சென்னையை இரவில் குளிர்வித்த மழை.. இன்று தமிழகத்தில் எங்கெல்லாம் மழை பெய்ய வாய்ப்பு இருக்கு?
சென்னை: சென்னையில் நள்ளிரவில் பல்வேறு இடங்களில் கன மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து சென்னை நகரம் குளிர்ச்சியாக மாறியது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தமிழகத்தில் இன்று முதல் 25 ஆம் வரை பரவலாக மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என சென்னை வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை உள்பட வட மாவட்டங்களில் அவ்வப்போது பெய்த திடீர் மழையால் வெப்பம் தணிந்தது. அதேவேளையில், தென் மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவி வருகிறது. சென்னையில் நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பெய்தது.

சென்னையில் இரவு மழை: சென்னை மற்றும் புறநகரில் நேற்று இரவு பல்வேறு இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் தாழ்வான சாலைகளில் தண்ணீர் தேங்கியது. சென்னை நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், வள்ளுவர் கோட்டம், அடையாறு, திநகர், சைதாப்பேட்டை, திருவான்மியூர், கிண்டி, ராயப்பேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஆவடி, செங்குன்றம் உள்ளிட்ட பல இடங்களில் மழை வெளுத்து வாங்கியது.
ஆவடி, திருமுல்லைவாயல், பட்டாபிராம், திருநின்றவூர், பூந்தமல்லி, பாடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் ஒருசில இடங்களில் மழைநீர் தேங்கியது. திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் அதிகபட்சமாக 10.8 செமீ மழை பதிவாகியுள்ளது. செங்குன்றத்தில் 6 செமீட்டரும், சோழவரம் 5.5 செ.மீட்டரும், திருவள்ளூரில் 4.5 செ.மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.
மழை தொடரும்: சென்னையில் நேற்று பகல் வேளையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. ஆனல் நள்ளிரவில் பெய்த திடீர் மழையால் வெப்பம் தணிந்தது. சென்னை உள்பட வட மாவட்டங்களில் அவ்வப்போது திடீர் மழை பெய்து வரும் நிலையில், தமிழகத்தில் இன்று முதல் வரும் 29 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது:-
காற்றழுத்த தாழ்வு பகுதி: மத்திய வங்க கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இதனால் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
29 ஆம் தேதி வரை: 27 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னையில் மழைக்கு வாய்ப்பு: அதிகபட்ச வெப்ப நிலை 35 டிகிரி செல்சியஸை ஒட்டியும் குறைந்த பட்ச வெப்ப நிலை 27-28 டிகிரி செல்சியஸ் வரையும் ஒட்டி இருக்க கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஒரளவு மேக மூட்டத்துடன் இருக்கும். ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது" என்று தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications