மிக்ஜாம் புயல்! சென்னைக்கு 100 கி.மீ. தூரம் நெருங்கி வரும் கண் பகுதி! பேய் காற்று வீசும்! எச்சரிக்கை
சென்னை: சென்னைக்கு அருகே 100 கி.மீ. தொலைவில் புயலின் மைய பகுதி வரும் போது சூறாவளி காற்றும் அதி கனமழையும் பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தென்மண்டல வானிலை ஆய்வு மையத்தில் அதன் தலைவர் பாலசந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் 32 இடங்களில் மிக கனமழை பெய்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும். இன்று திருவள்ளூர், தொடங்கி கடலூர் வரை பலத்த தரைக்காற்று 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் அவ்வப்போது 70 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். தென்மேற்கு வங்கக்கடல் மத்திய மேற்கு வங்கக்கடல் வட தமிழக கடலோரப்பகுதிகள் தெற்கு ஆந்திரா கடலூர் பகுதிகளில் கொந்தளிப்புடன் கடல் காணப்படுகிறது. 5-ம் தேதி வரையிலும் மீனவர்கள் கடலுக்கு செல்லக்கூடாது.
வடகிழக்கு பருவமழை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் பதிவான மழையின் அளவு 35 சென்டிமீட்டர். இயல்பான அளவைவிட 6% சதவீதம் குறைவாக மழை பதிவாகியுள்ளது. தற்போதைய நிலவரப்படி தீவிர புயலாகவே மிக்ஜாம் புயல் கரையை கடக்கும். கடலோர மாவட்டங்களிலும் அதை ஒட்டிய மாவட்டங்களிலும் தான் மழை பொழிவிருக்கும். மிக்ஜாம் புயல் வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தொடர்ந்து தீவிர புயலாக வலுப்பெறும்.
நாளை திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் புதுச்சேரி கடலோர பகுதிகளிலும் தரைகாற்று இருக்கும். படிப்படியாக சென்னையில் மழை அதிகரித்து நாளை இரவு வரை நீடிக்கும். காற்றும் அதே போல் தொடர்ந்து அதிகரித்து நாளை இரவு வரை வீசும். புயல் கடந்த 1-ம் தேதி முதல் 2-ம் தேதி வரை 18 கிலோ மீட்டர் வேகத்திலிருந்து, தற்பொழுது 5 முதல் 7 கிலோமீட்டர் வேகத்தில் நகர்கிறது.
வட தமிழகம், ஆந்திரப்பகுதிகளில் புயல் திரும்ப வாய்ப்புள்ளது. சென்னை, திருவள்ளூர் போன்ற மாவட்டங்களிலும் படிப்படியாக மழை அதிகரிக்கும்." இவ்வாறு பாலசந்திரன் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் வானிலை மையம் கூறியிருப்பதாவது: சென்னை கடலோர பகுதிக்கு அருகே 100 கி.மீ. தொலைவிற்கு மிக்ஜாம் புயல் நாளை காலை வரும். அப்போது சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் சூறாவளி காற்று வீசும். மேலும் மேற்கண்ட மாவட்டங்களுக்கு அதி கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இன்று மாலை முதல் நாளை காலை வரை 100 முதல் 200 மி.மீ. மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்து வருகிறார்கள். மேலும் தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினரும் புயலை எதிர்கொள்ள தயாராக இருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications