காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகரும் வேகம் சட்டென குறைந்தது.. இந்திய வானிலை ஆய்வு மையம் அப்டேட்
சென்னை: வங்கக் கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகரும் வேகம் குறைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மிக்ஜம் புயல் வங்ககடலில் உருவாக உள்ள நிலையில், அது தற்போது சென்னையில் இருந்து 630 கிமீ தூரத்தில் மையம் கொண்டிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நேற்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருந்த அறிவிப்பின்டி படி, தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலவிய தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில், தாழ்வுமண்டலம் தற்போது தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டியுள்ள தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் சென்னைக்கு கிழக்கே-தென் கிழக்கே சுமார் 740 கி.மீ. தொலைவிலும், நெல்லூருக்கு சுமார் 860 கி.மீ. தொலைவிலும், மசூலிப்பட்டினத்துக்கு தென் கிழக்கே சுமார் 910 கி.மீ. தொலைவிலும் நேற்று காலை நிலை கொண்டிருந்தது.

இதனிடையே இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று ( சனிக்கிழமை) தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என்றும் ஞாயிற்றுக்கிழமை புயலாக அது வலுப்பெற வாய்ப்பு உள்ளது என்றும் புயல் உருவானால் அந்த புயலுக்கு 'மிக்ஜம்' என்று பெயரிடப்படும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று (சனிக்கிழமை) வெளியிட்ட அறிவிப்பில், காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகரும் வேகம் குறைந்துள்ளதாக கூறியுள்ளது. வங்கக்கடலில் மணிக்கு 11 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது மணிக்கு 9 கிலோ மீட்டர் ஆக குறைந்துள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை மற்றும் புதுச்சேரிக்கு இடையே 630 கிலோ மீட்டர் கிழக்கு-தென்கிழக்கிலும், நெல்லூருக்கு 740 கிலோ மீட்டர் தென் கிழக்கிலும் மையம் கொண்டுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே இந்த மிக்ஜம் புயல் வரும் 5-ந்தேதி காலையில் நெல்லூர்-மசூலிப்பட்டினம் இடையே சுமார் 80 முதல் 100 கி.மீ. வேகத்தில் சூறாவளி புயலாக கரையை கடக்கும் வாய்ப்பு உள்ளதாகவும், இதனிடையே புயல் காரணமாக தமிழ்நாட்டில் அடுத்து வரும் 3 தினங்களுக்கு வட தமிழக கடலோர மாவட்டங்களிலும், உள்மாவட்டங்களில் சில இடங்களிலும் பரவலாக மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications