இங்க பாருங்கோ..தூத்துக்குடியில் 'பெருமாள் கோவில் ஊர்வல' பஞ்சாயத்தில் நிர்மலா சீதாராமன் பேசியது என்ன?
தூத்துக்குடி: பெருமழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஶ்ரீ வைகுண்டம் பெருமாள் கோவில் ஊர்வல பாதை குறித்து பஞ்சாயத்து பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் வரலாறு காணாத பெருமழை கடும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த வெள்ள பாதிப்பு தொடர்பாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்த கருத்துகள் பெரும் சர்ச்சையாக வெடித்தன. தமிழ்நாட்டு வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது, அமைச்சர் உதயநிதியின் பாஷை சரியில்லை என்பது உள்ளிட்ட கருத்துகள் விமர்சனங்களை ஏற்படுத்தி இருந்தது.

இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி பகுதியில் வெள்ள பாதிப்புகளை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று நேரில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது ஶ்ரீ வைகுண்டம் பெருமாள் கோவில் பகுதிக்கும் சென்ற போது அங்கு 'ஒரு பஞ்சாயத்தில்' தலையிட வேண்டிய கட்டாயம் நிர்மலா சீதாராமனுக்கு ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோதான் சமூக வலைதளங்களில் தற்போது பகிரப்பட்டு வருகிறது.
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அந்த உரையாடல் வீடியோவில் பேசியதாக இடம் பெற்றிருப்பதாவது:

" இங்க பாருங்கோ.. அவர் சொன்னது காதில் விழுந்ததா? என்ன சொன்னாங்க?" என அதிகாரி ஒருவரிடம் கேட்கிறார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். அந்த அதிகாரி பதில் சொல்ல முயற்சிக்கிறார். அப்போது குறுக்கிட்ட அர்ச்சகர் ஒருவர், ;பிரம்மோற்சவத்தில் பெருமாளுக்கு பின்னாடி வரும் போது நம்மளே அந்த இடத்தில் மிதிப்பமா? என்கிறார்.
இதனைத் தொடர்ந்து பேசும் நிர்மலா சீதாராமன், பெருமாள் ஊர்வலமா வரும் போது அது வழியா வர்றார்.. பப்ளிக் டாய்லெட்டா இருக்கக் கூடிய அந்த ரோடை பின்புறமா இருக்கக் கூடிய அந்த விஷயத்தை அந்த தெருவை சுத்தப்படுத்தி கொடுங்கன்னு இந்த சாமி கேட்கிறார் என்றார்.
அப்போது ஒருவர், கோவில் கரையை உயர்த்தனும், சுற்றி வேலி போட்டுவிடலாம் என சொல்ல நிர்மலா சீதாராமன் அருகே இருந்த பாஜக எம்.எல்.ஏ, நயினார் நாகேந்திரன், எவ்வளவு செலவாகும் என கேட்கிறார்.

உடனே நயினார் நாகேந்திரனை இடைமறித்த நிர்மலா சீதாராமன், நீங்க ஏன் அதைப் பற்றி கவலைப்படுறீங்க.. கோவிலில் இவங்களுக்கு ரூ3,000 கொடுக்கிறதுக்கே...... ரேஷன் கடையில் அளந்து கொடுக்கிற மாதிரி பார்த்து கொடுக்கிறவங்க.. நிதி இருக்கும்.. இவங்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாது.. அதுக்கு ஒரு காரணம் இருக்கு. அந்த மாதிரி தெருவை ரிப்பேர் பண்றதுக்கு எல்லாம் அவங்களுக்கு ஒரு கஷ்டமும் இல்லை என நமட்டு சிரிப்புடன் சொல்கிறார்.
உடனே பொதுமக்களில் ஒருவர் ரூ30,000 கொடுக்க நான் தயாராக இருக்கிறேன் என்று சொல்ல சட்டென.. இருப்பா தம்பி.. உண்டியலில் பணத்தை போடாத.. எங்க கொடுக்கனுமோ கொடுத்துக்க என்கிறார் நிர்மலா சீதாராமன். இவங்க கிட்ட இருக்கிற பணத்தை வெச்சு செய்யுங்க. நான் ரொம்ப கிண்டலும் கேலியுமா பேசுறதா நினைக்காதீங்க.. பெருமாள் ஊர்வலம் வர்ற பாதையை சரி பண்ணி கொடுங்கன்னு அவங்களும் இவங்களும் சொல்றாங்க.. நீங்களும் நல்ல முறையில் செஞ்சு கொடுங்க என அதிகாரிகளிடம் சொல்கிறார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன். இந்த வீடியோதான் இப்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications