திருப்பூர் நகரில் ஒரே நாளில் 18 செமீ மழை வெளுத்தது! கோவை-சேலம் நெடுஞ்சாலையில் வாகனங்கள் ஸ்தம்பிப்பு!
திருப்பூர்: திருப்பூர் நகரத்தில் நேற்று இரவு கனமழை கொட்டித் தீர்த்தது. திருப்பூர் நகரில் ஒரே நாளில் 18 செ.மீ. மழை வெளுத்து வாங்கி இருக்கிறது. அவினாசியில் 14 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது. இதனால் தாழ்வான குடியிருப்பு பகுதிகள் வெள்ளத்தில் மிந்தன. ஈரோடு புறநகரில் கொட்டிய கனமழையால் கோவை- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் பல கிலோ மீட்டர் தொலைவுக்கு அணிவகுத்து நின்றன.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை பல பகுதிகளில் வெளுத்தெடுக்கிறது. சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் விடிய விடிய கனமழை பெய்தது. இதேபோல மேற்கு, தெற்கு மாவட்டங்களிலும் கனமழை வெளுத்திருக்கிறது. இந்த கனமழை அடுத்து வரும் நாட்களுக்கும் தொடரும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் கடந்த 24 மணிநேரத்தில் 14 செ.மீ. மழை கொட்டித் தீர்த்தது. மேற்கு மாவட்டமான திருப்பூர் மாவட்டம் திருப்பூர் நகரத்தில் ஒரே நாளில் அதாவது 24 மணிநேரத்தில் 18 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது.
திருப்பூரில் நேற்று இரவு 10 மணி முதல் இடி மின்னலுடன் கனமழை கொட்டியது. இந்த மழை விடிய விடிய தொடர்ந்தது. ஓயாத இந்த கனமழை காரணமாக திருப்பூர் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. திருப்பூர் ஆட்சியர் முகாம் அலுவலக பகுதியில் 16.7 செ.மீ மழை பதிவானது. அவிநாசியில் 14.1 செ.மீ மழை பதிவானது.
திருப்பூர் மாநகரில் இடைவிடாத கொட்டிய கனமழை காரணமாக காந்திநகர், மும்மூர்த்தி நகர் பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது. வேலம்பாளையம் உள்ளிட்ட இடங்களில் மரங்கள் சாலைகளில் முறிந்து விழுந்தன.
இதேபோல ஈரோடு மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் விடிய விடிய கனமழை வெளுத்தெடுத்தது. இந்த கனமழையால் ஈரோடு சுற்று வட்டாரங்களில் ஓடைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல இடங்களில் வெள்ள நீர் குடியிருப்புகளுக்குள் புகுந்துள்ளது. மேலும் கோவை- சேலம் தேசிய நெடுஞ்சாலையிலும் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகனப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதனால் பல கிலோ மீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலையில் அணிவகுத்து நிற்கும் நிலைமை உருவானது.












Click it and Unblock the Notifications