அடுத்த 3 மணி நேரம்.. இதை செய்யாதீங்க.. பழைய கட்டிடத்திலும் தங்காதீங்க.. சென்னையில் மழை.. வேண்டுகோள்
சென்னை: அதிக மழை நேரத்தில், பழைய கட்டிடங்களில் தங்குவதை தவிர்க்க வேண்டும் என்று கட்டுமான பொறியாளர்கள் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறார்கள்.
வங்கக் கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. அந்தவகையில், சென்னையில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் நிலைக்கொண்டுள்ள புயல் மணிக்கு 8 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருவதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

வானிலை: மிகுந்த வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால், அத்தியாவசிய தேவைகளின்றி பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோலவே, புயலின் தீவிரத்தை உணர்ந்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது..
அடுக்குமாடி கட்டிடம்: சென்னையில் அடுக்குமாடி கட்டிடங்கள் கட்டும் பணிகள் உள்ளிட்ட அனைத்து கட்டுமான பணிகளையும் நிறுத்தி வைக்குமாறு மாநகராட்சி ஏற்கனவே வேண்டுகோள் விடுத்திருக்கிறது.. மேலும், கட்டுமான பணிகளை நிறுத்துவதுடன் அதற்கான பொருட்களை தரை தளத்தில் பாதுகாப்பாக வைக்கவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், கட்டுமான பொறியாளர்கள், பொதுமக்களுக்கு சில அறிவுறுத்தல்களை வழங்கியிருக்கிறார்கள்... அதில், மழை காலங்களில் பழைய கட்டிடங்களுக்குதான் அதிக பாதிப்பு ஏற்படும். விரிசல்கள் வழியே அதிக ஈரப்பதம் உள்ளே இறங்கும் என்பதால், அதிக மழை நேரத்தில் பழைய கட்டிடங்களில் தங்குவதை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்கள்.
கழிவுநீர்: மேலும், இதுகுறித்து அவர்கள் அறிவுறுத்தும்போது, "பெரும்பாலான கட்டிடங்களில் கழிவு நீர் தொட்டியும், கீழ் நிலை தண்ணீர் தொட்டியும் அடுத்தடுத்து இருக்கும் இடங்களில், தண்ணீரை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
கீழ்நிலை தண்ணீர் தொட்டியின் மேல் பகுதியில் மழைநீர் தேங்கினால், அதில் சேமிக்கப்பட்ட தண்ணீர் தரம் பாதிக்கப்படும். அதனால், தொட்டியை சுத்தப்படுத்திய பிறகு பயன்படுத்துவது நல்லது.. பழைய கட்டடத்தை ஒட்டி, அதிக நேரத்துக்கு தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பழைய கட்டிடத்தின் ஓரங்களில் எலிவளை போன்ற பள்ளங்கள் வாயிலாக மழைநீர் இறங்கிவிடும்.. எனவே, இந்த மழைநீரானது, கட்டிடத்தின் அடிப்படை உறுதிக்கே பாதிப்பை தந்துவிடும்.
அட்வைஸ்: கட்டிடத்தை ஒட்டி, 3 மணி நேரத்துக்கு மேல் தண்ணீர் தேங்க அனுமதிக்க கூடாது.. பழைய கட்டிடங்களில் பாரத்தை குறைக்கும் வகையில், மேல் நிலை தொட்டியில் அதிக நீர் தேங்காமல் இருப்பது நல்லது. ஈரமான சுவர்களில் மின் கசிவு ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால், சுவர்களை தொடும் நிலையில் கவனமாக இருக்க வேண்டும்.. அதேபோல, வீட்டின் காம்பவுண்ட் சுவரை ஒட்டி அமைக்கப்படும் தற்காலிக குடிசைகளில் யாரையும் தங்க அனுமதிக்காதீர்கள்" கேட்டுக் கொண்டுள்ளனர்.
அதேபோல, வீட்டின் காம்பவுண்ட் சுவரை ஒட்டி அமைக்கப்படும் தற்காலிக குடிசைகளில் யாரையும் தங்க அனுமதிக்காதீர்கள்" கேட்டுக் கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications