3 நாட்களாக சென்னையை மிரட்டிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. சத்தமில்லாமல் கரையை கடந்தது!
சென்னை: வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதுச்சேரி அருகே கரையை கடந்தது. புதுச்சேரி - ஆந்திரா நெல்லூர் இடையே காற்றழுத்த தாழ்வு மண்டலம், குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழந்து கரையை கடந்தது. 3 நாட்களாக சென்னையை மிரட்டிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை சத்தமில்லாமல் கரையை கடந்தது.
வடகிழக்கு பருவமழை துவக்கத்திலேயே தனது அதிரடி ஆட்டத்தை காட்டியுள்ளது. வழக்கமாக அக்டோபர் மூன்றாவது வாரத்திற்கு மேல்தான் வடகிழக்கு பருவமழை சூடுபிடிக்கும். ஆனால் இந்த முறை துவக்கத்திலேயே சென்னையை மிரட்டி விட்டது. இதற்கு காரணம் வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆகும்.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கன முதல் அதி கனமழை பெய்தது. இதனால், சென்னையில் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் உடனுக்கு உடன் வெள்ள நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். தொடர்ந்து கனமழை பெய்ததால் மக்கள் அச்சமடைந்தனர்.
தொடர்ந்து நேற்றும் அதி கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடப்பட்டதால் மக்கள் மேலும் அச்சமடைந்தனர். ஆனால் கூறியது போல பெரிய அளவில் மழை பெய்யவில்லை. இதனால், சென்னை வாசிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இந்த நிலையில் சென்னையை நோக்கி நகர்ந்துகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சத்தமின்றி கரையை கடந்துள்ளது.
கடந்த 3 நாட்களாக மிரட்டி விட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம், குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழந்து புதுச்சேரி - ஆந்திரா நெல்லூர் இடையே கரையை கடந்தது. நேற்று முன்தினம் (15-10-2024) காலை தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, மாலை 05.30 மணி அளவில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
இதன்பின்னர் நேற்று (16-10-2024) காலை 08.30 மணி அளவில், அதே பகுதிகளில், சென்னைக்கு கிழக்கு- தென்கிழக்கே சுமார் 320 கிலோமீட்டர் தொலைவிலும், புதுவைக்கு கிழக்கு- வடகிழக்கே சுமார் 350 கிலோமீட்டர் தொலைவிலும், நெல்லூருக்கு தென்கிழக்கே சுமார் 400 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டிருந்தது.
இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகம்- தெற்கு ஆந்திர கடற்கரை பகுதியில் புதுச்சேரிக்கும் நெல்லூருக்கும் இடையே சென்னைக்கு அருகில் இன்று அதிகாலை கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காற்றழுத்த தாழ்வு மண்டலம், குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழந்து இன்று காலை 7 மணியளவில் கரையை கடந்தது.












Click it and Unblock the Notifications