Cyclone Senyar: நவ.26-ல் சென்யார் புயல்! UAE வச்ச பேருக்கு அர்த்தம் என்ன தெரியுமா? ஓங்கி அடிக்குமோ!
சென்னை: வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் வங்கக் கடலில் வரும் 26ஆம் தேதி புயல் உருவாகும் நிலையில் அதற்கு சென்யார் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயலின் பெயருக்கு அர்த்தம் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
தமிழகத்திற்கும் தெற்கு ஆந்திராவுக்கும் பலனை கொடுக்கும் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த அக்டோபர் 16ஆம் தேதி இந்த பருவமழை தொடங்கிய நிலையில் மொந்தா எனும் புயல் உருவாகி அது ஆந்திர மாநிலத்தில் கரையை கடந்தது.

அதற்கு அடுத்து காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகி தமிழகத்தில் பரவலாக மழையை கொடுத்தது. இந்த நிலையில் 10 நாட்களாக ஓரளவுக்கு மழை குறைந்திருந்த நிலையில் தற்போது தென் மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.
இதில் வங்கக் கடலில் இரு புயல் சின்னங்கள் உருவாகியுள்ளன. தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நேற்று உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்று வரும் நவம்பர் 26 ஆம் தேதி புயலாக மாற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் உருவாகிறது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வரும் 26ஆம் தேதி தென் கிழக்கு வங்கக் கடலில் புயலாக உருவாக வாய்ப்புள்ளது.
அவ்வாறு புயலாக உருவாகும் நிலையில் அதற்கு சென்யார் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த பெயரை ஐக்கிய அரபு அமீரகம் வைத்துள்ளது. இந்த சென்யார் என்றால் அரபு மொழியில் சிங்கம் என பொருள். எனவே இந்த சிங்கம் தமிழகத்தை தாக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஓங்கி அடித்தால் ஒன்றரை டன் வெயிட்டுடா! என்ற டயலாக்தான் நினைவுக்கு வருகிறது. இது எங்கே கரையை கடக்கும் என்பது தற்போது தெரியவில்லை. ஓரிரு நாட்களில் தெளிவான முடிவுகள் கிடைக்கும்.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் நேற்று தென்கிழக்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது.
இது நாளை நவம்பர் 24-ந் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும்; இப்புயல் சின்னம் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவடையும். இது வலுவடைந்து புயலாக மாறும் போது, 'சென்யார்' என பெயர் சூட்டப்படும்.
இதனால் தமிழகத்தின் பல இடங்களிலும் புதுச்சேரி- காரைக்காலிலும் நவம்பர் 27-ஆம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர்,
நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications