கடல் பக்கம் போகாதீங்க! தென் தமிழ்நாடு, கேரளாவிற்கு திடீரென வந்த "ரெட் அலர்ட்" வார்னிங்.. என்னாச்சு
சென்னை: தென் தமிழ்நாடு மற்றும் கேரள கடலோர பகுதிகளுக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் ரெட் அலர்ட் எச்சரிக்கையை தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் விடுத்துள்ளது. வெயிலுக்கோ.. மழைக்கோ இந்த ரெட் அலர்ட் விடுக்கப்படவில்லை. கள்ளக்கடல் நிகழ்வுக்காக ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டு இருக்கிறது.
கேரளா மற்றும் தென் தமிழகத்தின் கடலோர பகுதிகளுக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் ரெட் அலர்ட் எச்சரிக்கையை மத்திய அரசு விடுத்துள்ளது. கோடை காலத்தில் வெயில் உக்கிர தாண்டவம் ஆடிக்கொண்டுக்கும் சூழலில் ரெட் அலார்ட் ஏன் என பலருக்கும் ஆச்சர்யம் ஏற்படலாம்..

கள்ளக்கடல் எச்சரிக்கை: அதீத வெப்பத்திற்காக ஒருவேளை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு இருப்பதாக நீங்கள் நினைத்தால் அது தவறு.. ரெட் அலர்ட் எச்சரிகையானது கடலோர பகுதியில் வசிக்கும் மக்களுக்கு கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதாவது கள்ளக்கடல் என்ற எச்சரிக்கையை கடல் தகவல் சேவைகளுக்கான இந்திய தேசிய மையம் (INCOIS) மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் இணைந்து விடுத்துள்ளன.
கள்ளக்கடல் என்றால் என்ன?: அதென்ன கள்ளக்கடல் என்ற சந்தேகம் வரலாம்... எவ்விதமான அறிகுறிகளும் இன்றி திடீரென கடல் சீற்றம் அடைவது, 'கள்ளக்கடல்' நிகழ்வு என்று சொல்லப்படுகிறது. அதாவது, எந்த முன்னறிவுப்பும் இன்றி திருடன் போல எதிர்பாராத தருணத்தில் வருவதால், கேரள மக்கள் இதை, கள்ளக்கடல் என அழைக்கிறார்கள்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை: இந்த கள்ளகடல் நிகழ்வு இரண்டு நாட்களுக்கு தென் தமிழக கடலோர பகுதி மற்றும் கேரளாவில் ஏற்படலாம் என்பதால் மீனவர்கள் உஷாராக இருக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை அதிகாலை 2.30 முதல் ஞாயிற்றுக்கிழமை இரவு 11.30 வரை திடீரென கடல் சீற்றம் ஏற்படும் என்றும் இதனால், ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்: மீனவர்கள் தங்கள் படகுகளை துறைமுகத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் கேரள பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. மீனவர்கள் மட்டும் இன்றி கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாகவும் தேவையான முன்னெச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்று அந்த அலர்ட்டில் தெரிவிக்கபட்டுள்ளது.
சென்னையில் கோடை மழை இப்போதைக்கு இல்லை.. உள் மாவட்டங்களில் எப்படி? ஜில் அப்டேட் கொடுத்த பாலச்சந்திரன்
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் இன்கோயிஸ் இணைந்து ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்து இருப்பதாக கேரள பேரிடர் மேலாண்மை ஆணையம் விடுத்துள்ளது. இது தொடர்பாக கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் கூறியிருப்பதாவது:- கடலில் சீற்றம் அதிகமாக இருக்கும் என்பதால் அபாயகரமான பகுதிகளில் இருந்து மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
கடற்கரைக்கு மக்கள் செல்ல வேண்டாம்: கடல் சீற்றத்தில் படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்ளாமல் இருக்க உரிய இடைவெளியுடன் படகுகளை நிறுத்தி வைக்க வேண்டும். வலைகள் உள்பட மீன்பிடி கருவிகளின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும். கடற்கரைகளுக்கு மக்கள் செல்வதை தவிர்க்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.
கடல் தகவல் சேவைகளுக்கான இந்திய தேசிய மையம் கூறுகையில், "இந்திய பெருங்கடலில் தென் பகுதிகளில் வீசும் பலத்த காற்று காரணமாக கடலில் திடீரென சீற்றம் காணப்படும். எந்த வித அறிகுறிகளும், எச்சரிக்கையும் இன்றி திடீரென கடல் சீற்றம் ஏற்படும்" என்று தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications