காலையிலேயே வெளுக்கும் மழை.. அடுத்த ஒரு மணி நேரம்.. சென்னை உள்பட 18 மாவட்டங்களுக்கு அலர்ட்
சென்னை: சென்னையில் இன்று காலையில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வரும் நிலையில் காலை 10 மணி வரை தமிழகத்தில் 18 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, ராமநாதபுரம், ஈரோடு, சேலம், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கோடைக்கால சீசன் நிலவினாலும், பெரும்பாலான நாட்களில் மழையே பெய்து வருகிறது. நேற்று தமிழகம் முழுக்க பல்வேறு இடங்களில் மழை பெய்தது. கள்ளக்குறிச்சி, நாமக்கல், கிருஷ்ணகிரி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது.

சென்னையில் மழை
அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியத்தில் 14 செமீ மழை பெய்துள்ளது. கள்ளக்குறிச்சி கடையநல்லூரில் 12 செமீ மழையும், நாமக்கல் 11.8 செமீ மழையும் பதிவாகியுள்ளது. இன்று காலையிலும் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்தது. குறிப்பாக தலைநகர் சென்னையில் இன்று காலை மழை கொட்டியது.
சென்னையில் இன்று காலை 9 மணியளவில் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், கோயம்பேடு, திருவல்லிக்கேணி, அசோக்நகர், வடபழனி, ஈசிஆர், ஓஎம்ஆர் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்கிறது. இந்நிலையில் இன்று காலை 10 மணி வரை தமிழகத்தில் 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.
18 மாவட்டங்கள்
வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் இன்று காலை 10 மணி வரை சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இதேபோன்று இன்று காலை 10 மணி வரை நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், ஈரோடு, தென்காசி மற்றும் நெல்லை ஆகிய 9 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. இதேபோல் இன்று காலை 10 மணி வரை புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சை, நாகை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இன்று 8 மாவட்டங்களில் கனமழை
இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கரூர், நாமக்கல் மற்றும் திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிகக் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
வரும் மே.21 முதல் 24ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications