஒட்டிய மேற்கு இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் -மாலத்தீவு வரை ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று (02-03-2025) தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை (03-03-2025) தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 04-03-2025 முதல் 08-03-2025 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.
சென்னையில் கிளைமேட் எப்படி?
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை, இன்று (02-03-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை (03-03-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
வெப்பநிலை எப்படி?
* இன்று (02-03-2025) தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு.
* 03-03-2025 முதல் 06-03-2025 வரை அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2" செல்சியஸ் வரை உயரக்கூடும்.
* 03-03-2025 முதல் 06-03-2025 வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒரிரு இடங்களில் 2 -3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
* தமிழக கடலோரப்பகுதிகள், வங்கக்கடல் பகுதிகள்: 02-03-2025 முதல் 06-03-2025 வரை: எச்சரிக்கை ஏதுமில்லை.
* அரபிக்கடல் பகுதிகள்: 02-03-2025; மாலத்தீவு லட்சதீவு பகுதிகள் அதனை ஒட்டிய குமரிக்கடல் மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
* 03-03-2025: தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு லட்சதீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீசக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு:
பழைய தாலுகா அலுவலகம் ஸ்ரீவைகுண்டம் (தூத்துக்குடி) 11, ராமேஸ்வரம் (ராமநாதபுரம்) 10, தங்கச்சிமடம் (ராமநாதபுரம்) 9, ஊத்து (திருநெல்வேலி) 8, நாலுமுக்கு (திருநெல்வேலி), காக்காச்சி (திருநெல்வேலி) தலா 7, மாஞ்சோலை (திருநெல்வேலி), பாம்பன் (ராமநாதபுரம்) தலா 6, சேர்வலாறு அணை (திருநெல்வேலி), பாபநாசம் (திருநெல்வேலி), ராமநதி அணைப் பகுதி (தென்காசி), நீடாமங்கலம் (திருவாரூர்), ராதாபுரம் (திருநெல்வேலி) தலா 5, களக்காடு (திருநெல்வேலி), முத்துப்பேட்டை (திருவாரூர்), செங்கோட்டை (தென்காசி), திருப்பூண்டி (நாகப்பட்டினம்), சாத்தான்குளம் (தூத்துக்குடி), மூலைக்கரைப்பட்டி (திருநெல்வேலி), தூத்துக்குடி ரயில் நிலையம் ARG (தூத்துக்குடி), திருக்குவளை (நாகப்பட்டினம்) தலா 4 செமீ மழை பெய்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications